மோகமுள்-4
மோகமுள் - 4:
சக்கரவர்த்தியின் தங்கை ஊர்மிளா சிங்கப்பூரில் தன் கணவன் பிள்ளைகளுடன் வசிக்கிறார்.
தன் அண்ணன் திடீரென்று, ‘ஆதிக்கு திருமணம்.. கிளம்பி வாம்மா’ என்றதும் “என்ன அண்ணா? இப்படி சொல்றீங்க, பொண்ணு யாரு..”
நல்ல பொண்ணா? நல்ல குடும்பமா? என்று கேட்காமல் “வசதியானவங்களா அண்ணா? நம்ம அந்தஸ்துக்கு ஏற்றவர்களா?” என்று கேட்டார்.
“நம்மகிட்ட இல்லாத பணமா ஊர்மிளா.. ஆதிக்கு பொண்ண பிடுச்சு போச்சு.. இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு.. அவன் தான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வைங்கன்னு சொன்னான்.
கல்யாணமே வேண்டாம்னு சொன்னவன் அவனே மலை இறங்கி வந்துருக்கான்.. பணம் காசு நமக்கு தேவையில்லை நல்ல பொண்ணு குடும்பத்தை அனுசரிச்சு போகும் அது போதுமே.” என்று முடித்து விட்டார்.
‘இவன் என்ன இப்படி பேசுறான்.. இவனே இப்படி பேசினா அவள் இன்னும் இதுக்கு மேல பேசுவாளே.. ச்சே இந்த கல்யாணத்துக்கு போயே ஆகணுமா..?’
ஊர்மிளா வாசுவிற்கு இரட்டையரான நிரஞ்சன் நிரஞ்சனா என்ற மகனும் மகளும் இருந்தனர்.
‘போகணுமா?!’ என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் வந்த வாசு “ஊர்மிளா!! ஆதிக்கு கல்யாணமாமே!! எனக்கு இங்க முக்கியமான மீட்டிங் இருக்கும்ம.. நீயும் பசங்களும் போயிட்டு வந்துடுங்க..”
‘அடப்பாவி மனுஷா.. இப்போ எதுக்கு இவ்வளவு சத்தமா சொல்றாரு.. நானே போக வேண்டாம் என்று நினைச்சிட்டு இருக்கேன் இவரு வேற.. நிரஞ்சனாக்கு தெரிஞ்சா போகணும்னு ஒத்த காலில் நிற்பாளே.. அவளுக்கு கேட்டுட போகுது’ என்று நினைத்து கொண்டிருக்க, அவர் நினைத்தது போலவே “அம்மா சீக்கிரம் டிக்கெட் புக் பண்ணுங்க போலாம்” என்று குதித்து கொண்டு ஓடி வந்தாள் நிரஞ்சனா.
“ஹிம்ம் போலாம்.. போலாம்..”
தன் கணவனை பார்வையாலே எரித்து விட்டு சென்று விட்டார்.
சிங்கப்பூரில் இருந்து ஊர்மிளா தன் பிள்ளைகளுடன் திருமணத்திற்கு வந்து விட்டார்.
பெண்ணழைப்பின் போது நந்தினியின் குடும்பத்தை கண்டதும் அவருக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.
‘இந்த கல்யாணம் என்ன ஆனாலும் நடக்க கூடாது. ஆதி எவ்வளவு அழகு, அவன் ரேஞ் என்ன.. இதுக அவன் போடுற செருப்புக்கு சமம் இவங்க வீட்டில இருந்து பொண்ணா அதுக்கு நான் விட மாட்டேன்.
எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தியே தீருவேன்..’ தனக்குள் சூளுரைத்து கொண்டார்.
ஆதி தன் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் முதற்கொண்டு கல்யாணத்திற்கு அழைத்திருந்தான்.
இங்கு மணமகன் அறையில் ஆதியை இளவட்டங்கள் அனைவரும் சேர்ந்து அவனை ஒரு வழி ஆக்கி கொண்டிருந்தனர்.
நந்தினியும் மணமகள் அறையில் தயார் ஆகி கொண்டிருக்க ஊர்மிளா அவர்களிடம் பேசுவதற்காக சரியான நேரம் பார்த்து கொண்டிருந்தார்.
நந்தினியுடன் மித்ராவும் அவள் தாய் சிவகாமியும் இருந்தனர்.
உள்ளே வந்த ஊர்மிளா மித்ராவிடம், “உன்னை உங்க அம்மா தேடுறாங்கம்மா.. போய் என்னன்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்துரு..” அவளை நாசுக்காக அனுப்பி வைத்தவர் அவள் சென்றதும் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு வந்தார்.
‘ச்சே.. இதுங்க கூட எல்லாம் பேசணும்னு என் விதி போல..’ மானசீகமாக தன் தலையில் அடித்து கொண்டவர் அவர்களை நெருங்கினார்.
ஊர்மிளாவை கண்டதும் சிநேகமாக புன்னகைத்த சிவகாமியிடம் “என்ன தான் இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மனசு இருக்க கூடாதுங்க..? ஒரு வேளை எங்ககிட்ட பணம் அதிகமா இருக்குன்னு பொண்ணு கொடுக்க ஒத்துக்கிடீங்களோ! இருக்கும் இருக்கும் கொஞ்சநஞ்ச பணமா இருக்கு.. கோடில சம்பாரிக்குறவன் வந்து கேட்டா, தெருக்கோடில புரள்ற உங்களுக்கு இனிக்க தான் செய்யும்.. அதான் எதையும் விசாரிக்காமல் பொண்ணை குடுக்குறீங்க போல.”
ஊர்மிளா தான் பாட்டுக்கு அசிங்கம் அசிங்கமாக பேசிக்கொண்டே போக, “என்னம்மா இப்படி எல்லாம் பேசுறீங்க.. மாப்பிள்ளை வீடுன்னா என்ன வேணாலும் பேசுவீங்களா.?”
“நான் இப்போ என்னம்மா பேசிட்டேன்? உள்ளதை தான் சொல்றேன்..”
“ஆதியை பற்றி தெரிஞ்சும், நீங்க பொண்ணு குடுக்குறீங்கன்னா வேற காரணம் என்ன இருக்க முடியும்.. பணம் தான் காரணம்..”
“உங்க வீட்டில் இருந்து தான்மா பொண்ணு கேட்டு வந்தாங்க.. நாங்க ஒன்னும் பணத்துக்காக கட்டிக்கொடுக்கலை. உங்க வீட்டாளுங்க தான் எங்க வீடு தேடி வந்து பொண்ணு கேட்டாங்க.. நீங்க இப்படி பேசுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நாங்க இதுக்கு சம்மதிச்சிருக்க மாட்டோம்.” என்று ஆவேசமாக கூறினார்.
“என்னம்மா நீங்க கத்தி பேசினால், நீங்க பணத்துக்காக கட்டிக்கொடுக்களைன்னு ஒத்துக்க முடியாது. அவனுக்கு ஆண்மை இல்லன்னு தெரிஞ்சும் பொண்ணு கொடுக்குறீங்கன்னா வேற என்ன காரணம் இருக்க முடியும். நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.”
இவர்களின் குடும்பம் பிடிக்கவில்லை.. இந்த கல்யாணத்தை நிறுத்தியே ஆக வேண்டும் என்ற நோக்கில் தன் அண்ணன் மகனின் வாழ்க்கை கேள்விக்குறியாவது கூட அவருக்கு தெரியவில்லை.
அவனுக்கு ஏற்படும் அசிங்கத்தை பற்றி பின்வரும் சிக்கல்களை பற்றி எதுவும் யோசிக்காமல் அவர்ப்பாட்டிற்கு பேசிக் கொண்டு செல்ல இங்கு இருவரும் நெஞ்சில் கைவைத்து அதிர்ந்து பார்த்தனர்.
சிவகாமி அதிர்ந்த முகத்துடன் “என்னமா சொல்றீங்க..?”
“என்னமா எதுவுமே தெரியாதது போல கேக்குறீங்க.. அவனுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு விபத்து நடந்துச்சு..பார்த்த எல்லா மருத்துவர்களும் கையை விரித்து விட்டார்கள்.
அவனால் ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாது என்று தெரிஞ்சி தானே இந்த கல்யாணத்திற்கு ஒத்துகிட்டீங்க.” என்றுவிட்டு அவர் வந்த வேலை முடிந்தது என்று கிளம்பிவிட்டார்.
அதற்குள் இங்கு வெளியில் ஐயர், “மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ..” என்று குரல் கொடுத்தார்.
பட்டு வேஷ்டி பட்டு சட்டையில் பார்ப்பவர் அனைவரையும் தன் வசம் இழுக்கும் அழகில் கம்பீரமாக நடந்து வந்து அமர்ந்தான் ஆதீரன்.
மித்ரா தன் பெற்றோருடன் எந்த வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் பொம்மை போல் நின்றிருந்தாள்.
ஐயர் சொல்ல சொல்ல அவர் கூடவே மந்திரங்களை சொல்லி கொண்டு இருந்தான் ஆதீரன்.
சிவகாமி தன் கணவனை அழைத்து விஷயத்தை கூற, அப்பொழுது “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ!!” என்ற ஐயரின் குரலில் நந்தினி மணமேடைக்கு வந்தாள்.
வந்தவள் உட்காராமல் அப்படியே நிற்கவும், அனைவரும் அவளை பார்த்தனர்.
ஆதியும் அவள் இன்னும் அமராமல் இருக்கவே யோசனையாக அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அனைவரின் பார்வையையும் கண்டவள் ஐயர், “உட்காரம்மா” என்று கூறவும், “எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை..” என்று தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி எறிந்தாள்.
அவள் மாலையை கழட்டவுமே ஆதி எழுந்தவன், அவளை ‘என்ன இது விளையாட்டு?’ என்பது போல் பார்வையால் எரித்தான்.
அதிர்ந்து போன சுமதி, “என்னமா சொல்ற? என்ன ஆச்சு? உன் சம்மதத்துடன் தானே எல்லா ஏற்பாடும் செய்தோம் இப்போ வந்து இப்படி சொல்ற..”
அவருக்கு தன் பிள்ளை முகம் சரியில்லாதது கண்டு பரிதவித்து போய் நந்தினியிடம் கேட்டார்.
“ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாத உங்க பையனை எப்படி நான் கல்யாணம் பண்ண முடியும்..”
“என்னமா உளருற?” என்று அதிர்ச்சியுடன் சுமதி கேட்க, ஆதி தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு நிற்க, ஆசீ தன் அண்ணனின் பக்கத்தில் வந்து அவன் கைகளை பிடித்துக் கொண்டான்.
இந்த விஷயம் கேள்வி பட்ட மித்ராவிற்கும் அதிர்ச்சி தான்..
“நாங்க மிடில் கிளாஸ் தான்.. அதுக்காக ஒரு ஆண்மை இல்லாதவனை என்னால் கல்யாணம் செய்ய முடியாது” என்று முகத்தில் அடித்தார் போல கூறினாள்.
“என்ன சம்மந்தி? உங்க பொண்ணை பேச விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க..”
“என் பொண்ணு ஒன்னும் இல்லாததை சொல்லிடலயே உண்மையை தானே சொல்றா.. உங்க பணத்துக்காக ஒன்னும் நாங்க எங்க பொண்ணை கொடுக்கலை.. நீங்க படியேறி வந்து பொண்ணு கேட்டீங்க நீங்களா தானே தேடி வந்தீங்க.. நல்ல குடும்பம்னு தான் நாங்க ஒத்துகிட்டோம்.. ஆனால் நீங்க உங்க பையனுக்கு இருக்கிற குறையை மறைச்சு என் பொண்ணு வாழ்க்கையை கெடுக்க பார்த்தீங்களே.. உங்க பொண்ணை இப்படி ஒரு பையனுக்கு கட்டி கொடுப்பீங்களா சொல்லுங்க .. எங்களுக்கு இருக்குறது ஒரே பொண்ணு அவள் சந்தோஷமா வாழனும்னு தான் நாங்க நினைப்போம்.. எங்க தகுதிக்கு ஏற்ப ஒரு மாப்பிள்ளை பார்த்து எங்க பொண்ணுக்கு கட்டி வச்சுக்குறோம்.. உங்க சங்காத்தமே வேண்டாம்..”
தன் கணவனிடம் “வாங்க.. பிள்ளையை கூட்டிட்டு போகலாம். எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு..”
ஆதி அனைவரின் முன்பும் அவமானமாக உணர்ந்தவன், அங்கிருந்த மணமகன் அறைக்குள் சென்று விட்டான்.
இங்கு நந்தினி மித்ராவின் குடும்பமும் கிளம்பி விட்டனர்.
சுமதி என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவர் அருகில் வந்தவள் “ம்மா! உங்க பிள்ளையை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என்று கூற புது தெம்பு வந்தது போல உணர்ந்தவர், “உன் பேரு என்னமா..?”
“ஹாசினி ம்மா..”
என்ன ஹாசினியா?
யார் இந்த ஹாசினி?
அப்பொழுது அந்த ஐஸ்க்ரீம் பெண் யார்?
மித்ரா என்னவானாள்?
மோகமுள் தீண்டும்..

Post a Comment