மோகினி - 4

 



மோகினி - 4: 

அடுத்த நாள் காலை, சூரிய ஒளி தேனாம்பட்டியின் மீது ஒரு தங்கப் போர்வை போலப் படர்ந்திருந்தது. 

முதல் நாள் பயணக் களைப்பும், வரவேற்பறையில் நடந்த வாக்குவாதத்தின் சூடும் மோனாவின் உறக்கத்தைக் கலைத்திருந்தன. 

அவள் கண் விழித்தபோது, அறையின் பால்கனி வழியே உள்ளே நுழைந்த காற்றில், மண் வாசனையும், பூக்களின் நறுமணமும் கலந்திருந்தன. 

அவள் எழுந்து பால்கனிக்கு வந்தாள்.நேற்று அவள் கோபமாகப் பார்த்த அதே வாகை மரம், இன்று காலை சூரிய பொன்னொளியில் குளித்து, நூற்றுக்கணக்கான வைரக்கற்களைப் பதித்தது போலப் பனித்துளிகளுடன் மின்னியது. 

அதன் கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகள், ஒரு சிம்பொனி இசைப்பது போலக் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. அந்த அழகு, அவளது கோபத்தின் மீது ஒரு மெல்லிய திரையை இட்டது. ஆனால், அந்தத் திரைக்குப் பின்னால், அந்த ஹோட்டல் மேலாளரின் அலட்சியச் சிரிப்பு இன்னும் எரிந்து கொண்டுதான் இருந்தது.

‘இந்த ஊர் அழகாக இருக்கலாம். ஆனால், இங்குள்ள மனிதர்கள் அப்படியில்லை,’ என்று அவள் மனதுக்குள் கசப்புடன் நினைத்துக்கொண்டாள்.

"Bonjour அக்கா," என்ற மெல்லிய குரலுடன், எம்மா அவள் அருகே வந்தாள். 

அவள் முகத்தில் ஒருவிதப் புத்துணர்ச்சி தெரிந்தது. அவள் கையில், முதல் நாள் அவள் வரையத் தொடங்கிய வாகை மரத்தின் ஓவியம் இருந்தது. அது கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருந்தது.

"எம்மு, நீ எப்போ எழுந்தே?"

"நான் ஆறு மணிக்கே எழுந்துட்டேன். இந்த மரத்தை வரைய ஆரம்பிச்சேன். பாரு, எவ்வளவு அழகா இருக்கு!" என்று தன் ஓவியத்தைக் காட்டினாள்.

மோனா அதைப் பார்த்தாள். கோடுகளும், வர்ணங்களும் இணைந்து, அந்த மரம் உயிருடன் நிற்பது போல இருந்தது. தன் தங்கையின் திறமையை எண்ணி அவள் பெருமைப்பட்டாள். 

"ரொம்ப அழகா இருக்கு எம்மு. நீ ஒரு ஜீனியஸ்."

"தேங்க்யூ அக்கா. நாம இன்னைக்கு ஊரைச் சுத்திப் பார்க்கப் போகலாமா? எனக்கு இந்த ஊரோட சந்தையைப் பார்க்கணும். அங்க இருக்கிற மக்களை வரையணும்," என்றாள் எம்மா ஆர்வத்துடன்.

மோனாவிற்கும் அதுதான் சரியாகப்பட்டது. தன் கோபத்தை ஆக்கப்பூர்வமாக மாற்ற இதுதான் சரியான வழி. அந்த மேலாளருக்கு, தாங்கள் வெறும் அறைக்குள் முடங்கிக் கிடக்கும் நகரத்து பொம்மைகள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்.

ஏன் அவனுக்கு தான் நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தாள்..

அவள் கொஞ்சம் யோசித்து இருக்கலாமோ..

"கண்டிப்பா போகலாம் எம்மு. குளிச்சு ரெடியாகு. இன்னைக்கு நாம இந்த ஊரோட அழகை போட்டோ எடுக்கப் போறோம். இந்த ஊரோட உண்மையான முகத்தை, இங்க இருக்கிற உழைக்கும் மக்களின் முகத்தை என் கேமரால பதிவு பண்ணனும்," என்றாள் மோனா, அவள் கண்களில் ஒரு புதிய தீவிரம் குடியேறியது.

இருவரும் தயாராகி, ஹோட்டலின் உணவகத்திற்கு காலை உணவுக்காகச் சென்றனர். 

அங்கே, இளஞ்செழியன் ஊழியர்களுக்கு ஏதோ அறிவுரைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் அவர்களைப் பார்த்ததும், ஒரு நொடி அவன் பார்வை மோனாவின் மீது நிலைத்தது.

ஆனால், அடுத்த கணமே, அவர்களைக் கண்டுகொள்ளாதது போல முகத்தைத் திருப்பிக்கொண்டான்.அந்த அலட்சியம், மோனாவின் கோபத்திற்கு மீண்டும் தீனி போட்டது.

‘இவனைப் பார்த்தாலே எரிச்சலா வருது,’ என்று முணுமுணுத்தபடி, ஒரு மேஜையில் அமர்ந்தாள்.

காலை உணவை முடித்துக்கொண்டு, இருவரும் வெளியே வந்தனர். 

மோனாவின் கழுத்தில் அவளது விலை உயர்ந்த கேமரா கம்பீரமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. எம்மாவின் கையில் அவளது ஸ்கெட்ச் பேடும், ஒரு சிறிய பையில் அவளது கலைப் பொருட்களும் இருந்தன.

"சந்தை எங்க இருக்குன்னு எப்படித் தெரிஞ்சுக்கிறது?" என்று எம்மா கேட்டாள்.

"யாருக்கிட்டயாவது கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டியதுதான்," என்றபடி, ஹோட்டலின் வாயிலில் நின்றிருந்த காவலாளியிடம் சென்றாள் மோனா. 

"அண்ணா, இங்க காய்கறிச் சந்தை எங்க இருக்கு?"

"அதாம்மா, இந்த ரோட்ல நேரா போனீங்கன்னா, ஒரு பிள்ளையார் கோயில் வரும். அதுக்குப் பக்கத்துலதான் வாரா வாரம் சந்தை போடுவாங்க. இன்னைக்கு செவ்வாய்க்கிழமை, சந்தை நாள். கூட்டம் நல்லா இருக்கும்," என்றார் அவர்.

இருவரும் நடக்க ஆரம்பித்தனர். 

கிராமத்துச் சாலை, நகரத்துச் சாலைகளைப் போல இல்லாமல், ஒருவித உயிர்ப்புடன் இருந்தது. 

நகரத்தின் காலை பரபரப்பு எதுவும் இல்லாமல் வண்டியின் ஹாரன் சத்தம் இல்லாமல் அமைதியாக இருந்தது..

சாலையின் இருபுறமும், வீடுகளின் வாசலில் பெண்கள் கோலம் போட்டுக்கொண்டிருந்தனர். குழந்தைகள் பம்பரமும், கோலியும் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து சென்ற ஒவ்வொருவரும், இந்த புது முகங்களை ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தனர்.

பின்னே பார்க்க மாட்டார்களா இருவரும் இந்த கிராமத்திற்கு சற்றும் பொருந்தவில்லை. தொட்டால் சிவந்து போகும் நிறம் கொண்ட பெண்களைக் கண்டதும் ஆச்சரியத்துடனும் ஆவலுடனும் பார்த்து வியந்து போயினர்.

சிறிது தூரத்தில், அவர்கள் அந்தப் பிள்ளையார் கோயிலை அடைந்தனர். 

அதனை ஒட்டியிருந்த பெரிய மைதானத்தில், தேனாம்பட்டி சந்தை கூடியிருந்தது. அது ஒரு வண்ணமயமான உலகம். அந்த மைதானம் முழுக்க வரிசையாக அதுவும் நேர்த்தியாக எந்த ஒரு பிணக்கும் இல்லாமல் வியாபாரிகள் தங்களுக்குள் சிரித்து பேசியப்படி விதவிதமான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகைப் பொருட்கள், மண்பாண்டங்கள், துணிகள் என அந்த இடமே ஒரு திருவிழா போலக் காட்சியளித்தது. 

மக்களின் பேரம் பேசும் சத்தம், வியாபாரிகளின் கூவல், குழந்தைகளின் சிரிப்பொலி என அனைத்தும் கலந்து ஒருவித கிராமிய சங்கீதத்தை உருவாக்கின.

மோனா தன் கேமராவை ஆன் செய்தாள். அவள் கண்கள், ஒரு பருந்தின் கூர்மையுடன், சரியான தருணங்களுக்காகக் காத்திருந்தன. பூ விற்கும் பாட்டியின் சுருக்கங்கள் விழுந்த முகத்தில் தெரிந்த புன்னகையை, தன் தந்தையின் தோளில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் குழந்தையின் ஆச்சரியத்தை, மண்பாண்டம் செய்யும் குயவனின் கவனம் சிதறாத முகத்தை என அவள் ‘கிளிக்’ செய்யத் தொடங்கினாள்.

எம்மா, அந்த சந்தையின் மூலையில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்துகொண்டாள். அந்த மரத்தின் விழுதுகள், பெரிய தூண்கள் போல நிலத்தில் ஊன்றியிருந்தன. 

அதன் நிழலில், பலரும் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தனர். எம்மாவுக்கு அந்த இடமே ஒரு ஓவியம் போலத் தெரிந்தது. அவள் தன் ஸ்கெட்ச் பேடைத் திறந்து, அந்த ஆலமரத்தையும், அதன் கீழே இளைப்பாற சிலர் படுத்திருந்தனர், சிலர் சீட்டுக் காலையிலேயே பந்தயம் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்..

அதனை கண்டவள் வரையத் தொடங்கினாள். 

அவள் தன் வண்ண உலகிற்குள் இனிமையாக மூழ்கிப் போனாள். 

சுற்றிலும் நடக்கும் எதுவும் அவள் கவனத்தைக் கலைக்கவில்லை.

அதே நேரத்தில், பரிதி உரம் மற்றும் விவசாயப் பொருட்கள் விற்பனை நிலையத்தில், இளம்பரிதி தன் வேலைகளில் மும்முரமாக இருந்தான்.

"தம்பி, இந்த பூச்சி மருந்தை எப்படி அடிக்கணும்னு ஒரு தடவை சொல்லு," என்று கேட்டார் ஒரு விவசாயி.

பரிதி, ஒரு லிட்டர் தண்ணீரில் எவ்வளவு மருந்து கலக்க வேண்டும், எப்போது அடிக்க வேண்டும், என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும் எனப் பொறுமையாக விளக்கினான். 

அவனது இந்த அணுகுமுறைதான், அவனை அந்த ஊர் விவசாயிகளின் செல்லப் பிள்ளையாக மாற்றியிருந்தது.

அப்போது, அவனது கைப்பேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். அண்ணன் இளஞ்செழியன் அழைத்தான்.

"சொல்லுண்ணே," என்றான் பரிதி.

"டேய், கடையில இருக்கியா? நான் உரம் வாங்க ஒரு ஆளை அனுப்புறேன். அப்பா கணக்குல எழுதிக்கோ," என்றான் செழியன்.

"சரிண்ணே. என்ன விசேஷம்? ஹோட்டல் தோட்டத்துக்கா?"

"ஆமாம். புதுசா புல்வெளி வச்சதுக்கு கொஞ்சம் உரம் போடணும். அப்புறம், நேத்து புதுசா ரெண்டு பொண்ணுங்க கெஸ்ட்டா வந்திருக்கு. புதுச்சேரியாம். அதுல ஒண்ணு சரியான வம்புக்காரி. காலையிலயே என்கிட்ட சண்டைக்கு நின்னுட்டா," என்று சலிப்புடன் சொன்னான் செழியன்.

பரிதி சிரித்தான். 

"அப்படியா? என் அண்ணன்கிட்டயே சண்டைக்கு நிக்கிற அளவுக்கு தைரியமான பொண்ணா? யாருண்ணே அது?"

"பேரு பேனாவோ மோனாவோ. அவ கூட அவ தங்கச்சியும் வந்திருக்கு. பாவம், அந்தப் பொண்ணு அமைதியா இருக்கு. இந்த அக்காக்காரிதான் தாங்க முடியல. சரி, நான் வேலையைப் போய் பாக்குறேன். நீ வந்த ஆளுக்கு உரத்தைக் குடுத்து விடு," என்று போனை வைத்தான் செழியன்.

பரிதி சிரித்துக்கொண்டான். 

'அண்ணனுக்கு ஏத்த ஆளுதான் வந்திருக்கு போல,' என்று நினைத்தபடி தன் வேலையைத் தொடர்ந்தான். 

சிறிது நேரத்தில், ஹோட்டலிலிருந்து வந்த ஊழியரிடம் உரத்தைக் கொடுத்து அனுப்பினான். 

பிறகு, கடையின் கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, அவனுக்கு ஒரு ஞாபகம் வந்தது.'ஆமா, இன்னைக்கு சந்தை நாள். மாதுரி அம்மாக்கு மல்லிகைப் பூன்னா ரொம்பப் பிடிக்குமே. முகிலன் கிட்ட சொல்லிவிட்டா வாங்கிட்டு வருவான். இல்லாட்டி நாமளே போய் வாங்கிட்டு வரலாம்,' என்று நினைத்தான்.

தன் உதவியாளனிடம் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, தன் டிவிஎஸ் 50 வண்டியை எடுத்துக்கொண்டு சந்தையை நோக்கிக் கிளம்பினான். சந்தையின் இரைச்சல், தூரத்திலிருந்தே கேட்டது. 

அவன் தன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பூக்கடைகளை நோக்கி நடந்தான்.அப்போதுதான் அவன் அவளைப் பார்த்தான்.ஆலமரத்தின் நிழலில், தரையில் அமர்ந்து, உலகையே மறந்து, அவள் ஏதோ வரைந்து கொண்டிருந்தாள். 

மெல்லிய நீல நிற சுடிதார் அணிந்திருந்தாள். அவளது கருங்கூந்தல் கற்றைகள், காதோரம் வழிந்து, அவள் குனிந்திருந்த முகத்தை மென்மையாக வருடின. காலை வெயில், மர இலைகளின் ஊடாகப் புகுந்து, அவள் மீது பட்டு, அவளைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தை உருவாக்கியிருந்தது. 

அவளது கவனமெல்லாம், அவள் கையிலிருந்த அந்த ஸ்கெட்ச் பேடில் இருந்தது.

பரிதி அப்படியே உறைந்து நின்றான். அவன் அவளைப் பார்க்கவில்லை.. ரசித்தான்.. ஒரு தேவதையைக் கண்டது போல பிரமித்து நின்றான். 

அவள் யாரென்று அவனுக்குத் தெரியாது, பேரென்றும் தெரியாது. ஆனால், அந்த ஒரு நொடியில், அவள்தான் தன் வாழ்க்கை என்று அவனது உள்மனம் சொன்னது. அவன் பூ வாங்க வந்ததையே மறந்தான். தன்னை மறந்தான். அந்த இடத்தின் இரைச்சல் அவன் காதுகளில் விழவில்லை. அவன் கண்களுக்கு, அவள் மட்டுமே தெரிந்தாள்.

அவன் மெதுவாக, அவளுக்குத் தெரியாமல், அவளருகே சென்றான். அவள் என்ன வரைகிறாள் என்று பார்க்க ஆசைப்பட்டான். அவள் அந்த ஆலமரத்தை வரைந்து கொண்டிருந்தாள். அவளது ஓவியம் அத்தனை தத்ரூபமாக இருந்தன. 

ஒரு புகைப்படத்தில் கூட அத்தனை ஜீவனைக் கொண்டு வர முடியாது என்று அவனுக்குத் தோன்றியது.அவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றபோது, அவள் தன் பையிலிருந்து வேறு ஒரு பென்சிலை எடுக்க முயன்றாள். அப்போது, அவள் அருகே வைத்திருந்த ஒரு சிறிய ரப்பர், உருண்டு ஓடி, பரிதியின் காலடியில் வந்து நின்றது.

பரிதிக்கு இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. 

ஐயோ என்ன இது இப்படி துடிக்குது என்று தன் இடப் பக்க நெஞ்சில் கைவைத்து அழுத்திக் கொண்டான். இது கடவுள் கொடுத்த சந்தர்ப்பம். அவன் குனிந்து, அந்த சிறிய ரப்பரை எடுத்தான். அவன் கைகள் லேசாக நடுங்கின.

அவன் அவளருகே சென்று, "இது... உங்களோடத," என்று ஒன்றும் தெரியாதது போல தயங்கியபடி நீட்டினான்.

எம்மா, தன் சிந்தனையிலிருந்து விடுபட்டு, நிமிர்ந்து பார்த்தாள். அவள் முன், ஒரு இளைஞன், கையில் தன் ரப்பருடன் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒருவிதப் பதட்டமும், வெள்ளந்தியான புன்னகையும் இருந்தன. அவன் கண்கள், அவளிடம் ஏதோ பேச விரும்புவது போலத் தவித்தன.அவள் ஒரு கணம் திகைத்தாள்.

பிறகு, மெதுவாக அந்த ரப்பரை வாங்கிக்கொண்டு, "நன்றி," என்று மெல்லிய, கிட்டத்தட்ட காற்றில் கரையும் குரலில் சொன்னாள். அவளது நீல நிறக் கண்கள், ஒரு நொடி அவனைப் பார்த்துவிட்டு, மீண்டும் தரை பார்த்தன.

பரிதிக்கு அந்த ஒரு வார்த்தை, தேவகானம் போல இருந்தது. அந்த ஒரு பார்வை, அவன் இதயத்தில் தைத்த அம்பு போல இருந்தது. அவன் இன்னும் ஏதோ பேச விரும்பினான்.

"நீங்க... நல்லா வரையுறீங்க," என்று சொல்ல நினைத்தான். ஆனால், வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டன.அவன் தன்னை நினைத்து முத்திருச்சுடா என்று சிரித்துவிட்டு, தலையை ஆட்டிவிட்டு, வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். 

அவன் வந்ததென்னவோ பூக்கடைக்குச் செல்ல.. ஆனால் இப்பொழுதோ வந்த வேலையே மறந்த படி நேராக தன் வண்டியை நோக்கி நடந்தான். அவன் கால்கள் தரையில் நடக்கவில்லை, மிதந்து செல்வது போல உணர்ந்தான்.

எம்மா, அவன் சென்ற திசையையே ஒரு கணம் பார்த்தாள். அவளது கன்னங்கள் லேசாகச் சிவந்திருந்தன. யாரோ ஒரு அந்நியன். ஆனால், அவன் பார்வையில் ஒருவித நேர்மை இருந்தது. அவள் மீண்டும் தன் ஓவியத்தில் கவனம் செலுத்த முயன்றாள். ஆனால், அந்த வெள்ளந்தியான புன்னகையும், தவிப்பான கண்களும் அவள் மனதை விட்டு அகலவில்லை.

ஏன் என்று அதற்கு மேல் அவள் யோசிக்கவில்லை..

சற்று நேரத்தில், மோனா அவள் அருகே வந்தாள். 

"என்ன எம்மு, டிராயிங் முடிஞ்சுதா? நான் சூப்பரா சில போட்டோஸ் எடுத்தேன். வா, ஹோட்டலுக்குப் போகலாம். பசிக்குது."

"சரி அக்கா," என்றபடி, எம்மா தன் பொருட்களை எடுத்துக்கொண்டு எழுந்தாள்.

"என்னடி, முகம் ஒரு மாதிரியா இருக்கு? வெயில்ல உக்காந்ததுனாலயா?" என்று கேட்டாள் மோனா.

"இல்லக்கா, ஒண்ணுமில்ல," என்று சமாளித்தாள் எம்மா.

பரிதி, தன் கடைக்கு எப்படித் திரும்பி வந்தான் என்றே அவனுக்குத் தெரியவில்லை. அவன் மனதோ, இன்னும் அந்த ஆலமரத்தின் அடியில்தான் சுற்றிக் கொண்டிருந்தது.

உடல் மட்டும் தான் இங்கு இருந்தது.. தன் உயிரை அங்கேயே விட்டு வந்தது போல உணர்ந்தான்.. என்னா கண்ணுடா சாமி என்று அவள் இளநில நிறக் கண்களைத் தன் மனப்பெட்டகத்தில் கொண்டு வந்தவனை "என்ன தம்பி, பூ வாங்கிட்டு வந்தாச்சா?" என்று கேட்டான் உதவியாளன்.

அப்போதுதான் பரிதிக்கு உறைத்தது. 

"ஐயையோ, மறந்துட்டேனேடா," என்று தலையில் அடித்துக்கொண்டான்.அவன் மனம் முழுவதும், அந்த நீல நிறக் கண்கள் தான் நிறைந்திருந்தன. 

அவன் தன் கைப்பேசியை எடுத்து, முகிலனுக்கு அழைத்தான்..

"சொல்லுடா பரிதி," என்றான் முகிலன்.

"டேய், நீ எங்க இருக்க? உடனே கடைக்கு வா. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்."

சிறிது நேரத்தில், முகிலன் வந்து விட்டான். 

பரிதியின் முகத்தைப் பார்த்ததுமே, ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்துகொண்டான். 

"என்னடா ஆச்சு? ஏதும் பேய் பிசாசு அடிச்சிருச்சா? ஏன் ஒரு மாதிரியா இருக்க?"பரிதி, அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு கடையின் உள்ளே சென்றான்.

"மச்சான்... நான் ஒரு தேவதையைப் பாத்தேண்டா..."

முகிலன் சிரித்தான். 

"என்னடா, புதுசா கதை விடுற?"

"இல்லடா, நிஜமாத்தான் சொல்றேன். சந்தையில, ஆலமரத்தடில உக்காந்து படம் வரைஞ்சுட்டு இருந்துச்சு. என்ன அழகுடா... என்ன கண்ணு... அப்படியே... ஐயோ, எனக்கு சொல்லத் தெரியலடா," 
என்று ஏதேதோ பிதற்றினான்..

முகிலனுக்கு ஒன்று மட்டும் நன்றாக விளங்கியது. பயல் எங்கேயோ கவுந்துட்டான் என்று நினைத்துக் கொண்டான்.

அவன் விவரித்ததைக் கேட்ட முகிலனுக்கு, காலையில் செழியன் சொன்னது நினைவுக்கு வந்தது. 

"டேய், நீ சொல்றது... புதுச்சேரில இருந்து வந்த பொண்ணுங்களா?"

"எனக்குத் தெரியாதுடா. ஆனா, அவ இந்த ஊர்க்காரி இல்லை. அவளைப் பார்த்தா..." என்று இன்னும் ஏதோ சொல்ல வர 

"அவ கூட இன்னொரு பொண்ணு, கொஞ்சம் திமிரா, கேமராவெல்லாம் வெச்சுட்டு இருந்துச்சா?" என்று கேட்கவும் பரிதி யோசித்தான்.

"ஆமா... நான் தூரத்துல பாத்தேன். ஒரு பொண்ணு போட்டோ எடுத்துட்டு இருந்துச்சு."

முகிலன் தலையில் கை வைத்துக்கொண்டான். 

"டேய் மக்கு... அது அண்ணன் சொன்ன வம்புக்காரி பொண்ணோட தங்கச்சிடா. நீ காதல்ல விழுந்தது, நம்ம ஹோட்டல்ல தங்கியிருக்கிற கெஸ்ட்கிட்ட."

பரிதிக்கு ஒரு கணம் அதிர்ச்சியாக இருந்தது. 

பிறகு, அவன் முகத்தில் ஒரு பெரிய புன்னகை மலர்ந்தது. 

"அப்படியா! சூப்பர்டா! அப்போ அவ பேரு, அட்ரஸ் எல்லாம் ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். அவ பேரு என்னடா?"

"எனக்குத் தெரியாது. ஆனா, அவங்க அக்கா பேரு மோனாவாம்."

"மோனாவா? நல்லா இல்ல. ஆனா, என் தேவதைக்கு கண்டிப்பா ஒரு அழகான பேரு இருக்கும்," என்றான் பரிதி கனவுலகில்.

அவன் காதலில் விழுந்துவிட்டான். 

முதல் பார்வையிலேயே, முழுவதுமாக, மறுக்க முடியாதபடி மறக்கவும் முடியாதபடி விழுந்துவிட்டான்.

அன்று மாலையே, அவன் ஹோட்டலுக்குச் சென்றான். 

அண்ணனைப் பார்ப்பது ஒரு காரணம். தன் தேவதையை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்பது இன்னொரு காரணம்.

அங்கே, பால்கனியில், மோனா யாரிடமோ போனில் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தாள். அவளருகே, எம்மா அமைதியாக நின்று, தூரத்தில் தெரியும் மலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பரிதி, தன் அண்ணன் அறைக்குச் செல்லாமல், தூரத்திலிருந்தே அவளைப் பார்த்தான். மாலை நேர ஈரக் காற்றில் அசைந்தாடிய கூந்தலையும், அவள் முகத்தில் தெரிந்த அமைதியையும் பார்த்தான்.

'என் தேவதை,' என்று அவன் இதயம் மெல்ல உச்சரித்தது.

அவன் இதயத்தில் மெல்லிய சாரல் அடித்தது..

மனம் மயங்கும் ..



No comments