ஆதி அந்தம் - 1

 



1


"வணக்கம், இன்றைய முக்கியச் செய்திகள்.. இன்று காலை ஒன்பது மணி அளவில் ஒ.எம்.ஆர் சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேராக மோதி கோர விபத்து நடந்தேறியுள்ளது.."



"நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளமாக நொறுங்கியதில் உள்ளே இருந்த நபர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.."


"அதில் இருந்த நபர் பிரபல தொழிலதிபர் வெங்கடேசன் மகன் ஆதித்தன் என்பது தெரியவந்துள்ளது.. இது விபத்தா? அல்லது கொலை முயற்சியா? என்பதை காவல் துறையினர் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.."


"விபத்து நடந்த இடத்தின் நேரடி காட்சிகள் இதோ.." என்று அந்த செய்தி வாசிப்பவர் அவர் பாட்டுக்கு சொல்லி கொண்டே போக.. இங்கு அப்பொழுது தான் தன் தம்பி தங்கைகளை அவரவர் ஸ்கூலுக்கும் காலேஜ்ஜிற்கும் அனுப்பி வைத்து குளித்து விட்டு வந்தவள் தலையில் இடியென இறங்கியது அந்த செய்தி…


ஆதித்தன் என்ற பெயரை கேட்டதுமே அவளுக்கு தன் இதயம் துடிப்பை நிறுத்தியது போலானது.


தன் நெஞ்சில் கை வைத்து கொண்டு ஹாலில் ஓடிக்கொண்டிருக்கும் டிவியை பார்க்க.. அங்கு விபத்து நடந்த இடத்தில் ஆதித்தனை காரிலிருந்து வெளியே எடுத்து ஆம்புலன்ஸில் ஏற்ற, அவன் கை கீழே தொங்கவும் "ஆது!!" என்று கத்தினாள்..


அந்த செய்தியை கேட்டதும் அவள் உலகமே இருண்டு போனது.. "ஐயோ! போச்சு.. எல்லாம் போச்சு.. ஆது ப்ளீஸ் என்னை விட்டு போய்டாத.. நீ இல்லாம என்னால இருக்க முடியாது.." என்று தன் தலையில் அடித்துக் கொண்டு கதறி கொண்டே "கடவுளே! எங்க அம்மா அப்பாவை தான் என்கிட்ட இருந்து பிரிச்சிட்ட, என் ஆதுவை என்கிட்ட இருந்து பிரிச்சுடுடாத.."


"உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன்.. ஆதுக்கு ஒன்னும் ஆகாம பார்த்துக்கோ ப்ளீஸ் கடவுளே.." என்று வேண்டியவள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டே இருந்தாள்..


அவளுக்கு இப்பொழுது என்ன செய்வது எங்கு சென்று விசாரிப்பது என்று எதுவும் புரியவில்லை. அவளுக்கு தன் நிலையை நினைத்து அழுகையாய் வந்தது.


நான் இப்போ எப்படி ஆது உன்கிட்ட நெருங்க முடியும். இப்போவே உன்னை பார்க்கணும் போல இருக்கு ஆனால் என்னன்னு சொல்லி நான் உன்னை நெருங்குவேன்.


 உனக்கும் எனக்குமான உறவு என்னன்னு யாராவது கேட்டா நான் என்ன சொல்லுவேன் என்று தன் நிலையை நினைத்து அழுது கரைந்தாள்.


தொலைக்காட்சியில் அவனது கைகள் கீழே தொங்கியதே அவள் கண்முன் வர அந்த கைகளுக்குள் தான் இருந்த தருணங்களும் நியாபகம் வந்து தொலைத்தது…


கடவுளிடம் ஆயிரமாவது முறையாக அவனுக்கு ஏதும் ஆக கூடாது என்று வேண்டியவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை..


"ஆது! நீ கூப்பிட்டப்போவே நான் வந்துருக்கணும்.. நான் தான் காரணம் இதுக்கெல்லாம் என்னை மன்னிச்சிடு, ஆது ப்ளீஸ் என்னை விட்டு பிரிஞ்சி போய் என்னை தண்டிக்காதே.."


"என் கூடவே இருந்து என்னை என்ன வேணாலும் செஞ்சுக்கோ.. நான் எதுவுமே உன்னை சொல்ல மாட்டேன்.. தயவு செய்து என்கிட்ட வந்துடு ஆது" என்று அவனிடம் மானசீகமாக மன்றாடியவள் "இப்போ நீ எந்த ஹாஸ்பிடல்ல இருப்பேன்னு கூட எனக்கு தெரியலையே.."


"இப்போ நான் என்ன பண்ணுவேன் ஆது நான் உன்னை இப்போவே பார்க்கணுமே.." என்று தான் பாட்டுக்கு பேசியவள் வெளியில் பாட்டியின் குரல் கேட்கவும் தன் அறைக்கு சென்று மறைந்து கொண்டாள்..


வீட்டின் உள்ளே வந்த பாட்டி "மிரு! மிரு!" என்று அழைக்க "இருங்க பாட்டி, ட்ரெஸ் மாத்திட்டு வரேன்" என்று அறைக்குள் இருந்து குரல் கொடுத்தாள்..


"சரிடாம்மா.. இங்க பிரசாதம் வச்சுருக்கேன்.. எடுத்து வச்சுக்கோ.. கோவில்ல ஒரே கூட்டம்.. அந்த நெரிசலில் இருந்து வெளியே வருவதற்குள் எனக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு.."


"நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன் மா" என்று விட்டு தன் அறைக்குள் செல்ல உள்ளே இருந்தவள் நன்றாக முகத்தை துடைத்து கொண்டவள் வெளியே வந்து "பாட்டி சாப்பிடலையா? அதுக்குள்ள போய் படுத்துட்டீங்க.."


"நான் சாப்பிடுறேன் கண்ணு.. நீ எங்கேயோ வெளியே போகணும்னு சொன்னியே.. நீ போயிட்டு வா" என்று அறையின் உள் இருந்தவாரே பதில் கொடுக்க "சரி பாட்டி" என்றவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்..


விபத்து நடந்த பகுதிக்கு ஒரு ஆட்டோ பிடித்து வந்தவள் அந்த இடத்தில் நிற்கவும் ஆட்டோவை விட்டு இறங்கியதும் கண்ணை கட்டி காட்டில் விட்டது போலானது.


இப்போ நான் யாருக்கிட்ட போய் விசாரிக்குறது என்று யோசித்தவள் அங்கு பக்கத்தில் பேருந்து நிழற்குடையில் நின்று கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியிடம் ம்மா இங்கு கொஞ்ச நேரத்துக்கு ஆக்சிடெண்ட் நடந்துச்சுன்னு சொன்னாங்களே அவரை எந்த ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்கன்னு தெரியுமா என்று கேட்க எனக்கு தெரியாதே மா நான் இப்போதான் பஸ் ஏற வந்தேன் என்று கூறவும் சுற்றிலும் திரும்பி பார்த்தாள்.


அங்கு ரோட்டின் ஓரமாக ஒரு டீக்கடை இருக்கவே அங்கு சென்றாள். கடவுளே என் ஆதுக்கு எதுவும் ஆக கூடாது என்ற ஜெபம் மட்டுமே அவள் மனதில்.


அங்கிருந்தவரிடம் அண்ணா இங்க கொஞ்ச நேரம் முன்ன ஆக்ஸிடென்ட் ஆச்சுன்னு என்று அவள் கூற வரும் போதே ஆமா ம்மா நல்லா வெளிநாட்டு காரு போல அப்பளமா நொறுங்கி போச்சு.. என்றவர் ஒரு மருத்துவமனையின் பெயரை கூறி அங்க தான் கூட்டிட்டு போயிருக்காங்க என்று அவளுக்கு தேவையான பதிலை கூறினார்.


அதற்கு மேல் தாமத படுத்தாமல் அவனை கொண்டு சென்ற மருத்துவமனைக்கு விரைந்தாள்..


அங்கு சென்று விசாரித்தால் 'இங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க மேடம், அந்த பேஷண்ட் ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல இருந்தார். வேற ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போய்ட்டாங்க' என்று அங்கிருந்த நர்ஸ் கூற "ஐயோ..! ஆது" என்று அங்கேயே அலறிக்கொண்டு கீழே மயங்கி விழுந்தாள்.


அவள் கீழே சரியவும் "ஐயோ! இந்த பொண்ணு கீழே விழுந்துருச்சு" என்று அந்த நர்ஸ் சத்தம் போட அங்கிருந்த ஆண் நர்ஸ் ஒருவர் அவளை தூக்கி கொண்டு மருத்துவரிடம் சென்றார்..


அவள் அதிர்ச்சியில் மயக்காமாகியிருக்க அங்கு மருத்துவம் பார்க்க பட்டது..


பின் இரண்டு மணி நேரம் கழித்து எழுந்தவளுக்கு முதலில் எங்கிருக்கிறோம் என்று கூட தெரியவில்லை..


சுற்றும் முற்றும் பார்த்தவள் அந்த மருந்து நெடியில் முகத்தை சுளித்தவளுக்கு அப்பொழுது தான் ஆதுவின் நினைவு வந்தது..


"ஆது.. ஆது.." என்றுமுகத்தை மூடிக் கொண்டு கதறி அழுதவள் "ஆது.. என் ஆது.. உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்" என்று தன் கழுத்தில் கிடந்த அவன் கட்டிய தாலியை கையில் பிடித்துக்கொண்டு அரற்றினாள்..


அவள் சத்தம் கேட்டு உள்ளே வந்த நர்ஸ் "என்னமா நீ? எதுக்கு கத்துற? ஒழுங்கா படு. இங்க பாரு ட்ரிப்ஸ் ஏத்துன கையில ரத்தம் வருது, சும்மா இருமா." என்று அவளை அடக்க பார்க்க..


"அக்கா.. அக்கா.. என் ஆது க்கா அவன் ஷர்ட்லாம் ரத்தம் தலையில் அடி பட்டுருச்சு போல க்கா, நான் இப்போவே போய் பார்க்கணும் க்கா அவனை.."


"அவன் இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லக்கா.. என் ஆது.." அவள் கதற அந்த நர்ஸுக்கு அவளை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது..


"ஏய் பொண்ணு முதலில் அழாம இரு.." என்று அவள் முதுகை வருடியவள் அவள் சற்று அழுகை குறைந்து தேம்பி கொண்டிருக்க "ஹிம்ம்.. இப்போ சொல்லு யாரு அந்த ஆதுக்கு என்னாச்சு..?" என்று அவளை பார்த்து கனிவுடன் கேட்டார்.


அவள் விபத்து நடந்ததை பற்றி கூறவும் "ஒஹ்.. அந்த பையனா? அவன் கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன்ல இருந்ததால இங்க பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.


அப்பறம் தான் அவங்க பெரிய இடம் போல நிறைய பேரோட அவங்க வீட்டுல வந்து அந்த பையனை அழைச்சுட்டு நிரந்தரா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிருக்காங்க" என்று தனக்கு தெரிந்த வரைக்கும் கூறினார்..


அவள் அதை கேட்டதும் உடனே படுக்கையில் இருந்து எழ "இருமா.. ட்ரிப்ஸ் எடுத்துடுறேன்" என்றவர் அதனை எடுத்து விட்டு அவளை பார்க்க பாவமாக இருந்தது போல அவளிடம் "அங்க என் பிரெண்ட் வேலை பாக்குறா.."


"எதாவது உதவி தேவைப்பட்டால் அவக்கிட்ட கேளு" என்று ஒரு நம்பரை எழுதி அவள் கையில் குடுக்க "ரொம்ப நன்றி க்கா.." என்று அவள் கையை பிடித்து கொண்டு தன் நன்றியை கூறியவள் அந்த ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தாள்..


காலையிலிருந்து சாப்பிடாதது வேறு ஒரு மாதிரியாக மயக்கம் வருவது போல் இருக்க அதை உதறி தள்ளியவள் அந்த ஹாஸ்பிடல் உள்ளே சென்று அங்கிருந்த ரிசப்ஷனிஸ்டிடம் அவனை பற்றி விசாரித்தாள்..


"மேடம் ஆதித்தன்னு யாராவது இங்க அட்மிட் ஆயிருக்கங்களா..? கொஞ்சம் பாத்து சொல்லுங்க." என்று கூற அந்த பெண் அன்றைய பதிவு ரெக்கார்டை பார்த்து "மூணாவது மாடில ரெண்டாவது ரூம்" என்று கூறினாள்..


லிஃட்டில் ஏற ஏற்கனவே நிறைய பேர் நிற்க அதனை கண்டுகொள்ளாமல் படிக்கட்டில் ஏறி சென்று பார்க்க அங்கு அவனுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்து ஐ சி யுவில் இருந்தான்..


கதவருகே கூட அவளால் போக முடியவில்லை.. அந்த வராண்டாவில் அவன் வீட்டார் அனைவரும் கூடியிருக்க அவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை..


அந்த அறை அருகே கூட அவளால் செல்ல முடியாமல் தவிக்க அந்த நர்ஸ் குடுத்த நம்பர் நியாபகம் வர அந்த எண்ணிற்கு அழைத்தாள்..


இரண்டு ரிங்கில் அந்த பக்கம் எடுக்க "ஹலோ அக்கா" என்று அந்த நர்ஸ் பெயரை கூறி அனைத்தையும் கூற அந்த நர்ஸ் அவளை கீழே அழைத்தார்..


அங்கு சென்றவளிடம் அந்த நர்ஸ் "அது ஐ சி யூ மா.. அவ்ளோ சீக்கிரம் யாராலும் போக முடியாது.." என்று கூற "அக்கா ப்ளீஸ்! எனக்கு இந்த ஒரு உதவி பண்ணுங்க அக்கா.."


"அவனை பார்த்தால் போதும் அக்கா கொஞ்ச நேரம் தான் நான் அப்பறம் வந்துடுவேன்" என்று கெஞ்சினாள்..


சிறிது நேரம் யோசித்தவள் "சரி என் கூட வா" என்கவும் மிருவும் அவளை பின் தொடர்ந்தாள்..


அவள் அழைத்து சென்றது நர்ஸ் உடை மாற்றும் அறைக்கு தான்..ஒரு உடையை எடுத்து அவளிடம் நீட்டி அதை உடுத்திக் கொண்டு வருமாறு கூறிவிட்டு வெளியே சென்றாள்..


அவள் அந்த உடையை அணிந்து வந்ததும் "இங்க பாரு பொண்ணு நீ மட்டும் நர்ஸ் இல்லன்னு தெரிஞ்சுது அவ்ளோதான் என் வேலை போய்டும்.."


"இப்போ ட்ரிப்ஸ் ஏத்துறதுக்கு கூப்பிடுவாங்க.. அப்போ என் கூட நீயும் வா.. நான் ட்ரிப்ஸ் ஏத்துறதுக்குள்ள பாத்துடு சரியா."


"அப்புறம் இன்னும் ஒன்னு அங்க வந்து அழாத சரியா வெளியிலிருந்து யாராவது பார்க்க வாய்ப்பிருக்கு.." என்று கூறியவள் அவளுடன் அவன் அறைக்கு சென்றாள்..


அவன் இருக்கும் அறைக்கு பக்கம் வர அங்கிருந்தவர்கள் அனைவரும் இவளையே பார்ப்பது போல ஓர் பிரமை அவளுள்..


உள்ளுக்குள் நடுங்கி கொண்டே இருந்தவளுக்கு இப்போவோ அப்போவோ விழுந்து விடுவேன் என்ற கண்ணீர் கூட அவளை பயமுறுத்தியது..


தன் கையை இறுக்கமாக மடக்கியவாறு அங்கிருந்த யாரையும் பார்க்காமல் அந்த நர்ஸ் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்லவும் இவளும் அவளை தொடர்ந்து உள்ளே சென்றாள்..


அங்கு அவன் உடலில் ஏதேதோ உபகரணங்கள் பொறுத்தியிருக்க தலையில் பெரிய கட்டுடன் கையிலும் காலிலும் சிறு கட்டுகளுடன் வேரறுந்த மரம் போல் படுத்திருந்த தன் தலைவனை கண்டதும் அவள் கண்ணில் கட்டுக்கடங்காமல் கண்ணீர் பெருகியது..


எவ்வளவு தடுத்தும் அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.. சட்டென்று திரும்பி கொண்டு தன் கண்ணீரை துடைத்து கொண்டாள்..


பார்த்த முதல் பார்வையிலே எடை போடும் கூர்மையான கண்கள் இன்று மூடி கிடக்க அவன் நெற்றியை வருடி விட்டவள் "உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன் ஆது.." என்று தனக்கு தானே ஆறுதலாக கூறிக்கொண்டாள்.


"நான் உன்கூட நிறைய சண்டை போடணும்.. உன் கூட பேசணும் இன்னும் நம்ம வாழ்க்கையில் பார்க்க நிறைய இருக்கு.."


'அதுக்குள்ள உன்னை போக விட்டுடுவேனா' என்று மானசீகமாக அவனுடன் பேசியவள் அவன் கையை வருட "போலாம்" என்று அந்த நர்ஸ் கூறவும் மனதே இல்லாமல் அவனை விட்டு அந்த நர்ஸுடன் வெளியே வந்தாள்..


இவர்கள் இருவரும் வெளியே வந்ததும் "நில்லுங்க" என்று கம்பீரமான குரல் ஒன்று கேட்கவும் இருவரும் ஒருசேர அதிர்ந்தனர்..


ஆதி அந்தமாகும்…



No comments:

Theme images by RBFried. Powered by Blogger.