புயல் -1
"ஐயா..ஊட்டுல இருக்கீங்களா.." என்று குரல் கொடுத்ததும் வடிவாம்பாள் வெளியே வந்தார்.
"என்ன துரை காலையிலே இந்த பக்கம்" என்று கேட்டதும் "அது... வந்து மா" என்று தயங்கியவர் பின்பு சொல்லி தானே ஆக வேண்டும் என்று "அம்மா நம்ம கதிர் தம்பி மேலயும் உங்க சொந்தக்காரப் பொண்ணு முத்தமிழ் மேலயும் பஞ்சாயத்துல புகார் கொடுத்துருக்காங்க மா அதான் பஞ்சாயத்துக்காரங்க உங்ககிட்ட சொல்ல சொல்லி அனுப்பி விட்டாக "என்றவர் "பத்துமணிக்கு பஞ்சாயத்து நடக்குற இடத்துக்கு வந்துருங்க மா... அப்போ நான் கிளம்புறேன் மா..." என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
வடிவாம்பாள் சென்று விஷயத்தைத் தன் கணவரிடம் கூறினார்.
"எதிர்ப்பார்த்தது தானே வடிவு எப்படியும் இதுப்போல நடக்கும்னு தெரிஞ்சது தானே"
" அந்த திருட்டுப்பயல் தான் புகார் கொடுத்துருப்பான்" என்றவர் "சரி நீ போய் முத்தமிழ எழுப்பு பாவம் ராத்திரி முழுக்க அழுது கிட்டே இருந்துச்சு".
"கதிர் வயலுக்குப் போயிருக்கான் நான் போய் விவரத்தைச் சொல்லி அழைச்சிட்டு வரேன்" என்று சுந்தரேசன் தன் வயலுக்கு சென்றார்.
சுந்தரேசன் ஊரில் பெரிய தலைக்கட்டு அவருக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவன் கதிர்வேலன், சசிக்கலா பின் கடைக்குட்டி பார்த்திபன்.
கதிர்வேலன் 28 வயது ஆறடி உயரமும் அதற்கேற்ற உடலும் கொண்ட கம்பீரமான ஆண்மகன்.சசிக்கலாவை இரண்டு வருடம் முன்பு தான் பெரிய இடத்தில் மாப்பிள்ளைப் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.
பார்த்திக்கு விவசாயத்தின் மேல் ஆர்வம் மிகுதியால் பி.எஸ்.சி அக்ரி கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். இவனுடன்தான் முத்தமிழும் படிக்கிறாள்.
முத்தமிழ் 21 வயது நிரம்பிய அழகான அமைதியான பெண். வட்டமான முகம், வெண்மை நிறம், குழந்தை மனம் கொண்ட குமரியவள்.
அவளுக்கு அம்மா வசந்தி மட்டும்தான். அவளின் தந்தை முத்தமிழ் சிறு வயதாக இருக்கும்போதே மூலைக் காய்ச்சல் வந்து படுத்தவர்தான் பின் ஏழவே இல்லை.
சுந்தரேசனின் தூரத்து சொந்தம்தான் வசந்தி அவருக்கு தங்கை முறை வேண்டும். வசந்தி கணவன் இல்லாமல் கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்து சுந்தரேசன் உதவி செய்ய முன் வந்தார்.
அவரோ "எனக்கு உங்ககிட்ட ஒரு வேலை மட்டும் போட்டுக் கொடுங்க அண்ணா... நான் வேலை செஞ்சு என் பிள்ளைக்கு கஞ்சி ஊத்திகிறேன்.." என்றார் அந்த வைராக்கியம் நிறைந்த பெண்மணி.
முத்தமிழின் ஐந்து வயதில் இந்த ஊருக்கு வந்தார். தன்னால் முடிந்தவரை உழைத்துத் தன் மகளைக் கல்லூரியில் படிக்கும் அளவிற்கு கொண்டு வந்தார்.
சுந்தரேசனின் செங்கல் சூலையில் பின்பு வயல்களிலும் வேலை செய்வார். முத்தமிழும் தன் அம்மாவின் கஷ்டம் உணர்ந்து நன்றாக படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கி தேர்ச்சிப் பெற்று இருந்ததால் கவுன்சிலிங்கில் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தது.
தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை தன் மகளை ஒரு வேலை செய்ய விடமாட்டார். தன் பெண்ணைப் பூப்போல் பார்த்துக்கொள்வார்.
முத்தமிழ் பத்து நாட்களுக்கு முன்பு தான் பரிட்ச்சை முடித்துவிட்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தாள். காலையில் சென்ற தன் அம்மா சாப்பிடக்கூட வரவில்லை என்றதும் தூக்குச்சட்டியில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்றாள்.
அப்பொழுது கதிரின் அப்பத்தா எதிரே வரவும் வம்பிழுக்கலாம் என்று நினைத்தவள் அவரிடம் "என்ன அம்மாயி இப்படி பண்ற"
"எவ டி இவ காலையிலேயே வம்புக்கு இழுக்குறவ நான் என்ன டி பண்ணினேன்"
"நீ எதும் பண்ணல அதான் பிரச்சனையே"
"அடி கூருகெட்ட சிறுக்கி மவளே என்ன பண்ணினேன்னு சொல்ற பண்ணலனு சொல்ற என்ன உன் மனசுல நெனச்சுட்டு இருக்க என் பேரங்கிட்ட சொல்லவா".
"ஹ்ம்ம் சொல்லு சொல்லு இதையும் சேத்து சொல்லு நான் உன் பேரனை கட்டிகுறேன்னு சொல்லு".
"அடியாத்தே வயசுக்கு தகுந்த பேச்ச பேசு டி அவன் காதுல இது விழுந்துது உன்ன உண்டில்லனு பண்ணிடுவான்".
"யாரு உன் பேரனா கடிவாளம் கட்டுன குதிரை மாதிரி அக்கம் பக்கம் யாரு பாக்குறாங்க என்னனு கூட பாக்காம போறாரு அவரு வந்து முன்னாடி நின்னு பேசிட்டாலும்".
"எடுறா அந்த கட்டைய என் பேரன் உனக்கு குதிரையா".
"ஆமா நீ வேனா பாத்துகிட்டு இரு உன் பேரன் மேல ஏறி சவாரி செய்யல என் பேரு முத்தமிழ் இல்ல".
"போடி போய் சாப்பாடை குடுத்துட்டு படிக்கிற வழிய பாரு".என்றவர் "எதுக்கு இந்த வெயிலில் போற ஒரு துண்ட தலையில் போட்டுட்டுப் போறதுக்கென்ன '' என்று சாடியவர் தான் வைத்திருந்த துண்டை அவளிடம் கொடுத்து விட்டு சென்றார்.
முத்தமிழ் சிரித்துக் கொண்டே தன் நடையை எட்டிப் போட்டாள். அப்பொழுது எதிரே கதிர் வரவும் அவள் சொன்னது போல் வேறு எங்கும் பார்க்காமல் பாதையிலே கண்ணாக தன் இருசக்கர வாகனத்தில் சென்றான்.
அதை கண்டு" முத்தமிழு நீ கரெக்டாதான் டி சொல்லிருக்க" என்று தனக்கு தானே சொல்லி சிரித்தாள்.
தன் அம்மாவிடம் வந்து சாப்பாட்டைக் குடுத்து உண்ண சொன்னவள் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவாள். இது அவளுக்கு ரொம்ப பிடித்தமானதும் கூட. அப்பொழுது சுந்தரேசன் அவள் அருகில் வந்து படிப்பைப் பற்றி கேட்டார்.
"எப்படி மா படிப்பெல்லாம் போகுது எப்ப முடியுது உன் படிப்பு "என்றார்.
"மாமா.. இப்போ ஒரு மாதம் விடுமுறைக்கு வந்துருக்கேன் இன்னும் ஆறுமாதம் இருக்கு மாமா படிப்பு முடிய சரி மா " என்று அவள் தலையை தடவிவிட்டு தன் வேலையைப் பார்க்க சென்றார்.
வசந்தி முத்தமிழிடம் "எதுக்கு இங்க வந்த இன்னும் கொஞ்சம் நேரம் செண்டு நானே வந்துருப்பேன்ல "என்றவர் "சரி நீ கிளம்பு இங்க கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்" என்றவர் அவளை அனுப்பி வைத்தவர் தன் வேலையைப் பார்க்க சென்றார்.
அப்பொழுது சுந்தரேசன் வந்து ஏதோ பேச தயங்குவது போல தெரிய "என்ன அண்ணா என்கிட்ட என்ன கேட்கனும் எதுக்கு இவ்ளோ தயக்கம்" என்று கேட்டார்.
சுந்தரேசன் வசந்தியிடம் "நம்ம முத்தமிழ... என் மருமகளா வந்த நல்லாருக்கும்" என்றவர் "இன்னும் ஆறு மாசத்துல படிப்பு முடியுதுன்னு புள்ளை சொன்னுச்சு" என்று தயங்கியவரை "நம்ம கதிருக்கு தருவதுல எனக்கு எதும் பிரச்சனை இல்லை நானா பாத்தாலும் கதிர் மாதிரி மாப்பிள்ளை கிடைக்க என் பொண்ணு குடுத்து வச்சிருக்கனும்" என்றவர்" படிப்பு முடியட்டும் அண்ணே கல்யாணத்தை முடிக்கலாம்" என்றார்.
"இல்லமா இதுக்கு முத்தமிழ் ஒத்துக்கனும்ல கதிர் பன்னிரெண்டாவதுக்கு மேல படிக்கல.. அதான் அது மனசுல என்ன இருக்கோ என்றார்" சுந்தரேசன்.
"அதெல்லாம் நான் சொன்னா என் பொண்ணு கேப்பா அண்ணே. நீங்க கவலைப் படாதீங்க" என்றார்.
ஆனால் அப்பொழுது அவருக்கு தெரியவில்லை தான் தன் மகளிடம் இந்த விஷயத்தைக் கடைசிவரையில் சொல்ல போவதில்லை என்று…
மறுநாள் செங்கல் லோடு ஏற்றும் பொழுது சுந்தரேசன் டிரக் டிரைவரிடம் "கல்லு இறக்குறதுக்கு ஆளு இல்லையே என்ன பண்றது..." என்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த வசந்தா " நான் போறேன் அண்ணா.. கல்லு இறக்குறதுக்கு " பின்னால் டிப்பரில் கல்லின்மேல் ஏறி அமர்ந்துக்கொண்டார்.
அவர்களை அனுப்பி வைத்து தன் வீட்டிற்கு கிளம்பி வந்து விட்டார் சுந்தரேசன்.
ஒரு இரண்டு மணி நேரம் கழித்து கதிருக்குப் போன் வந்தது. செங்கல் ஏற்றி சென்ற டிரக் டிரைவர் தான் அழைத்தான்.
அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சியானவன் கண்ணில் சிரித்த முகத்துடன் முத்தமிழ் தோன்றினாள்.
ஆனால் இந்த விஷயத்தைக் கேட்டால் அவள் தாங்குவாளா என்று நினைத்து தன் தந்தையை அழைத்து விவரத்தைக் கூறினான்.
சற்றுமுன் கதிரிடம் டிரைவர் வசந்தி டிப்பரில் செங்கல்லின் மீது அமர்ந்து வந்தவர் ஸ்பீட் பிரேக்கரில் வண்டி ஏறி இறங்கும் போது தவறி விழுந்து தலையில் அடிப்பட்டு விட்டதாகவும் இப்போழுது ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டி சென்றதாகவும் கூறி வர சொன்னான்.
சுந்தரேசனும் கதிரும் டிரைவர் சொன்ன மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சென்று மருத்தவரிடம் விசாரிக்க அவர், " அவங்க கடைசி நிமிசத்துல இருக்காங்க தலையில் பலமா அடிப்பட்டதால உயிர் பிழைக்க ரொம்ப வாய்ப்பு கம்மி தான் இருந்தாலும் எங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணிருக்கோம்".
"அவங்ககிட்ட போய் பேசனும்னா பேசுங்க..." என்று விட்டு சென்றார்.
உடனே சுந்தரேசன் தன் மனைவிக்கு கைப்பேசியில் அழைத்துத் தாலி ஒன்று வாங்கி கொண்டு பின் முத்தமிழையும் தன் அம்மாவையும் ஹாஸ்பிட்டலிற்கு அழைத்து வர சொன்னார்.
மோகம் :2
சுந்தரேசன் தன் மனைவியிடம் கூறியதும் பதறியவர் தன் அத்தையிடம் அனைத்தையும் கூறி முத்தமிழ் வீட்டிற்கு இருவரும் சென்றனர்.
இங்கு முத்தமிழ் தன் வீட்டிற்கு தன் அத்தையும் அம்மாயி வந்ததும் சிரித்த முகத்துடன் "வாங்க அத்தை வா அம்மாயி" என்று அழைத்து தண்ணீர் குடுத்தவள் அவள் அம்மாயிடம் வம்பு வளர்த்தாள்.
அவளிடம் அம்மாயி முத்து கிளம்பு கொஞ்சம் வெளிய போய்ட்டு வந்துருவோம் என்றதும் அவள் எதும் சொல்லாமல் அவர்களுடன் கிளம்பினாள்.போகும் வழியில் என்ன அம்மாயி உன் பேரனுக்கு பொண்ணு பாக்க போறீங்களா என்று கேட்டாள்.
எப்பொழுதும் தான் வம்பிழுத்தால் சரிக்கு சமமாக பேசும் அம்மாயி இன்று எதுவும் பேசாமல் வருவது அவளுக்கு மனது ஏதோ சரியில்லை என்று தோன்றியது.
முத்தமிழுக்கு ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்ததுமே ஏதோ ஓர் உணர்வு நெஞ்சமெல்லாம் அடைத்தது.
அங்கு வராண்டாவில் மாமாவும் கதிரும் நிற்க அவர்களைக் கேள்வியாக பார்த்தாள்.
சுந்தரேசன் அவளை அழைத்துக்கொண்டு வசந்தி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு தன் அம்மாவை அப்படி ஒரு நிலைமையில் அவளால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.."ம்மா "என்று கத்திக்கொண்டே தன் அன்னையிடம் சென்றாள்.
"என்னமா ஆச்சு அம்மா எழுந்திரு மா அம்மா ப்ளீஸ் நீ இல்லனா நான் என்ன மா பண்ணுவேன் அம்மா என்ன விட்டுப்போகாத மா" என்று கூறினாள்.
கதிருக்கு அவளை சமாதான படுத்த வேண்டும் பேராவல் எழுந்தது.
வடிவும் அப்பத்தாவும் அழுதனர். முத்தமிழைப் பார்க்க பாவமாக இருந்தது. சுந்தரேசன் தன் மனைவியிடம் "நான் கேட்டது எங்கே வாங்கிட்டு வந்தியா "என்றதும் எடுத்துக் கொடுத்தார்.
பின் சுந்தரேசன் வசந்தி படுத்திருந்த கட்டிலிடம் நெருங்கி கதிரைத் தன்னருகில் அழைத்தவர் அவனிடம் தாலியைக் கொடுத்த முத்தமிழ் கழுத்தில் கட்ட சொன்னார்.
அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இந்த நிலமையில் எதும் பேச முடியாது என்று தாலியைக் கையில் வாங்கி வசந்தியைப் பார்த்தான்.
அவர் எதும் பேச முடியாமல் கண்ணைத் தன் மகளை நோக்கிக் காட்டினார்.
முத்தமிழ் எதையும் உணரும் நிலையில் இல்லை அழுது கொண்டே இருந்தாள்.
அவர் கண்ணைக் காட்டியதும் தன் குடும்பத்தார் அனைவரையும் திரும்பிப் பார்த்தான் "கட்டு கதிரு சீக்கிரம்" என்றதும் எதும் பேசாமல் அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான்.
தன் கழுத்தில் தாலியைக் கட்டியதும் அதிர்ச்சியோடு நிமிர்ந்து கதிரைப் பார்த்தாள்.
அந்த பார்வையில் என்ன இருந்தது என்பது அவளுக்கு மட்டுமே வெளிச்சம்.
கதிரின் கையையும் முத்தமிழ் கையையும் சேர்த்து தன் கையில் வைத்து அழுத்தி கண்களை மூடியவர் தான் அதற்கு மேல் அவர் கண்களைத் திறக்கவே இல்லை.
தன் அம்மா இனி திரும்பி வர மாட்டார் என்று தெரிந்ததும் கதறி அழுதாள்.
"அம்மா அம்மா" என்று ஏங்கி ஏங்கி அழவும் கதிர் மனது தாங்காமல் அவள் கைகளைப் பிடித்தான்.
அவன் பிடித்ததும் அவனைப் பிடித்துக் கொண்டு " அத்தான் அம்மா இனி வர மாட்டார்களா" என்று அவனிடம் கேட்டு அழுது கொண்டு இருந்தாள்.
பிறகு சுந்தரேசன் கதிரிடம் சென்று "கதிர் நீ புள்ளைய கூட்டிட்டு அவங்க வீட்டுக்குப் போ நான் இங்க எல்லா வேலையும் முடிச்சிட்டு வரேன் "என்றதும் கதிர் முத்தமிழிடம் "தமிழ் வா வீட்டுக்குப் போலாம் "என்று அவளை அழைத்தான்.
அவள் அடம்பிடித்து "நான் வரமாட்டேன், நான் அம்மாகிட்ட போறேன், என்னை விடுங்க ...நான் அம்மாகிட்ட போகனும்" என்று கத்தி கதறினாள்.
கதிருக்கு ஒன்றும் புரியவில்லை இப்படி கத்தி கதறுபவளை என்ன சொல்லி தேற்றுவது என்று அவனுக்கு தெரியவில்லை.
கத்தியவள் சிறிது நேரத்தில் சுய நினைவை இழந்து அவன் மேலே சரிந்தாள்.அவள் மயங்கி சரிந்ததும் கைகளில் அள்ளியவன் மருத்தவரிடம் காட்ட ''அதிர்ச்சியால வந்த மயக்கம்தான் இன்னும் கொஞ்ச நேரத்துல எழுத்துடுவாங்க'' என்றார்.
அவள் எழுவதற்குள் தான் வந்த காரில் அவளைப் படுக்க வைத்தவன் வீட்டிற்கு அழைத்து வந்தான்.
பின்பு சற்று நேரத்தில் ஆம்புலன்சு சத்தம் கேட்கவும் எழுந்தவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை .
பின்பு தான் கழுத்தில் தாலியைக் கண்ட பின்பு தான் அவளுக்கு நினைவு வந்தது.
"அம்மா" என்று வந்தவள் அங்கு முற்றத்தில் தன் அம்மாவை ஒரு பலகையில் படுக்க வைத்து இருந்தார்கள்.
அவரை சுற்றி அனைவரும் அழுது கொண்டிருக்க தன் அம்மாவிடம் பாய்ந்து ஓடினாள்.
"அம்மா என்ன விட்டுப் போக உனக்கு எப்படி மாமனசு வந்துச்சு" என்று கதறி அழுதாள்."அம்மா அம்மா" என்று அழுதாள்.
பின்பு கதிர் தான் மருமகன் என்ற முறையில் அவருக்கு அனைத்தும் செய்து அவரை அடக்கம் செய்தனர்.
கதிர் தமிழின் கழுத்தில் தாலி கட்டிய விஷயம் ஊர்க்காரர்களில் யாருக்கும் தெரியாது.
பின்பு வடிவு தமிழைத்தன் வீட்டிற்கு அழைக்க "நான் வரலை அத்தை அப்புறம் வரேன் கொஞ்ச நாள் இங்க இருக்கேன்" என்று கெஞ்சிக் கேட்கவும் சுந்தரேசன் "அப்பப்போ வந்து பார்த்துக்கலாம் கொஞ்ச நாள் அவளைத் தனியா விடுங்க "
தமிழின் வீடு வயலின் ஒதுக்குப்புறமாக இருந்தது. கதிரின் வீடு ஊருக்குள் கொஞ்சம் தொலைவில் இருந்தது.
கதிர் தான் இந்த ஒருவாரமாக அவளுக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவான்.அவள் சாப்பிடுவாள் என்று முதல் நாள் வைத்து விட்டு போனவன் அடுத்த நாள் அப்படியே இருக்கவும் அவளிடம் கொடுக்காமல் அவள் அருகில் அமர்ந்தான்.
அழுது அழுது முகம் வீங்கி இருந்தது.அவன் அவளின் அருகில் அமரவும் திரும்பிப் பார்த்தாள் என்ன என்பது போல்.
அதனை உணர்ந்து "எவ்ளோ நாள் சாப்பிடாம பட்டினி கிடப்ப நீ சாப்பிடாம இருந்தா போனவங்க வந்துடுவாங்களா" என்று அதட்டியவன் சாதத்தைப் பிசைந்து அவள் வாயறுகே எடுத்துச் சென்றான்.
அவள் வாயைத் திறக்காமல் இருக்கவும் "இப்போ சாப்டுறியா இல்லையா" என்று தன் குரலில் கடுமையைக் காட்டினான்.
பின்பு அவனைப் பார்த்துப் பயந்தவள் "ஆ.."என்று வாயைத் திறக்கவும் ஊட்டி விட்டான்.
ஊட்டி முடித்ததும் கையைக் கழுவியவன் "எவ்ளோ நாள் இங்கேயே இருக்குறதா உத்தேசம்" என்றவன் "எப்போ நம்ம வீட்டுக்கு வர "என்று கேட்டான்.
"நானே வருவேன் "என்றவள் ஒன்றும் சொல்லாமல் அவனுக்கு முதுகுக் காட்டிப் படுத்துக்கொண்டாள்.
அவள் படுத்ததும் தன் தம்பி பார்த்திக்கு அழைத்து அவனை இங்கு வர சொன்னவன், அவன் வந்தவுடன் அவளுக்குத் துணைக்கு இருக்கும் படி கூறிவிட்டு சென்றான்.
பார்த்தி அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.அவன் கேட்டதிற்கு மட்டும் பதில் சொன்னாள்.அவளாக எதும் பேசவில்லை .
கதிரே தினமும் வந்து அவளுக்கு சாப்பாடை அரட்டி உருட்டி ஊட்டி விட்டுச் செல்வான்.
இரவு கதிரின் அப்பத்தா தமிழுக்குத் துணைக்குப் படுத்துக் கொள்வார்.
இன்று பஞ்சாயத்தில் அனைவரும் அந்த ஆலமரத்தடியில் கூடியிருந்தனர். பஞ்சாயத் தலைவர் "பிராது யாருப்பா குடுத்தது" என்றதும் ஒன்றுமே தெரியாதது போல் வந்து நின்று "நான் தான் ஐயா கொடுத்தேன்" என்றான் அந்த ஊரின் பெரிய பண்ணையாரின் மகன் தீனா.
அவனை பார்த்து கதிர் முறைத்தான்.
"என்னப்ப உன் பிராது எதுக்கு இவங்க மேல பிராது குடுத்துருக்க" என்று கதிரையும் தமிழையும் சுட்டிக்காட்டி அவனிடம் கேட்டார்.
தீனா அதற்கு "அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் இரவில் சந்தித்துக்கொள்கிறார்கள்" என்றும் நேற்று இரவு கதிர் தமிழின் வீட்டுக்குப் போனதாகவும் கூறினான்.
பஞ்சாயத்து தலைவர் கதிரைப் பார்த்து "நீ முத்தமிழ் வீட்டுக்குப் போனியாப்பா " என்று கேட்டார் அவன் ஆமென சொல்லவும் அங்கிருந்த கூட்டம் சலசலக்கத் தொடங்கியது.
"கொஞ்சம் அமைதியா இருங்க" என்று பஞ்சாயத்து தலைவர் சொன்னதும் சலசலப்பு நின்றது.
பின் கதிரிடம் திரும்பி "ஏன்"என கேட்டார்.
"ஐயா என் பொண்டாட்டி வீட்டுக்குப் போக நான் ஏன் அடுத்தவங்களை அனுமதி கேக்கணும்...கண்ட கண்ட நாய் போல அர்த்த ராத்திரில தனியா இருக்குற பொண்ணுக்கிட்ட போய் வம்பு பண்ணல ...நான் என் பொண்டாட்டி வீட்டுக்கு தான் போனேன்".
இதோ ஆதாரம் என்று தன் பக்கத்தில் நின்றவளின் கழுத்தில் கிடந்த தாலி கயிற்றை எடுத்துக்காட்டினான்.
திரும்பவும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அமைதியாக இருக்க சொன்ன தலைவர் கதிரைப் பார்த்து "எப்போ உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தது "என்று கேட்டார். கதிர் நடந்தது அனைத்தையும் கூறினான்.
அவன் கூறியதைக் கேட்டு முகம் வெளிறி போய் தன் எதிரில் நின்றவனைப் பார்த்து நக்கலாக சிரித்தான்.
"அய்யோ தெரியாம இவன் பொண்டாட்டி மேல கைய வைக்கப் பார்த்தோமே" என்று நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தான்.

Post a Comment