ஆதி அந்தம்-3:
கண்களை மூடி எந்த ஒரு அசைவும் இல்லாமல் படுத்திருந்தவனை பார்த்தவளுக்கு மனம் பொறுக்கவில்லை.. "ஏன் ஆது கிளம்பி வந்த..?"
"நான் தான் வரவேண்டாம் என்று சொன்னேனே.. எப்பொழுதும் என் பேச்சை கேட்க மாட்டியா..? உன்னை இந்த நிலைமையில் பார்த்த பிறகும் நான் எப்படி உயிரோட இருக்கேன்.. என்னை மன்னிச்சிடு ஆது.. நீ இப்படி படுத்த படுக்கையாய் கிடக்குறதுக்கு காரணம் நான் தான்.."
"நான் மட்டும் அங்கிருந்து வரவில்லை என்றால் நீயும் இங்கு வந்துருக்க மாட்ட.. உனக்கு இதுபோல எதுவும் ஆகியிருக்காது.. எல்லாம் என்னால தான்" என்று தன்னை திட்டியவாறே அவனை கண்களால் வருடியவள் அந்த நர்ஸ் அழைக்கவும் கண்களை துடைத்து கொண்டு அவருடன் வெளியே வந்தாள்..
வெளியே வந்தவர்களை ஒரு நிமிடம் "நில்லுங்கமா" என்று கேட்ட கம்பீரக் குரலில் இருவரும் "ஐயோ! மாட்டிக்கிட்டோம்" என்று உள்ளுக்குள் நடுங்கியவாறே திரும்பி பார்த்தனர்.
இருவரும் எங்கே கண்டு பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் உள்ளுக்குள் நடுங்கி கொண்டே திரும்ப அச்சு அசல் ஆதியைப் போலவே முக ஜாடை உடைய ஒருவர் தான் அழைத்தார்..
அவரைப் பார்த்ததுமே மிருக்கு புரிந்து போனது.. தன்னவனின் தகப்பன் தான் என்று.. இருவரிடமும் நெருங்கியவர் "என் பிள்ளைக்கு எப்படிமா இருக்கு.. அவன் எப்போ கண் முழிப்பான்?" என்று பரிதவிப்புடன் கேட்டார்..
அவர் கேட்க கேட்க இவளுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது, "உங்க பையனுக்கு எதுவும் இல்லை.. என் ஆதுக்கு எதுவும் ஆக விடமாட்டேன்" என்று கத்தி சொல்ல வேண்டும் போல் தோன்றியது.. ஆனால் சூழ்நிலை கருதி அடக்கிக் கொண்டாள்..
"எங்களால் இப்பொழுது எதும் சொல்ல முடியாது சார்.. டாக்டர் வந்து செக் பண்ணிட்டு தான் சொல்லுவார்" என்று கூறிய நர்ஸ் "இப்போ டாக்டர் வருகிற நேரம் தான் சார்" என்று விட்டு ஒரு அறை எண் கூறி அங்கு வேலை இருப்பதாக சொல்லி மிருவை இழுத்து கொண்டு செல்ல "நர்ஸ்!" என்ற குரல் அவர்களை தடுத்து நிறுத்தியது..
தாமஸ் ஆதித்தனின் நண்பன் அந்த மருத்துவமனையில் தான் பணிப்புரிகிறான்.. தன் நண்பனின் நிலைமையை காண வந்தவன் தூரத்தில் வரும் பொழுதே மிருவை பார்த்து விட்டான்..
"இந்த பொண்ணு எப்படி இங்க..? அதுவும் நர்ஸ் ட்ரெஸ்ல?" என்று யோசித்து கொண்டே வந்தவன் அவர்கள் செல்லவும் அழைத்திருந்தான்..
"ஐயோ! போச்சு என்னால இந்த அக்காவுக்கு பிரெச்சனை" என்று நடுங்கி கொண்டே திரும்ப சத்தியமாக அங்கு தாமஸை எதிர்பார்க்கவில்லை.. அவனை கண்டதும் அடக்கி வைத்திருந்த அழுகை பொங்கி கொண்டு வர அதை கண்டு கொண்டவன் உடனே "நர்ஸ் கொஞ்சம் உள்ள வாங்க பேஷண்ட்ட செக் பண்ணனும்" என்று அழைத்தான்..
மிருவை தவிர்த்து விட்டு இந்த நர்ஸ் உள்ளே செல்ல அவரை திரும்பி பார்த்தவன் "நீங்க உங்க அடுத்த டியூட்டியை பாருங்க சிஸ்டர்.." என்றவன் மிருவை நோக்கி "நீங்க வாங்க சிஸ்டர்" என்று விட்டு உள்ளே செல்ல மிரு அந்த நர்ஸின் கையில் ஒரு அழுத்தம் கொடுத்தவள் உள்ளே சென்றாள்..
உள்ளே வந்தவளிடம் "நீ எப்படிம்மா இங்க?" என்று கேட்க "நான் டிவில பார்த்து தான் அண்ணா வந்தேன்.. ஒன்னும் ஆகாது தானேண்ணா.. ப்ளீஸ் அண்ணா எப்படியாவது என் ஆதுவ எனக்கு திருப்பி கொடுத்துடுங்க" என்று கெஞ்சிக் கேட்டாள்..
"இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாதுமா.. கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன்ல தான் இருக்கான்.. நான் அப்போவே சொன்னேன் எதா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு பண்ணுடான்னு.. நான் சொன்னதை இவன் கேட்கவே இல்லை" என்று தன் நண்பனை பார்த்தவாரு கூறினான்..
"என் ஆதுக்கு ஏதும் ஆகாது அண்ணா.. நீங்க எங்க விஷயத்தை வெளியே இருக்குறவங்க கிட்ட சொல்லாதீங்க.. ஆதி நல்லா ஆகட்டும்.. இனிமே அவனை விட்டு நான் போக மாட்டேன்.." என்று கூறினாள்..
(இவள் நினைத்து விட்டால் நடந்து விடுமா.. விதி வலியதல்லவா..)
"அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க.. நான் ஆதி இங்க இருக்குற வரை இது போல நர்ஸ் ட்ரெஸ்ல இருக்கேன்.. இப்போ வந்தாங்களே அந்த அக்காவை ஏதும் சொல்லாதீங்க" என்று கேட்கவும் "ஹிம்ம் சரிம்மா நான் அவங்களுக்கு இங்க டூட்டி போட சொல்றேன்" என்று விட்டு சென்றான்.
அதே நேரம் "ஆதி.. ஆதி கண்ணா.." என்று தூக்கத்தில் இருந்தவர் எழுந்து கதற அவர் சத்தம் கேட்டு உள்ளே வந்தவன் "ஒன்னும் இல்லை அத்தை.." என்று அவர் முதுகை வருடி கொடுத்தவன் பக்கத்தில் இருந்த மேசையில் இருந்து தண்ணீரை எடுத்து அவரிடம் நீட்டினான்..
அதனை வாங்கி பருகியவரின் கைகள் கண்ட கனவில் நடுங்கியது.. அவரிடம் இருந்து காலி டம்ளரை வாங்கி வைத்தவன் "வாங்க அத்தை சும்மா வெளியே போய்ட்டு வரலாம்.. உள்ளேயே இருந்தா ஒரு மாதிரி இருக்கும்." என்று அவரை வெளியே தோட்டத்திற்கு அழைத்து வந்தான்..
"மாறா மதுவும் அனுவும் வந்துட்டாங்களா… நான் தூங்கி ரொம்ப நேரம் ஆயிடுச்சா..?" என்று கேட்டவர் "என்னை எழுப்பிருக்கலாம் இல்லையா.. இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்" என்று கண்களை தேய்த்து விட்டவர் அங்கிருந்த கல் மேடையில் சென்று அமர்ந்தார்..
அவர் அமர்ந்ததும் அவர் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டவன் அவர் கையை எடுத்து தன் தலையில் வைத்து கோத சொல்ல அவர் ஏதோ சிந்தனையில் இருக்க "என்ன அத்தை ஏதோ யோசனையில் இருக்கீங்க போல" என்று கேட்கவும்
"ஹிம்ம் இந்த மடிக்கு சொந்தக்காரன் நீ இல்லைன்னு என் மனசு சொல்லுது மாறா" என்று கூறவும் "எனக்கு தான் இந்த மடி சொந்தம்.. யாருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் அத்தை" என்று கூற சிரித்தவர் அவன் தலையை கோதி கொடுக்க "ஏன் அத்தை உனக்கு எல்லாம் நியாபகம் வந்துடுச்சுன்னா எங்களை விட்டுட்டு போய்டுவியா?" என்று கேட்டான்.
"மாறா இதுக்கு நான் பதில் சொல்லி தான் உனக்கு தெரியனும்னு இல்லை.. ஒருவேளை எனக்கு எல்லாம் நியாபகம் வந்தால் ஏதோ நினைத்தவர்" தலை வலிக்கவும் தலையை பிடிக்க "நீ எதையும் யோசிக்க வேண்டாம் அத்தை விடு.."
"வா அத்தை மதுவும் அனுவும் வந்துருவாங்க.. வந்ததும் சாப்பாட தான் பார்ப்பாளுங்க.. ஒன்னும் இல்லைன்னா ஒரு ஆட்டம் ஆடுவாங்க.. சும்மாவே ஆடுவாளுங்க இதுல நாம சலங்கைய வேற கட்டிவிட்டோம்ன்னு வச்சுக்கோ அவ்வள்வு தான்" என்று கூற "யாரு அழைக்க போயிருக்கா அப்பாவா இல்ல நான் பெத்து வச்சுருக்கேனே அவனா?"
"நீ பெத்தது தான் அத்தை அர்ஜுன் தான் போயிருக்கான் எப்படியும் மூணும் அடிச்சுக்கிட்டு வர லேட் ஆகும்.. நீ அதுக்குள்ள சமைச்சுடு நான் அப்பாவ பார்த்துட்டு வரேன்."
"ஹிம்ம் சரி டைம் ஆச்சு நீ போய் அப்பாவ கூட்டிட்டு வா நான் சமைச்சு வைக்கிறேன்" என்று விட்டு எழுந்தார்..
தாமஸ் அந்த நர்ஸிடம் பேசியவன் மிருவிடம் "நீ பகல் இங்க இருந்துக்கோம்மா.. பட் நைட் கிளம்பிடு.. சந்தேகம் வர வாய்ப்பிருக்கு" என்று கூறியவன் "பார்த்துக்கோங்க" என்று நர்ஸிடம் கூறிவிட்டு சென்றான்..
இங்கு வெளியில் தன் அண்ணனிடம் சரளா "அண்ணா இப்படி நம்ம ஆதுவை பார்க்க கஷ்டமா இருக்கு.. என்னால தாங்க முடியல அண்ணா நான் எதுக்கும் போய் நம்ம ஜோசியரை பார்த்துட்டு வந்துடுறேன்" என்றவர் கிளம்பிவிட்டார்..
மாலை நேரம் ஆனதும் அடுத்த ஷிப்ட் நர்ஸ் வரவே ஆது அருகே சென்றவள் "ஆது நான் போய்ட்டு காலையிலே வந்துடுறேன் பத்திரமா இரு.. சீக்கிரம் வரேன்" என்று விட்டு சுற்றும் முற்றும் பார்த்தவள் அவன் காய்ந்து போன இதழில் தன் இதழை பதித்தவள் தன்னவனிடம் இருந்து மனமே இல்லாமல் விலகினாள்..
"ஆது நீ எப்பொழுதும் கேப்பியே இப்போ பாரு நீ கேட்காமலே நானே கொடுத்துட்டேன்.. நீ சீக்கிரமா எழுந்து வா ஆது இன்னும் நிறைய இருக்கு" என்று நெற்றியில் பிள்ளை முத்தம் இட்டவள் "பாய் ஆது.."
"எனக்காக சீக்கிரம் எழுந்து வா ஆது.. அது ஏதோ கோபத்துல வந்துட்டேன் ப்ளீஸ் வந்துடு" என்று கன்னத்தில் முத்தமிட்டவள் கிளம்பினாள் தன் வீட்டிற்கு..
ஆதி அந்தமாகும்…
4
வீட்டுக்கு வந்தவள் குளித்து விட்டு சாமியறையில் விளக்கேற்றி "கடவுளே என் ஆது எனக்கு வேணும்.. அவனை நல்ல படியாக என்கிட்ட குடுத்துடு, இனி அவனை விட்டு நான் பிரிய மாட்டேன் என்கிட்ட குடுத்துடு" என்று வேண்டியவள் தன் தம்பி தங்கைகளை பார்க்க சென்றாள்.
இனியவன் "அக்கா மாமா அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதா சொன்னாரே, எப்போ வராரு?" என்று கேட்க என்ன சொல்வது என்று யோசித்தவள் "இப்போ கொஞ்சம் பிசியாக இருக்கார் டா அதான், எல்லா வேலையும் முடிச்சுட்டு அவரே வந்து அழைச்சுட்டு போறதா சொன்னார்" என்று மென்று முழுங்கினாள்.
மிரு ஒரு மாதிரி திக்கி திணறுவதை சந்தேகமாக பார்த்தவன் ஒன்றும் பேசாமல் தலையை ஆட்டி விட்டு சென்று விட்டான்.
அவள் வீட்டில் யாருக்கும் ஆதிக்கு விபத்து நடந்தது பற்றி தெரியவில்லை. அவன் மீண்டு வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் அவள் மறைத்து விட்டாள்.
மிதுனா ஆராதனா இரட்டையர்கள் "அக்கா மாமாவை வரும் பொழுது சாக்லேட் வாங்கிட்டு வர சொல்லு" என்று கூற ஆதவன் "அக்கா எனக்கும்" என்று அவர்களுடன் போட்டி போட்டு கூற "மாமா எல்லாருக்கும் நீங்க கேட்டதை வாங்கிட்டு வருவார் இப்போ போய் வீட்டு பாடத்தை முடிங்க" என்று அனுப்பி வைத்தாள்.
தன்னறைக்கு வந்தவள் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலையில் வந்து நின்றவனை பற்றி தான் நினைத்து கொண்டிருந்தாள்.
உன்னை விட்டுட்டு என்னால் அங்கு இருக்க முடியலை மினி பேபி.. ஐ மிஸ் யூ என்று தன்னை அணைத்தவனின் ஸ்பரிசம் இன்னும் உணர்கிறாள்.
என்னை மிஸ் பண்ணியா ஆது நானும் நீ இல்லாத இந்த ஒரு வாரமா நான் நானா இல்லை.. எனக்கும் நீ வேணும் ஆது நீ இல்லாமல் என்னாலும் இருக்க முடியாது என்று மானசீகமாக அரற்றி கொண்டிருந்தாள்.
இரண்டு நாட்கள் முன்பு..
அந்த அதிகாலை பொழுதில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் 'மிரு என்கிற மிருணாளினி…யாரோ மிரு மிரு' என்று கூப்பிடும் சத்தம் கேட்க துயில் கலைந்து எழுந்தாள்…
அங்கும் இங்கும் திரும்பி பார்த்தவள் யாரோ கூப்பிட்டது போல இருந்ததே என்று யோசித்தவள் பின்பு அதனை விட்டு விட்டாள்.
சிறிது நேரம் மெத்தையில் அப்படியே அமர்ந்திருந்தவள் தனக்கு எதிரில் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்..
இரவு அழுததின் பலனாக கன்னத்தில் கண்ணீர் கரையோடு வெகு நேரம் தூங்காமல் இருந்ததால் கண்களில் சிவப்பேறி இருக்க தன்னை பார்த்தவள் விரக்தியாக சிரித்துக் கொண்டாள்..
இப்படி ஒவ்வொரு நாளும் அழுது கரையுறதுக்கு அவன்கிட்டையே போயிடலாமே எதுக்கு இந்த அழுகை எதுக்கு இந்த சோகம் என்று அவள் மனசாட்சி கேள்வி கேட்டது.
அவனுக்கு தான் நான் வேண்டாமே அவன் ஆரம்பத்துலயே என்னை மூணு மாசம் காண்ட்ராக்ட் போட்டு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டான்.
மூணு மாசம் தான் முடிஞ்சு போச்சே அவ்ளோதான் அவனுக்கும் எனக்குமான பந்தம்.. எல்லாம் முடிஞ்சி போச்சு.. அப்படி என் மேல அக்கறை இருக்குறவனா இருந்தா நான் வந்து ஒரு வாரம் ஆகுது ஒரு போன் கால் இல்ல..
ஒழிஞ்சது கழிசடை என்று நினைச்சிருப்பான் என்று விரக்தியாக நினைத்தவளுக்கு அவனின் அணைப்பும் தன்னை இந்த மூன்று மாதமாக கண்ணின் மணிபோல் பார்த்து கொண்ட அவனின் பாங்கும் அவளை வெகுவாக ஈர்த்தது.
ஆது என்னை உனக்கு பிடிக்காதா அதான் நான் போனது தெரிஞ்சும் இங்க வராம இருக்கியா.. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியலையே ஆது.
எங்கு பார்த்தாலும் உன் முகம் தான் தெரியுது.. நீ என்னை கட்டி பிடுச்சு உனக்குள்ள வச்சுப்பியே அது போல இனிமே கட்டிபிடிக்க மாட்டியா ஆது..
நான் எவ்ளோதான் முகம் சுழுச்சாலும் வேணும்னே என்னை சீண்டவே முத்தம் கொடுப்பியே இனி அந்த மாதிரி நடக்காது தானே ஆது என்று அவன் தன்னுடன் இருந்த ஒவ்வொரு தருணமும் அவளுக்கு நியாபகம் வந்து அவளை வதைத்தது.
சிறிது நேரம் அப்படியே இருந்தவள் நேரம் ஆவதை உணர்ந்து முகத்தை தண்ணீர் கொண்டு கழுவி விட்டு தன் அறையை விட்டு வெளியில் வந்தாள்.. தம்பி தங்கைகளின் அறையைப் பார்க்க அவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தனர்…
வீட்டை விட்டு வெளியில் வந்தவள் அருகில் இருந்த கல் மேடையில் கால்களைக் குறுக்கி அதில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அமர்ந்தாள்..
அங்கு அடித்த சிலுசிலுவென காற்றுக்கு மீண்டும் தூக்கம் வருவது போல இருக்க கண்களை மூடியும் திறந்ததுமாக இருக்க ஏதோ உள்ளுணர்வு உந்த நிமிர்ந்து பார்த்தவள் பார்த்த படியே இருந்தாள்..
எங்கே கண்களை சிமிட்டினால் அவ்வுருவம் கலைந்து விடுமோ என்று அந்த உருவத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்…
அவ்வுருவத்தை பார்த்து கொண்டே இப்போ கூட பாரு ஆது நீ எனக்கு முன்னாடி நின்னுட்டு என்னையே பார்க்கிறது போல இருக்கு என்று வாய்விட்டு கூறினாள்.
அந்த உருவம் தன்னை மிரு என்று அழைத்து நெருங்கவும் நினைவுக்கு வந்து அதிர்ந்து எழுந்தவள் ஸ்தம்பித்து நின்றாள்..
ஒரு வார தாடியுடன் பயணம் செய்ததில் கலைத்து போய் இருந்தவனை பார்த்து இளகிய மனதை இழுத்து வைத்து முகத்தில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் "எதுக்கு சார் இங்கே வந்தீங்க..?"
"மூணு மாதம் காண்ட்ராக்ட் முடிஞ்சிப் போச்சே சார் அப்புறம் எதுக்கு இங்க வந்துருக்கீங்க?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே மிருவின் தம்பி தங்கைகள் இவனை கண்டதும் 'மாமா' என்று கூவிக் கொண்டே இவனை நோக்கி ஓடி வந்தனர்..
அவனை அணைத்துக் கொண்டு "என்ன மாமா நீங்க வர ஒரு மாதம் ஆகும் என்று அக்கா சொன்னா.. ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ள வந்து நிக்குறீங்க.." என்றான் கடைக்குட்டி ஆதவன்.
"டேய் மாமாவ விடுடா டிராவல் பண்ணி வந்ததுல டையர்டா இருப்பாரு, நீங்க உள்ள வாங்க மாமா" என்று அழைத்தான் இனியவன்.
"வந்தவரை உள்ளே கூப்பிடனும்னு கூட வா தெரியாது.. இன்னும் தூக்கம் கலக்கம் போகலையா?" என்று தன் தமக்கைக்கு கொட்டு வைக்கவும் தவரவில்லை..
அதனை கேட்டு கொண்டிருந்தவனுக்கு சிரிப்பு வந்தது போலும்.. அவன் கண்கள் மட்டும் சிரிக்க அவன் என்னை திட்டுனதும் உனக்கு அவ்ளோ சிரிப்பா இருக்கா என்று அவனை முறைத்து பார்த்தாள்.
அவள் முறைப்பதை பார்த்ததும் ஆஹா வேதாளம் முருங்கை மரம் ஏறுது என்று நினைத்து கொண்டு அவள் பக்கம் வந்தான்.
(ஏற்கனவே வேதாளம் முருங்கை மரம் எறிடுச்சு தம்பி)
அவள் அருகில் வந்தவன் அவளுக்கு மட்டும் கேட்பது போல் சிரித்து கொண்டே என்னடி மாமன அப்படி முறைச்சு பாக்குற.. மூடு ஏறுதுள்ள மாமனுக்கு இதே நம்ம ரூமில் பார்த்தா கூட நான் என் பாணியில் பதில் சொல்லியிருப்பேன்..
இங்க ஒன்னும் பண்ண முடியாது மினி பேபி.. இதுல ஒரு வாரம் காஞ்சி போய் வந்துருக்கேன்.. நீ இப்படி பார்த்து வச்சு அப்பறம் எனக்கு மூடேறி சின்ன பிள்ளைங்க முன்னாடி உன் மேல பாயவச்சுடாத என்று அவளிடம் பேசிக்கொண்டிருந்தவனை
"மாமா நான் கேட்டது வாங்கிட்டு வந்தீங்களா" என்று கேட்டாள் ஆராதனா அவள் கேட்டதும்" மாமா சாக்லேட் வாங்கிட்டு வந்தீங்களா?" என்று கேட்டாள் மிதுனா..
"ஏய் மாமாவ விடுங்க உள்ள வரட்டும்" என்று அதட்டினான் இனியவன்..
"உள்ள வாங்க மாமா" என்று அழைக்கவும் அவனோ மிருவின் முகத்தைப் பார்த்தான் "உள்ளே போங்க" என்று முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் கூறியதும் அவளைக் ஒரு நொடிக் கூர்ந்து பார்த்தவன் அவர்களுடன் உள்ளே சென்றான் ஆதித்தன்.
அனைவரும் அவனுடன் அமர்ந்து அரட்டை அடிக்கவும் தான் மட்டும் தனித்தீவில் தனித்து இருப்பது போல் உணர்ந்தவள்… நேரம் செல்வதை உணர்ந்து தன் தம்பி தங்கைகளிடம் சென்று "டைம் ஆச்சு போய் எல்லாரும் கிளம்புங்க ஸ்கூல் காலேஜ்க்கு …நான் போய் சமைக்கிறேன் ம்ம் கிளம்புங்க" என்று அவர்களைக் கலைத்து விட்டு சமயலறைக்குள் புகுந்து கொண்டாள்..
ஆதி அந்தமாகும் ...