மோகமுள் -6
மோகமுள் - 6:
‘அப்பாடி போய்டுச்சுங்க இந்த பிச்சைக்கார கூட்டம்.. ச்சீ ஒரு தகுதி தராதரம் வேண்டாம்.. வேற பெண்ணே இல்லையா பெரிய ரதிதேவி.. ஊர்ல இல்லாத அழகி பாரு.. இந்த முகரகட்டைக்களுக்கு இவ்ளோ பேச வருது.. என் ஆதி ரேஞ் என்ன? அழகென்ன? அவன் கால் தூசிக்கு சமம்.. இவங்களுக்கு என் ஆதி கேட்குதா.’
‘எப்படியோ இந்த கல்யாணம் நின்னுடுச்சு.. அதுவரைக்கும் எனக்கு நிம்மதியா இருக்கு..’ என்று நந்தினி குடும்பம் சென்றதும் சிறு கவலை கூட இல்லாமல் அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு அங்கு வேலை செய்யும் ஒருவனை அழைத்து, “ஏய் தம்பி ஒரு ஜூஸ் எடுத்துட்டு வா..”
“அதுங்ககிட்ட பேசி பேசியே என் தொண்டை தண்ணி வத்தி போச்சு,ரொம்ப தாகமா இருக்கு.. கொஞ்சம் சில்லுன்னு எடுத்துட்டு வா..” என்று அவனை ஏவ, ‘இங்க என்ன பிரச்சனை நடந்துட்டு இருக்கு.. இந்தம்மா ஜூஸ் கேட்குது’ என்று நினைத்து கொண்டு அவர் கேட்டதை எடுத்து வர சென்றான்.
ஆசீ, நிரஞ்சனா, நிரஞ்சன் மூவரும் ஆதி அறையில் இருக்க இங்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார் சுமதி.
தன் மகன் முகம் வாடி சென்றதை இன்னும் அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை..
‘ஐயோ!! என் பிள்ளைக்கு இப்படி ஒரு தலைகுனிவு ஏற்படனுமா.. அவன் பார்க்க தானே இரும்பு போல இருப்பான்.. மனசு தாங்க மாட்டானே.. இப்போ என்ன பண்றதுன்னு தெரியலையே கடவுளே.. எனக்கு ஒரு வழியை காட்டு..’
‘என் பிள்ளை இப்படி எல்லார் முன்னாடியும் தலைகுனிந்து போறத என்னால பாக்க முடியல.’
ஏதோ திக்கு தெரியாத காட்டில் கண்ணை கட்டி விட்டது போல, ஒன்றும் செய்ய முடியாமல் நின்று கொண்டிருந்தார்.
இப்பொழுது அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. இனி அவன் திருமணம் செய்ய ஒத்துக் கொள்வானா என்பது தெரியவில்லை.
தன் மகனை அறிந்தவராக, அவருக்கு நன்றாக தெரியும்.. கண்டிப்பாக இனி திருமணத்திற்கு அவன் ஒத்துக் கொள்ளப் போவதில்லை என்று..
அவர் மனதில் நின்றது எல்லாம் ஒன்றே ஒன்று தான் அவரின் ஆதி மட்டும்.
இந்த நிலையில் கையை பிசைந்து கொண்டு நிற்பதை தவிர வேறு எதுவுமே தோன்றவில்லை.
இங்கு நந்தினி வீட்டாருடன், தன் பெற்றோர்களுடன் மித்ரா சென்று கொண்டிருந்தவள், என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை.
உடனே தன் தாய் தந்தையின் கையைப் பிடித்து நிறுத்தி, “அப்பா ஒரு நிமிஷம் என் கூட வாங்க..”
“எங்கமா?”
“அங்க தான் மண்டபத்துக்கு..”
“ஏன்மா..? ஏதாவது மறந்து வச்சுட்டு வந்துட்டியா..?”
“இல்லை ப்பா.. ப்ளீஸ்!! வாங்க என்கூட..” என்று வலுக்கட்டாயமாக அழைத்தாள்.
“இப்ப எதுக்குமா..? அங்க போகணும் வேண்டாம்.. வா வீட்டுக்கு போவோம்” என்று அழைக்க,
“இல்லப்பா.. நான் கொஞ்சம் அவங்ககிட்ட பேசணும்” கையை பிசைந்த படி கூறினாள்.
இவர்கள் இருவருக்கும் சுத்தமாக விளங்கவில்லை..
‘இவ அங்க போய் அப்படி என்ன பேசப்போற?’ என்று நினைத்துக்கொண்டு, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. அவங்க எவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்து, இந்த கல்யாணத்தை நடத்தி இருக்காங்க.. அவங்களுக்கு எவ்வளவு தைரியம்?. எல்லாம் பணம் இருக்குற திமிரு.. நம்மால் எதுவுமே செய்ய முடியாதுன்னு நெனச்சிகிட்டு தான் அவங்க இந்த அளவுக்கு போய் இருக்காங்க..
நம்மால் அவங்கள எதுத்து ஒன்னும் பண்ண முடியாது.. அவங்களுக்கு பெரிய பெரிய இடத்துல எல்லாம் ஆள் இருக்கும்..
நீ வாம்மா போகலாம்..” என்று அழைக்க,
“இல்லப்பா.. நான் போயாகணும்.. அவங்க கிட்ட பேசணும்..” என்று அடமாக நிற்பவள், அவர்களுக்கு புதிது.
“அவங்க பணம் படைச்சவங்க மா.. அவங்க கிட்ட இனி நமக்கென்ன வேலை.. பணம் கொட்டி கிடக்குள்ள அந்த திமிர் அவங்ககிட்ட இருக்கத்தான் செய்யும்.. நீ அவங்க கிட்ட எதுவும் பேச வேண்டாம் .. நாம நம்ம வேலைய பார்க்கலாம்..”
“எப்படியோ நந்தினியோட வாழ்க்கை தப்பிச்சது.. இந்நேரம் அந்த பையனை கட்டியிருந்தால், அவள் எவ்வளவு சிரமப்பட வேண்டியது இருக்கும்.. நமக்கு இதுவரைக்குமே இந்த விஷயம் தெரியலை.. ஆனா எப்படியோ கடவுளா பார்த்து நமக்கு தெரிய வச்சிருக்கார் எப்படியோ நந்தினியோட வாழ்க்கை தப்பிச்சுது ஆண்டவன் புண்ணியத்துல..” என்று இருவரும் பேசிக்கொள்ள, “அப்பா ப்ளீஸ் வாங்க..” என்று அழைக்க இதற்கு மேலும் மறுக்க முடியாமல், “சரி வா போகலாம்” என்று சம்மதித்தார்.
“இப்ப எதுக்குடி அவரை கூப்பிட்டுக்கிட்டு இருக்க..? அவங்க முகத்துல நம்ம இனிமேட்டு முழிக்க கூடாது. எவ்ளோ பெரிய விஷயத்தை மறைத்து கல்யாணம் நடத்த முயற்சி பண்ணி இருக்காங்க.. இதுக்கு அவங்க மேல கேஸ் போடலாம் தெரியுமா?” என்று பிரேமா கத்த தொடங்கிவிட்டார்.
“அம்மா நீ வாய மூடு..” என்று அதிகாரம் செய்தவள், “ப்பா ப்ளீஸ் வாங்க.. எனக்காக ஒரே ஒரு முறை.. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.. ப்ளீஸ்..! ப்ளீஸ்..!” என்று இருவரையும் மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றாள்.
அங்கு சக்கரவர்த்தியும் சுமதியும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, அவர்களின் முன்பு போய் நின்றவள், “மேடம்..!” என்று அழைத்தாள்.
தன் மகனின் வாழ்க்கை இப்படி ஆனதை சுமதியால் ஜீரனித்து கொள்ள முடியவில்லை..
மீண்டும் மீண்டும் தன் மகன் கண்கள் கலங்கி நின்ற காட்சியே நியாபகம் வந்தது.. அதனை தாங்க முடியாமல் சுமதி கண்கள் கலங்கி அமர்ந்திருக்கவும், அந்த நேரம் இவள் கூப்பிடவும் ‘என்ன?’ என்று அவளைப் பார்த்தார்.
“மேடம்..!” என்று சற்று தயங்கியவள், “நான் உங்க பையனை கல்யாணம் செய்து கொள்கிறேன்..” என்று தடாலடியாக அவரிடம் கூற மித்ராவின் பெற்றோர் அதிர்ந்து போயினர்.
இதனை சற்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.. என்று அவர்களின் முகத்தில் இருந்த அதிர்ச்சியே காட்டிக் கொடுத்தது.
மித்ராவின் பெற்றோருக்கு அவள் கூறியதை கேட்டு அதிர்ச்சிதான்.
‘என்ன இவளுக்கு பைத்தியம் பிடிச்சுருச்சா?’ என்று நினைத்துக்கொண்டு, “ஏய்! மித்ரா என்ன டி லூசு போல பேசிட்டு இருக்க.. வா வீட்டுக்கு போகலாம்.”
பிரேமா சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்.
எங்கே தன் மகளின் வாழ்க்கை கெட்டு விடுமோ என்று.
பிரேமா சத்தம் போடவும், “அம்மா! ப்ளீஸ் மா! கொஞ்சம் அமைதியாய் இரு.. நான் அவங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்ல..” என்று அடக்க பார்க்க,
“என்ன டி பேச போற? ஹான்.. நீ ஒன்னும் பேசி கிழிக்க வேண்டாம்.. முதலில் கிளம்பு.. இங்கிருந்து வா போகலாம்..” என்று அவள் கையை பிடித்து இழுக்க, அவள் நின்ற இடத்தை விட்டு ஒரு இன்ச் கூட நகரவில்லை.
அவள் அடமாக நிற்பதை கண்டு பயந்த பிரேமா, “மித்து கண்ணு.. வேண்டாம்டா, உங்க சார், உங்க சார்னு சொல்லி.. உன் வாழ்க்கையை கெடுத்துக்காத.. அம்மா சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளு மித்ரா..” என்கவும்,
“அம்மா..! சாரை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.. அவரு இப்போ ரொம்ப கஷ்டத்துல இருக்காரு.. என்னால அதை பார்த்துட்டு எப்படி சும்மா இருக்க முடியும்.. ப்ளீஸ் ம்மா.. என்னை புரிஞ்சிக்கோம்மா..” என்று மன்றாடினாள்.
அவள் பேச பேச ஒன்று சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார் தாமு.
அவரால் இன்னும் நம்ப முடியவில்லை, தன் பெண்ணா இப்படி பேசியது என்று.
மித்ரா தன் தந்தையைப் பார்த்து கண்களை சுருக்கி, “ப்ளீஸ் ப்பா!!” என்று கெஞ்ச ஒன்றும் பேசாமல் பார்த்து கொண்டிருந்தார்.
மித்ரா சுமதியை பார்க்க, அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அவள் கூறியதை கேட்டதும் புது தெம்பு வந்தது போல் உணர்ந்தார்..
ஆனால் மித்ராவின் தாய் தந்தையை கண்டவுடன் இவர்களும் இங்கு தானே இருந்தார்கள்.. எப்படியும் பெண்ணை கட்டி கொடுக்க சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடனே அமைதியாகிவிட்டார்.
“பிரேமா வா போகலாம்.. இனி நமக்கு பிள்ளை இல்லை என்று நினைச்சுக்கோ.. வா போகலாம்.” என்று மனைவியை அழைத்தவர் மித்ராவை கண்டு, “என் பொண்ணு செத்து போய்ட்டான்னு நினைச்சுக்குறேன்.. எப்படியோ போ..” என்று சென்றுவிட்டார்.
மித்ராவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது.
அவளுக்கு இப்பொழுது, தான் செய்வது தவறா? சரியா? என்று தெரியவில்லை.
ஆனால் அவன் முகம் வாடி, கண்கள் கலங்கி நின்றவனை கண் கொண்டு பார்க்க முடியவில்லை அவளால்.
அவனுக்கு இப்படி ஒரு குறையா என்று அவளால் நம்பவே முடியவில்லை. நந்தினி அவனை ஆண்மையற்றவன் என்று கூறியதும் அவன் கண்கள் கலங்கி முகம் கருத்து நின்றது இன்னும் அவள் கண்களில் வந்து நின்றது.
அவனை அவ்வாறு பார்க்க, அவளுக்கு கண்கொண்டு பார்க்க முடியவில்லை. ஏதோ உள்ளுக்குள் பிசைந்தது.
‘ஏன் சார் எனக்கு இப்படி தோணுது? என்னால உங்கள இப்படி பார்க்க முடியலையே.. யாரு முன்னாடியும் நீங்க தலைகுனிந்து நிற்கிறது நான் விரும்ப மாட்டேன். நீங்க அந்த நேரத்தில் எவ்வளவு அவமானமாக உணர்ந்து இருப்பீங்கன்னு எனக்கு புரியுது.
ஆனால் நான் இந்த முடிவு எடுக்கிற போது, எங்க அப்பா அம்மா கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னு நல்லா தெரியும். எனக்கு அவங்களும் முக்கியம் நீங்களும் முக்கியம். நான் ஏன் இப்படி யோசிக்கிறேன்னு எனக்கு தெரியல, இது சரியா தப்பானும் தெரியல.
எனக்கு நீங்க யாரு முன்னாடியும் தலைகுனிந்து நிற்க கூடாதுன்னு தோணுது..’ என்று மனதோடு எப்பொழுதும் போல் அவனிடம் உரையாடினாள்.
மித்ரா தன் தாய் தந்தை சென்ற வழியே கண்கள் கலங்கியவாறு பார்த்துக்கொண்டிருக்க, சுமதி அவளிடம் வந்தவர், “உன் பேரு என்னமா..?” என்று கேட்டார்.
கண்களை துடைத்து கொண்டவள், “என் பேரு ஹாசினி மேடம்..” என்றதும் அவர் திரும்பி சக்கரவர்த்தியை பார்க்க, “நம்ம கம்பெனியில் தான் வேலை செய்றா.. நம்ம ஆதியோட பி.ஏ வா வொர்க் பண்றா சுமதி.. பேரு மித்ராஹாசினி நல்ல திறமையான பொண்ணு.”
“மித்ரா அந்த பொண்ணு சொன்னதெல்லாம் உண்மை இல்லமா.. அவங்ககிட்ட யாரோ தப்பா சொல்லி இருக்காங்க..” என்று சுமதி கூற “மேடம்!! அவங்க என்னோட பெரியப்பா பொண்ணு தான்.
நந்தினி நல்ல பொண்ணு தான்.. ஆனா யாரு பேச்சை கேட்டுகிட்டு இப்படி பேசினால் என்று எனக்கு தெரியல. ஆதிக்கு ஆக்சிடெண்ட் ஆனது எல்லாம் உண்மைதான்மா. ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆக்ஸிடெண்ட்ல அவனுக்கு அடி பட்டுருச்சு.. கொஞ்சம் இரு.. நான் சொல்றதை விட அவனுக்கு ட்ரீட்மென்ட் பார்த்த டாக்டர் சொல்றதை நீ கேட்டுக்கோமா..” என்று அங்கிருந்த முல்லைநாதனை அழைக்க, அவளிடம் வந்தவர் ஆதியின் உடல்நிலையை குறித்து அனைத்தையும் கூறினார்.
முல்லைநாதன் ஆதியை பற்றி அனைத்தையும் கூற அதனை கேட்டவள் சுமதியிடம், “இது எதுவும் எனக்கு தேவை இல்லை மேடம், எனக்கு என்னனு தெரியல.. நான் யோசிக்கிறது சரியா தப்பான்னு கூட தெரியல.. ஆனா எனக்கு சார் கஷ்டப்படுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அவரு மனசுக்குள்ள ரொம்ப கஷ்டப் பட்டிருப்பார் வெளியே ஏதும் சொல்லல. அவர் கண் கலங்கி நின்றதை பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. அவரை நான் கல்யாணம் பண்ணா இந்த அவமான அவருக்கு இருக்காதுன்னு தோணுது.”
ஏனோ அவளுக்கு கண்கள் கலங்கியது.
“நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் மேம்.. இதுக்கு சார் ஒத்துக்குவங்களான்னு தெரியல.. நீங்க சார் கிட்ட பேசிட்டு சொல்லுங்க..” என்கவும் தன்னை போலவே தன் மகனின் மீது இத்தனை அக்கறை கொண்ட பெண்ணை இனியும் விட தோணுமா சுமதிக்கு.
“இன்னும் என்னம்மா மேடம்? அத்தைன்னு கூப்பிடு.. இல்லை அத்தம்மான்னு கூப்பிடு..” என்று அவள் கலங்கிய கண்களை துடைத்து விட்டார்.
“அத்தை!! எனக்கு உங்க பையனை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் தான். ஆனால் உங்க அளவுக்கு பணக்காரங்க இல்லை.. உங்க ஸ்டேட்டஸ்க்கு ஏத்த பொண்ணு இல்ல.. உங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் உங்க பிள்ளைய நான் பத்திரமா பாத்துப்பேன், என் கடைசி மூச்சு இருக்கும் வரை அவரை சந்தோஷமாக பாத்துக்குவது என்னோட பொறுப்பு.. அது மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்”
“நீ உண்மையா தான் சொல்றியா மா..? என் பையனை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?” என்று மீண்டும் தெளிவு படுத்திக் கொண்டார்.
அவள் ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டவும் ஆயிரம் வாட்ஸ் பல்பாக அவர் முகம் ஒளிர்ந்தது.
சற்று நேரத்தில் அவர் முகம் ஒளியிழந்து போனது.
“இதுக்கு உங்க அம்மா அப்பா ஒத்துப்பாங்களாமா? நான் அவங்ககிட்ட போய் பேசவா?” என்று கேட்டார்.
“வேண்டாம் அத்தை.. இப்போ அவங்க கோவமா தான் இருப்பாங்க.. எனக்கு வேற வழி தெரியல.. எனக்கு அம்மா அப்பாவும் முக்கியம்.. சாரோட மனசும் கஷ்டப்படுக் கூடாது. அவருக்கு ஏற்பட்ட கலங்கத்தை எப்படியாவது போக்கணும்னு இருக்கு.. அதுக்கு இந்த கல்யாணம் தான் ஒரே வழி.”
“இந்த விஷயத்துல வேற என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல.. என்னால முடிஞ்சது அவரை கல்யாணம் பண்ணிக்கிறது தான்.
யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. இப்போ நீங்க போய் என் அம்மா அப்பாகிட்ட பேசினாலும், அவங்க கோபப்பட தான் செய்வாங்க.. வேண்டாம் அத்தை கொஞ்ச நாள் போகட்டும் எல்லாம் சரியாகிடும். என்ன விட்டுட்டு அவங்களால் இருக்க முடியாது.. கண்டிப்பா அவங்களே வருவாங்க. நீங்க அதை பத்தி கவலை படாதீங்க.”
சுமதிக்கு தன் பிள்ளையின் வாழ்வு என்னாகுமோ என்ற வருத்தம் இருந்தது. ஆனால் இப்பொழுது சுத்தமாக இல்லை.
மீண்டும் மித்ராவிடம் ஒருமுறை கேட்டுக் கொண்டார், “உனக்கு ஓகே தானே. என் பையனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே, பாவம் பார்த்தெல்லாம் கல்யாணம் பண்ண வேண்டாம்மா.
என் பையன் இன்னும் கொஞ்ச நாள் போனா சரியாகிடுவான்.. அவன் நல்ல மனசுக்கு நல்லா இருப்பான்.”
“அப்படி இல்ல அத்தை.. பாவம் பார்த்து செய்யுற அளவுக்கு நானும் இல்லை நீங்களும் அந்த இடத்தில் இல்லை.
எனக்கு உங்க பையனை பிடிக்கும்.. அதனால் தான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா இது லவ்வான்னு எனக்கு தெரியல பட் எனக்கு அவரு சாமிக்கும் மேல.. எனக்கு அவரோடு அவர் கூடவே இருந்தாலே போதும்.. அவருடைய ஒவ்வொரு செயலையும் நான் ரசித்து இருக்கேன் தினமும்.. கடவுளுக்கும் மேல தான் நான் அவரை பாக்குறேன்.”
அப்படி அவள் கூறவும் சுமதி சக்கரவர்த்தியை நோக்க, அவர் கண்களால் சம்மதம் கூறினார்.
சுமதிக்கு கையும் புரியவில்லை.. காலும் புரியவில்லை.. தன் மகனின் வாழ்வு இத்தோடு அஸ்தமனமாகி விட்டது என்று நினைத்த நொடி தேவதையாக வந்து நின்றவள் மித்ரா.
அவளுக்கு தான் என்ன கைமாறு செய்ய போகிறோம் என்று தெரியவில்லை.. ‘நல்லா இரும்மா’ என்று வாழ்த்தியவர் அதன்பிறகு ஒரு நொடி கூட சுமதி தயங்கவில்லை.
உடனே அங்கிருந்த தன் உறவுக்கார பெண்களை அழைத்து மித்ராவை திருமணத்திற்கு தயார் படுத்த கூறினார்.
அதன் பிறகு தான் ஆதியின் அறைக்கு வந்து, அவனை சமாதானப் படுத்த முயன்று, தோற்றுப் பின் அவனை பிளாக் மெயில் செய்து கல்யாணத்திற்கு ரெடியாக சொன்னதும் நடந்தது.
இதனை அறிந்த ஊர்மிளா இப்பொழுது என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென முழித்தார்.
தன் மனதில், ‘அந்த அன்னக்காவடியை விரட்டிவிட்டால், இந்த அன்னக்காவடி வந்து நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் நிக்குது.. புள்ள வளர்த்து வச்சு இருக்காங்க பாரு’ என்று மித்ராவின் பெற்றோரை மனதில் சாடினார்.
இப்பொழுது அவரால் எதுவும் செய்ய முடியாத நிலை. அங்கு மணமகள் அறையில் திருமணத்திற்காக உறவுகார பெண்கள் சூழ தயாராகிக் கொண்டிருந்த மித்ராவை கண்டு, ‘கல்யாணம் தானே இன்னைக்கு முடியும்.. இனிமே அந்த வீட்ல நீ எப்படி வாழப்போறன்னு நான் பாக்கத்தானே போறேன். உன்னையெல்லாம் கல்யாண மண்டபத்தில் விட்டதே தப்பு. எவ்வளவு தைரியமாக அண்ணி கிட்டே கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லுவ.. நீயே ஓடுவ பாரு.. உன்னை விரட்டி அடிக்கிறேன்’ என்று தன் மனதில் சூளுரைத்துக் கொண்டார்.
சுமதி மித்ரா ரெடியாகிறாளா என்று பார்த்து விட்டு ஆதி அறைக்கு வந்தவர், “கண்ணா ரெடி ஆயிட்டியா.. சீக்கிரம் வா லேட்டாகுது..
நல்ல நேரம் முடிய போகுது.. சீக்கிரம் வா வா..” என்று ஆரவாரமாக அழைக்க, “நல்ல நேரம் முடிஞ்சா என்ன? கெட்ட நேரம் ஆரம்பிச்சா எனக்கு என்ன..? எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.. புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க.. என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை கெடுவதை பாக்க முடியாது.. என் மனசாட்சியே என்னை கொன்று விடும்.”
“இப்போ இந்த கல்யாணம் நடந்துட்டா மட்டும்.. நான் பட்ட அவமானம் இல்லைன்னு ஆயிடுமா.. என்னை கொஞ்சம் புரிஞ்சிக்கோங்கம்மா..
நானும் மனுஷன் தான்மா இயந்திரம் இல்லை.. எனக்கும் வலிக்கும் ப்ளீஸ் மா புரிஞ்சிக்கோங்க.. எனக்கு இந்த கல்யாணத்துல துளி கூட விருப்பம் இல்லை.. இப்ப இந்த கல்யாணம் முடிஞ்சுட்டா மட்டும் எல்லாம் சரியா போகுமா..” என்று நா தழுதழுக்க வினவினான்.
“எல்லாம் சரியா போகும் கண்ணா.. வா போகலாம் பொண்ணு வெயிட்டிங்..” என்று அவனை அழைத்து சென்றார்.
அதன்பிறகு பொம்மை போல், அவர்கள் செய்ய சொன்னதை செய்து முடித்தவன் எதையும் கண்டு கொள்ளவில்லை..
தன் பக்கத்தில் வந்து அமர்ந்தவளை ஏறெடுத்தும் பார்த்தானில்லை..
மேளம் முழங்க மங்களநாணை கட்டியதும் தன் வேலை முடிந்தது என்பது போல் எழுந்து சென்றுவிட்டான்.
அவன் நேரே சென்றது அவனுடைய ஆஸ்தான கம்பெனிக்குத்தான்..
மோகமுள் தீண்டும்…

Post a Comment