மோகமுள் -5

 



மோகமுள் - 5:


தன் முன்னிருந்த மேசையில் பட்டென்று ஒரு தட்டு தட்டி, “என்ன பண்ணி வச்சுருக்காங்க? எத்தனை முறை சொன்னாலும் புரியாதா? இந்த அளவுக்கு டெண்டருக்கு கோட் பண்ணினா நமக்கு எப்படி டெண்டர் கிடைக்கும்.? ஷிட்..” என்று மேசை மீதிருந்த போனை எடுத்தவன் ஒரு இலக்கத்தை அழுத்தி, “மிஸ் மித்ரா! கம் டூ மை ரூம்..” என்று வைத்து விட்டான்.


“ஐயோ!! என்ன தப்பு பண்ணினோம்னு தெரியலையே? இவரு ஏன் கத்துறாரு? காதுல இருந்து ரத்தமே வந்துரும் போல.. எம்மா!!” என்று அவன் குரலுக்கே பயந்து நடுங்கினாள்.


பயத்தில் நடுங்கிய உடம்பை கண்டு, ‘ச்சே.. அவர் குரலுக்கு இது ஏன் இப்படி நடுங்குது? இதுக்கே இப்படி என்றால் இன்னும் நாம செய்து வச்சிருக்க வேலைக்கெல்லாம் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ’ என்று தனக்குள் புலம்பியவாறு முகத்தை ஒன்றும் தெரியாதது போல் வைத்துக் கொண்டு, ‘ஆதீரன் சக்கரவர்த்தி எம்.டி’ என்று பெயர் பலகை தாங்கி நின்ற கதவை இரண்டு முறை தட்டி விட்டு உள்ளே சென்றாள்.


அதுவரை மேசையில் இருந்த கணினியில் தன் தலையைப் புதைத்திருந்தவன், இவள் வந்த சத்தம் கேட்டு நிமிர்ந்தவன்

அவளைக் கண்டு அதிர்ந்தான்.


“மிஸ் மித்ரா!!” என்று அதிர்ச்சியாக அழைத்தவன், “ஒஹ்.. சாரி மிஸஸ்?” என்று அதற்கு மேல் கூறாமல் நிறுத்தவும், சிறிது தைரியம் வரப்பெற்றவளாய் அவனிடம் தொண்டையை செருமிக் கொண்டு “மிஸஸ் மன்மதன் சார்..” என்று சிரியாமல் கூற அவளை முறைத்தான் ‘என்ன இது’ என்பது போல்.


அவனுக்கு பதில் கூறியதும் அவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை… அவன் முறைப்பதைக் கண்டு படாதப்பாடு பட்டு ‘அடியேய் சிரிச்சு தொலச்சிறாத.. கண்ணாலையே பஸ்பமாக்கிருவாறு’ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு பவ்யமாக “சார் கூப்டீங்களே..” என்று ஒன்றும் தெரியாத பப்பா போல் கேட்டாள்.


அதுவரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் தன் முன் மேசை மீதிருந்த கோப்பை எடுத்து அவள் முன் தூக்கிப் போட்டான்..


“என்ன வேலை இது? இப்படி கோட் பண்ணினா ஒரு ப்ரோஜக்ட் கூட நமக்கு கிடைக்காது” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.


“சார்!! அது நான் கோட் பண்ணலை.. நான் கோட் பண்ணின அமெளண்ட் இந்த கோப்பில் இருக்கு..” என்றவள் தன் கையில் இருந்த கோப்பை எடுத்து அவன் முன்னால் மேசை மீது வைத்தாள்.


“அப்போ இது?” என்று முன்பு அவளிடம் தூக்கி எறிந்த கோப்பை சுட்டிக்காட்டி கேட்க, “அது சாரா மேம் கோட் பண்ணினது சார்.. அவங்க தான் நான் கோட் பண்ணினதை தீரன் கிட்ட கொடுன்னு சொன்னாங்க..” என்றவள் அவனை பார்க்க, “மித்ரா உங்களுக்கு நான் தான் எம்.டி.. நான் உங்களை என்ன செய்ய சொன்னேனோ அதை செய்தால் மட்டும் போதும்.” என்று பற்களைக் கடித்துக் கொண்டுக் கூறினான்.


சாரா ஆதியின் நெருங்கிய தோழி.. கல்லூரி காலங்களில் இருந்தே இருவருக்கும் பழக்கம்..


சாரா, ஆதி, ஆரன் மூவரும் இணைப்பிரியா தோழர்கள்..


மூவரும் ஒரே கல்லூரியில் தான் பயின்றனர்.


‘எ.எஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி இன்று மிகப்பெரிய அளவில் திறம்பட நடத்தி வருகின்றனர்.


ஆதி அந்த நிறுவனத்தில் அவ்வளவாக குறுக்கிட மாட்டான்..


அவனுக்கு தங்கள் குடும்பத்தின் நிறுவனங்களை பார்க்கவே நேரம் போதவில்லை.. ஆதலால் தன் நண்பர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டான்.



அந்த நிறுவனத்திற்காக ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட தான் ஆரனும் சாராவும் ஜெர்மனி சென்றுள்ளனர்.



ஜெர்மனி செல்லும் முன்பு ஆதியை பார்ப்பதற்காக வந்த சாரா, ஆதியின் கேபினில் ஆதியை தேடி விட்டு அங்கு அவன் இல்லை என்றதும் மித்ராவிடம் வந்தவள், “ஹேய்!! ஆதி எங்க?” என்று திமிராக கேட்டாள்.



சாரா நல்லவள் தான்.. ஏனோ மித்ராவை கண்டாலே அவளுக்கு எரிச்சல் வருகிறது.. ஏன் என்று தான் தெரியவில்லை?.அவள் அதனை கண்டு கொண்டது போலும் தெரியவில்லை.


“சார் போரூர் ப்ரான்ச் போயிருக்காங்க மேம்..”



அவ்வளவு தான் என்பது போல், மித்ரா தன் வேலையை தொடர தன்னை உதாசீன படுத்தியது போல உணர்ந்த சாரா, “ஏய்!! என்ன பண்ற?” என்று கேட்க, “ஒரு டெண்டர்க்கு சார் கோட் பண்ணி வைக்க சொன்னாரு மேம்.. அதான் பண்ணிட்டு இருக்கேன்..”



“ஏய்!! அந்த வேலையை பற்றி உனக்கென்ன தெரியும்.. நான் கோட் பண்றேன்.” என்றவள் என்ன ப்ரொஜெக்ட் எல்லா விவரத்தையும் கேட்டு அறிந்து கொண்டவள் தான் ஒன்றை தயாரித்து அதனை மித்ராவிடம் கொடுத்து, “இதை தான் ஆதிட்ட கொடுக்கணும்..

உன்னோடது இனி தேவையில்லை..” என்றவள் மித்ராவின் கோப்பை எடுத்து கிழித்து டஸ்ட் பின்னில் போட்டவள் “பாய்..” என்று பறந்து விட்டாள்.



‘இவங்களுக்கு என்னை கண்டாலே பிடிக்கலன்னு தானே அவங்க முன்னாடி போக கூட மாட்டேன்.. 

அப்படியிருந்தும் தேடி வந்து திட்டிட்டு போறாங்க.. சப்பா இப்போவே கண்ணை கட்டுதே..’


இதையெல்லாம் நினைத்து கொண்டு நின்றவள் ஆதிக்கு பதிலளிக்காமல் நிற்கவும், “மித்ரா என்ன பகலில் கனவா..? நான் சொன்னது புரிஞ்சுதா..? சாரா இந்த கம்பெனியோட எம் டி இல்ல நான் தான்.. சோ நான் தான் உங்களுக்கு பாஸ்.. நான் சொல்றதை தான் நீங்க செய்யணும்..” என்று அழுத்தம் திருத்தமாக கூற

“ஓகே சார்..” என்றவள் மேசை மீதிருந்த கோப்பைப் பார்க்க, அவளை தொடர்ந்து தானும் கோப்பை எடுத்துப் பார்த்தவன், அவள் போட்டிருந்த தொகை அவனுக்கு திருப்தியாக இருந்ததால்

அவளிடம் நீட்டி, “இந்த அமெளண்ட் ஓகே. அடுத்து பிராஸஸ் பண்ணிடுங்க..” என்றவன் “நீங்க போகலாம்” என்று அவளைக் கண்டுக் கொள்ளாமல் கணினியில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.



ஏதோ மும்பரமாக கணினியில் பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் வேறு எண்ணங்களே அலைமோதிக் கொண்டிருந்தன.



வேறு என்ன எண்ணங்கள் ஓடும் எல்லாம் காலையில் நடந்த சம்பவங்களே ஒன்றன் பின் ஒன்றாக வந்து ஆக்கிரமித்து அவனை பாடாய் படுத்தியது.


வாங்க வாங்க நாமும் போகலாம் என்ன நடந்துச்சுன்னு பார்த்துட்டு வருவோம்..


No comments