மோகமுள் -3
மோகமுள் - 3:
தாமு, தன் மனைவி பிரேமாவிடம், ‘நந்தினிக்கு பெரிய இடத்தில் இருந்து வரன் வந்ததை பற்றி சொல்ல’, “ஏங்க சக்கரவர்த்தி குடும்பமா! அவங்க கம்பெனியில் தானே, நம்ம பாப்பாவும் வேலைக்கு போகுது. இவளுக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷ படுவாளே.. எப்பொழுதும் அவங்க சாரோட புராணம் பாடாம உங்க பொண்ணோட வாய் ஓயாது. அவள் வரட்டும் வந்ததும் சொல்றேன்.. கண்டிப்பா சொன்னதும் வானத்துக்கும் பூமிக்குமா குதிக்க போறா..”
தன் மகளின் மனதை அறியாமல், பிரேமா தான் பாட்டுக்கு ஏதேதோ சொல்லி கொண்டிருந்தார்.
கணேசனின் தம்பி தான் தாமு.. கணேசனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களுக்கு பிறகு தான் நந்தினி பிறந்தாள்.
தாமுவிற்கும் பிரேமாவிற்கும் ஒரே மகள் மித்ரா மட்டும் தான்.
நந்தினிக்கும் மித்ராவிற்கும் ஒரு வயதே வித்யாசம்.
“நந்தினிக்கு கல்யாணம் கூடி வந்துருச்சு.. இன்னும் நம்ம பிள்ளைக்கு வரன் பார்க்காமல் இருக்கீங்க..”
தன் ஆதங்கத்தை கணவனிடம் வெளிப்படுத்த, “எவடி இவ..
இப்போ பிள்ளைக்கு என்ன வயசு ஆகி போச்சுன்னு கல்யாணம் பண்ணி வைக்க சொல்ற.. இன்னும் ஒரு வருஷம் போகட்டும். நேரம் காலம் நிறையவே இருக்கு.. அதுவா கூடி வரும்.”
“ஏங்க! இப்போவே அவளுக்கு இருபத்திரண்டு வயசு ஆகிடுச்சு.” என்று தாயாய் பயம் கொண்டார்.
அப்பொழுது தான் வேலைக்கு செல்ல, தன் அறையில் இருந்து வந்த மித்ரா, “என்ன காலையிலேயே மாநாடு நடக்குது?
என்னை விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் அப்படி என்ன கதை பேசிட்டு இருக்கீங்க..? ஹிம்ம் எனக்கு தெரியாமல் இங்க என்ன ரகசியம் ஓடுது?.”
அவர்களை இடித்து கொண்டு அமர்ந்தவளின் தலையில் இடியென விழுந்தது அவர்கள் கூறிய செய்தி.
“மித்ரா!! உங்க சார் இருக்காருள்ள..”
“ஹிம்ம்.. ஆமா இருக்காரு.. அவருக்கென்ன?”
“அவரை பற்றி தான் சொல்ல போறேன்..”
“ஏது! நீ சொல்ல போறியா!! என்ன ம்மா நான் தானே எப்பொழுதும் எங்க சாரை பற்றி சொல்லுவேன்.. இப்போ என்ன புதுசா நீ சொல்றேன்னு வந்து நிக்கிற..”
“எல்லாம் நல்ல விஷயம் தான் டி.. அவரு உன் தங்கச்சியை எங்கேயோ பார்த்துருப்பார் போல, பார்த்ததும் பிடுச்சிருச்சாம்.
இப்போதான் அவங்க வீட்டில் இருந்து வந்து பேசிட்டு போனங்களாம். உங்க பெரியப்பா இப்போதான் அப்பாகிட்ட போனில் சொன்னாரு..”
ஆட்டமாக ஆடி ஆர்ப்பரித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்துவாள் என்று நினைத்த பெற்றோரை ஏமாற்றுவது போல “ஒஹ்!!” என்று ஒரு வார்த்தை மட்டும் தான் அவளிடம் இருந்து பதிலாக கிடைத்தது.
“என்னடி? உன் ரியாக்ஷன் இவ்ளோதானா..! உங்க எம் டி சாரை பற்றி பேசினால், தையாதக்கன்னு அப்படி குதிப்ப.. இப்போ என்ன ஆச்சு?”
அவள் அப்பொழுதும் அமைதியாகவே இருக்க, “என்னடி ஆச்சு உனக்கு..?”
அவளை உலுக்கி, “உங்க சார் நடந்தா இப்படி இருக்கும், பார்த்தா அப்படி இருக்கும்னு சொல்லுவ.. இப்போ என்ன வாயே திறக்காமல் இருக்க..”
“ஏய்!! விடு பிரேமா..”
தன் மனைவியை அதட்டியவர் “என்னடா ஆச்சு..?”
தாமு பரிவாக கேட்கவும், “தலைவலிப்பா.. நான் போய் லீவ் சொல்லிட்டு படுக்கிறேன்.”
சோபாவில் இருந்து எழுந்தவளை, “இதுக்கு தான் ஐஸ்க்ரீம் சாப்பிடாதன்னு சொன்னா கேட்டால் தானே.. சொல்ற பேச்சை கேட்காமல் வண்டி வண்டியா வாங்கி கொட்டிக்கிறது. பின்பு மூக்கை உரிஞ்சிட்டு, தலை வலிக்குது அது வலிக்குதுன்னு போர்வை போத்தி படுத்துக்குறது..”
தன் மகளை திட்டிய மனைவியிடம், “பிரேமா.. சின்ன பிள்ளை விடு..” என்றவர் மித்ராவை நோக்கி, “நீ போய் தூங்கு டா.. எல்லாம் சரியா போகும்..”
தன் அறைக்கு வந்தவள், அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அருவியென கொட்ட, கதவை சாற்றியவள் அதன் மேல் சாய்ந்து முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.
“சார்.. சார்..!” ஏங்கி ஏங்கி அழுதாள்.
எதற்கு அவளுக்கு அழுகை வருகிறது? என்று அவளுக்கே தெரியாத நிலை.
தன் தங்கையை பெண் கேட்டிருக்கிறான்.. அதற்கு ஏன் தனக்கு அழுகை வருகிறது? என்று சுத்தமாக புரியவில்லை.
‘நான் ஏன் அழுகிறேன்? நல்ல விஷயம் தானே..’ என்று ஒரு மனம் நினைத்தாலும், இன்னொரு மனமோ, ‘இந்த விஷயத்தை என்னால் ஜீரனித்து கொள்ள முடியவில்லை’ என்று கதறியது.
பாவம் அந்த சிறு பெண்ணுக்கு அது காதல் என்று தெரியவில்லை.
காதலா? இல்லை அது வேறெதுவுமா? என்று அவளுக்கு தெரியவில்லை.
அவன் மேல் கொண்ட அதீத பக்தியோ இல்லை நாள் முழுவதும் அவனை பற்றிய சிந்தனையோ.. என்னவோ ஒன்று அவன் அவளின் மனதின் அடி ஆழம் வரை சென்று வேரூன்றிருக்கிறான்.
இதுவரை அவளை பொறுத்தவரை அவன் கருவறையில் வசிக்கும் தெய்வம்..
மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளல்.
அவளோ எட்டி இருந்து அவனுக்கு பூஜை செய்யும் சாதாரண பக்தை அவ்வளவே..
எட்டி இருந்தே ரசித்து பழகியவள்.
அவள் மனதில் அவனுக்கு இப்படித்தான் வரிவடிவம் கொடுத்து வைத்திருந்தாள்.
தான் நினைப்பது அனைத்தையும் அவனிடம் மனதிற்குள்ளே சொல்லி விட்டு தான் மறுவேலை பார்ப்பாள்.
அவன் இல்லையெனில் அவள் உலகம் இயங்காது என்னும் அளவிற்கு அவளுக்குள் அவன் புகுந்திருந்தான்.
துக்கமோ இன்பமோ எதுவாகினும் அவனிடம் பகிர்ந்தால் மட்டுமே அவளால் நிம்மதியாக இருக்க முடியும்.
இப்பொழுதும் ஏன் அழுகிறோம் என்று தெரியாமல் அவனிடமே முறையிட்டாள்.
“சார்.. ஏன்னு தெரியலை..?”, கண்ணீரை துடைத்து தேம்பிய குரலில் “எனக்கு அழுகை அழுகையா வருது. எதுக்குன்னு தெரியல.. ஆனால் நிக்காம அழுகை வந்துட்டே இருக்கு. மனசுக்கு வேற ரொம்ப கஷ்டமா இருக்கு .. இப்போ என்ன பண்றதுன்னு தெரியலை சார்..”
அழுகையில் புலம்பி தள்ளினாள்.
“எனக்கு ஏன் சார் இவ்ளோ கஷ்டமா இருக்கு..? என் தங்கச்சிக்கு தானே நல்ல விஷயம் நடக்க போகுது, அதுக்கு ஏன் எனக்கு இத்தனை அழுகை வரணும். ஐயோ அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேனா.. அவ்வளவு மோசமானாவளா நான். இல்லை.. இல்லவே இல்லை.. நான் அப்படி கிடையாது. நீங்க தான் எல்லாத்துக்கும் காரணம். நான் உங்களால் தான் இப்படி யோசிக்கிறேனா?. நான் இவ்வளவு கெட்டவளா..? நான் இப்படி மாறுவதற்கு காரணம் நீங்க தான் சார். ஐ ஹேட் யூ சார்.. ஐ ஹேட் யூ..”
தன் தலையில் அடித்து கொண்டு அழ அவளின் அலைப்பேசி அழைத்தது.
‘சார்..’ என்று திரையில் மின்ன வெறி வந்தவள் போல் “நீ போ.. நீ வேண்டாம்.. நீ எனக்கு வேண்டாம்.. நான் உன்கிட்ட பேச மாட்டேன்..” என்று போனை தள்ளி விட்டாள்.
திரும்பவும் அழைப்பு வர, தன் கண்களை துடைத்து கொண்டவள் எழுந்து சென்று போனை எடுத்து காதில் வைத்தாள்.
“ஹலோ மித்ரா..!” கம்பீரமான குரல் அந்த பக்கம் இவளை அழைக்க
“ஹலோ சார்..” இந்த பக்கம் இவள் நலிந்து போன குரலில்.
“மித்ரா!! ஆர் யூ ஓகே?”
அவன் அவ்வாறு கேட்டதும் வந்த அழுகையை அடக்கி கொண்டு “எஸ் சார்.. கொஞ்சம் தலைவலி.. ஹிம்ம் நான் லீவ் எடுத்துக்கலாமா சார்..? மெயில் பண்ணனனும்னு நினைச்சேன் முடியல..”
“இட்ஸ் ஓகே மித்ரா.. இன்னைக்கு எத்தனை மீட்டிங்ஸ்? அந்த டீடெயில்ஸ் எங்க வச்சுருக்கீங்க..?”
“சார்.. என்னோட சிஸ்டெம்ல சேவ் பண்ணி வச்சிருக்கேன்..”
“ஓகே மித்ரா.. டேக் ரெஸ்ட்.” என்று வைத்து விட்டான்.
அவனுக்கு மித்ராவும் நந்தினியும் சகோதரிகள் என்று தெரியாது.
அவன் அழைப்பை துண்டித்ததும் சிறிது நேரம் அழுதவள் அப்படியே தூங்கி விட்டாள்.
இரண்டு மணி நேரம் கழித்து எழுந்தவள், எதுவும் நடக்காதது போல் கீழே வந்து தன் தாயிடம் வம்பிழுக்க ஆரம்பித்து விட்டாள்.
(ஒரு வேளை தூங்கினா எல்லாம் மறக்கிற வியாதியோ)
அதன் பிறகு வந்த நாளும் அவர்களின் கல்யாண பேச்சுகள் யாராவது பேசினாலும் அப்படியே நகர்ந்திடுவாள்.
இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் இரண்டு வாரத்தில் திருமண நாளை குறித்திருந்தனர்.
ஆதி நந்தினியிடம் தன் அலைப்பேசி எண்ணை கொடுத்து அவளுடையதையும் வாங்கி கொண்டான்.
போனில் மட்டும் இருவரின் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.
சக்கரவர்த்தியின் இல்லத் திருமணம் என்றால் சும்மாவா..
அனைத்தும் ஜரூராக நடந்து கொண்டிருந்தது.
அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த திருமண நாளும் வந்தது.
அப்பொழுது அந்த ஐஸ்க்ரீம் பெண் யார்?
ஒருவேளை மித்ராவாக இருப்பாளோ?
மோகமுள் தீண்டும்..

Post a Comment