நந்தனின் கண்ணம்மா -3




 நந்தனின் கண்ணம்மா - 3:


காலையில் எழ முயன்றவனால் முடியவில்லை. 


அவன் கண்ணம்மா, அவன் தலையை தன் நெஞ்சோடு வைத்து, தன் கைகளால் சிறை செய்தபடி தூங்கி கொண்டிருந்தாள்.


அவள் அணைப்பில் இருந்தவனால், தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு படாதாபாடு பட்டுப் போனான்.


இவன் மெதுவாக அவள் கையை விலக்க பார்க்க, அப்போது தான் அவள் தூக்கத்தில் அவனை இன்னும் தன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டாள்.


“ ஐயோ... இவ வேற மனுஷனோட நிலைமை புரியாம இப்படி தூங்குறா... கும்பகர்ணன் தங்கை போல,” என்று நினைத்து கொண்டு, “அம்மணி எழுந்தா தான் நான் எழுந்துக்க முடியும்,” என்று நினைத்து கொண்டே படுத்திருந்தான்.


கனி, தன் மாமனுடன் கனவில் டூயட் பாடிவிட்டு மெதுவாக தூக்கம் களைந்தாள். 


அவளிடம் அசைவு தெரியவும், “அப்பாடி,” என்று நினைக்கும் போதே, அவள் கைகளை விளக்கவும், இவன் வேகமாக எழுந்து பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.


கனி எழுந்ததும், தன் மாமனைத் தான் தேடினாள். 


பாத்ரூமிலிருந்து சத்தம் வரவும், “சரி, கொஞ்ச நேரம் படுப்போம்,” என்று படுத்தாள்.


“ஊருக்கு போனதும் அம்மா, அப்பாவை எப்படி ஃபேஸ் பண்றதுன்னு தெரியலையே... மாமா வேற எல்லாம் சொல்லிட்டேன்னு சொல்றான்... அவனைத் திட்டுனாங்களா? இல்ல என்ன சொல்லிருபாங்கனு தெரியலையே...” என்று நினைத்து கொண்டு இருந்தவளை, ரிஷிதான் களைத்தான்.


“கனி போய் ரெடி ஆகு. பத்து மணிக்கு ஃப்ளைட். சீக்கிரம் ரெடி ஆகு போ,” என்றவனை, “ஃப்ளைட்லயா போறோம்? அப்போ அந்த கார் யாருது?” என்று கேட்டவளை, “கார் விஷ்ணுதான் வாடகைக்கு எடுத்து குடுத்தான். மாமாதான் ஃப்ளைட்டுல டிக்கெட் புக் பண்ணினாரு,” என்று சொல்லிக்கொண்டே சென்றவன், “ ஐயயோ... சாரி டா விஷ்ணு. தெரியாம சொல்லிட்டேன்” என்று மனதால் விஷ்ணுவிடம் மன்னிப்பு வேண்டியவன் அவளைப் பார்த்தான்.


அவளோ இடுப்பில் கை வைத்து கொண்டு முறைத்துக் கொண்டு இருந்தவளை பார்த்து, “ஹிஹிஹி... பாவம் விஷ்ணு... பார்த்து பதமா பண்ணு மா,” என்றான்.


“அவன் வரட்டும் இருக்கு... அவனுக்கு,” என்று சொல்லிக்கொண்டே குளிக்க சென்றாள். 


இவன் அவளது உடைகள், உடைமைகள் எல்லாவற்றையும் எடுத்து ஒரு டிரால்லியில் அடுக்கி வைக்கவும், அவள் வரவும் சரியாக இருந்தது.


அவள் மேனியில் துண்டு மட்டுமே ஆடையென இருக்க, அவளுக்கு எப்படியோ... ஆனால் இவன் பாடுதான் படு மோசமானது. 


“சீக்கிரம் ரெடி ஆகி வா கனி” என்று கூறி வெளியே சென்றவனை கண்டு, மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.


“Dumdum Airport”


இருவரும் செக் இன் செய்து, போர்டிங் செய்து, விமானத்தில் அமர்ந்தார்கள்.


இருவரும் வேறு வேறு மனநிலைகளில் பயணித்தனர். 


அவனோ, “என் கண்ணம்மா எனக்கு இல்லையா... நீ இல்லாம நான் எப்படி இருக்க போறேன் கண்ணம்மா...” என்று நினைத்து கொண்டு இருந்தவனை நெருங்கி அமர்ந்து, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.


“அம்மா, அப்பா எதாவது சொல்வாங்களோ?” என்று இவளுக்கு பயம்; அவனுக்கோ, “அவன் கண்ணம்மா அவனுக்கு இல்லையா?” என்ற கவலை.


முன்பு நடந்தவைகள் அனைத்தையும் நினைத்து பார்த்தான்.


பொள்ளாச்சி அருகில் உள்ள ஐயம்பாளையம் தான் இவர்களின் சொந்த ஊர். 


பெரியவீட்டுகாரர் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவரது பெயர் கந்தசாமி; அவரது மனைவி செண்பகம். இவர்களுக்கு ஒரு மகன் சுதர்ஷன் மற்றும் ஒரு மகள் கவிநிலா.


அந்த ஊரிலேயே உள்ள சோமசுந்தரம் மகனை காதலிக்கிறேன் என்று தன் தந்தையிடம் கவிநிலா கூறியதும், அவர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், “வந்து பெண் கேட்க சொல்,” என்றார்.


சோமசுந்தரம் மகனை பற்றி அவருக்கும் தெரியும். நல்ல பையன்; பொள்ளாச்சியில் உள்ள இரண்டு மில்களை பொறுப்பாக பார்த்துக் கொள்கிறான். “வேற என்ன வேண்டும்?” என்று தான் சம்மதம் சொன்னார்.


சுந்தரத்திற்கு ராஜா என்ற ஒரு மகன் மற்றும் மகள் நிராந்திரா மட்டுமே. அவரது மனைவி இரு வருடங்களுக்கு முன்பு புற்று நோய்க் காரணமாக இறந்துவிட்டார். கவி, ராஜாவை சந்தித்து, “தந்தை பெண் கேட்க வர சொல்கிறார்,” என்றதும், இவனும் தன் தந்தையுடன் பேசி கூட்டி வருவதாக சொன்னான்.


அவன் தனது தந்தையிடம் சொன்னதும், அவரும் பெண் கேட்க வந்தார். அவர்களை வரவேற்று உபசரித்து பேசத் தொடங்கியதும், “எனக்கு ஒரு பெண் இருக்கிறாள், அவள் பெயர் நிரந்திரா. அவளுக்கு கல்யாணம் முடித்து விட்டு ராஜாவுக்கு பண்ணலாம்னு இருந்தேன்.


ஆனா, அவன் உங்க பொண்ணு விரும்புறதா சொன்னான். உங்களுக்கும் ஒரு மகன் இருக்கான். இது தான் என் பொண்ணு. ஃபோட்டோ பார்த்து விட்டு முடிவு சொல்லுங்க. 


உங்களை கட்டாயப்படுத்தல. உங்க மகனுக்கு பிடித்தால், இரண்டு திருமணமும் ஒருசேர நடத்தலாம். இல்லையென்றால், என் மகளின் திருமணத்தை முடித்து விட்டு ராஜாவின் கல்யாணத்தை நடத்தலாம்,” என்று சொன்னார்.


சுதர்ஷினிடம் ஃபோட்டோ காட்டியதும் மறுக்க காரணம் எதும் இல்லை என்பதால், அவனும், “பெண்ணை மணந்துக்கொள்கிறேன்,” என்று சொன்னதால் நால்வருக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது.


கவி–ராஜா இவர்களின் புதல்வன் தான் ரிஷி நந்தன். நந்தனுக்கு இரண்டு வயதாகியதும், தங்கள் குலதெய்வக் கோவிலில் மொட்டையடித்து காது குத்துவதற்காக அனைவரும் புறப்பட்டனர்.


ராஜா–கவி–சுந்தரம் ஒரு காரிலும், சுதர்ஷன் குடும்பம் ஒரு காரிலும் வந்தனர். சுதர்ஷன்–நிரந்திராவிற்கு இன்னும் குழந்தை இல்லை என்றதால், ரிஷி என்றால் இருவருக்கும் பிரியம்.


அதிகமாக செல்லம் கொடுப்பதால், அவனும் “அத்தை, அத்தை,” என்று இவளிடம் தான் இருப்பான். கோவில்சென்று வழிப்பட்டுவிட்டு வரும் போது, “நான் அத்தை கூடப் போறேன்,” என்று சொல்லி சுதர்ஷன் காரில் ஏறிக் கொண்டான்.


வரும் வழியில், ராஜாவின் கார் ப்ரேக் பிடிக்காமல் போக, மரம் ஒன்றில் மோதி நின்றது. அந்த காரில் இருந்த சுந்தரம், ராஜா, கவி மூவரும் அந்த இடத்திலேயே உயிரை விட்டனர்.


நந்தனுக்கு ஆறு வயது இருக்கும் பொழுது நிரந்திரா கருவுற்றார். ரிஷியிடம் அதை சொன்னதும், “ஐயோ, ஜாலி ஜாலி எனக்கு பாப்பா வரப்போகுது! நான் தான் அவளை பாத்துப்பேன்; அவக் கூட விளையாடுவேன்!” என்று சொல்லி, அவள் வயிற்றில் இருந்த அவன் ‘கண்ணம்மா’க்கு முத்தமிட்டான்.


“பாப்பா எப்போ வெளியே வரும்?” என்று தொல்லை செய்வான் சுதர்ஷனை. அவர், “இன்னும் எட்டு மாதம் கழித்து பாப்பா வரும் டா,” என்பார்.


மாதங்கள் கடந்தது. 


கனிஷ்கா வந்ததும் அவளை பிரிய மாட்டான் எப்பொழுதும் .


 முதலில் தொடவே பயந்தவன், இவனை தன் குட்டி கண்களால் கண்டு புன்னகைத்ததும், அவன் தன் கை விரலை நீட்டியதும், கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.


அன்றிலிருந்து இன்று வரை கனிஷ்கா தான் அவனுக்கு எல்லாம். அவன் பள்ளி விட்டு வந்ததும், கனியை தூக்கி கொண்டு சுற்றுவான்.


கனிக்கும் தன் மாமன் என்றால் உயிர். 


தன் அறையில் அவளுடன் விளையாடுவது, அவளுக்கு ஒரு புத்தகத்தை குடுத்து அதிலிருந்த படங்களை காட்டுவான். ஆனால், அம்மணி அவனது புத்தகத்தை கிழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள்.


கனி பள்ளி செல்லும் நாளும் வந்தது. ரிஷி படிக்கும் பள்ளியில்தான் அவளும் சேர்ந்தாள். ரிஷி, அவளை கூட்டி கொண்டு அவள் வகுப்பறையில் விட்டு செல்லும் போது, குடுகுடுவென அவன் பின்னாலேயே வந்து, அவன் கைகளை பற்றிக் கொண்டு, “தூக்கு!” என்றாள்.


“என்னடா பாப்பா! வா, உன் கிளாஸ்ல விடுறேன். டீச்சர் சொல்றத கேட்டு நல்ல பிள்ளையா இருப்பியாம். மாமா நடுவுல வந்து உன்ன கூட்டிட்டு போறேன்,” என்று சொல்லி அவளை விட்டுச் சென்றான்.


ஆனால், அவளோ அவன் சொல்வதை கேட்டு தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக்கொண்டு, அவன் விட்டுச் சென்ற அடுத்த பத்தாவது நிமிடம், அவன் வகுப்பறையில் நின்றிருந்தாள். அதுவும், அந்த பள்ளியின் தாளாளர் உடன்.


அவன் வகுப்பில் பாடம் எடுத்து கொண்டிருந்த ஆசிரியர், “வெளியே என்னவென்று?” கேட்டதும், “இந்த வகுப்பில் நந்தன் என்று யாராவது இருந்தால், கொஞ்சம் வெளியே அனுப்புங்கள்,” என்றார்.


அவனை கூப்பிட்டதும், வந்தவனை கண்டு இறுக்கி கட்டிக் கொண்டாள். “நா போக மாட்டேன்! நீயும் வா!” என்றாள். தாளாளர், “இதை பார்த்து விட்டு, உன் வகுப்பில் உன்னுடன் உட்கார வைத்துக்கொள். நான் ஆசிரியரிடம் கூறுகிறேன்,” என்றார்.


அவன், அவளை அழைத்துக் கொண்டு சென்று தன் பக்கத்தில் அமரவைத்தான். அவளோ அவன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டு, அவள் பையில் இருந்த சாக்லேட் எடுத்து, அவளும் சாப்பிட்டு, அவனுக்கும் ஊட்டினாள்.


வகுப்பில் இருந்த அனைவரும் இவர்களையே பார்த்துக் கொண்டு இருந்ததை ஆசிரியர் பார்த்துவிட்டு, “எல்லாரும் இங்க கவனிங்க,” என்று கூறி பாடம் எடுக்க ஆரம்பித்தார்.


கொஞ்ச நேரத்தில் அவள் அவன் மேல் சாய்ந்து கொண்டு தூங்கி விட்டாள். இவன், அவளை தன் மடியில் நன்றாக படுக்க வைத்து தட்டி கொடுத்து தூங்க வைத்தான்.


வகுப்பு முடிந்து அந்த ஆசிரியை, இவனிடம் வந்து, “உங்க பெற்றோர்களை வந்துப் பார்க்கச் சொல்,” என்று சொல்லிவிட்டு சென்றார்.


மதியம், அவளுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கும் போது, கதிர் – ரிஷியின் நண்பன் வந்து, “இந்த வால ஏன் டா கூட்டிட்டு வந்த?” என்றான்.


“யாரு வாலு? உனக்குத்தான் வாலு இருக்கு,” என்று, “எங்க பாட்டி சொன்னாங்க. நீ தான் குரங்கு மாதிரி ஒரு மரத்தில இருந்து இன்னொரு மரத்துக்கு தாவுறியாம்,” என்று அவனை பார்த்துச் சொன்னாள்.


“மாமா, நான் சொன்னது சரிதானே?” என்று கேட்டாள். “ஆமா டா, அவன் தான் தென்னை மரம் ஏறி நம்ம தேங்காய் லாம் சுடுவான்,” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.


“இதுக்கு மேல இங்க இருந்தா அவ்ளோதான்! நான் போறேன் பா,” என்று ஓடிவிட்டாள். அவள் சென்றதும் இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.


நந்து, கனி ரெண்டு பேரும் எழுந்துறீங்க என்று நிரு இவர்களை எழுப்பி கொண்டிருந்தாள்.


கனிக்கு தனியாக அறை இருந்தாலும், அவள் ரிஷி கூட தான் இருப்பாள். ரிஷி இன்று தான் கல்லூரி முதன்முதலாக செல்கிறான். நேற்று இரவு அவன் தான் தன் அத்தையிடம் சீக்கிரம் எழுப்பி விட சொன்னான்.


கனி ஏழாவது படித்து கொண்டிருந்தாள். அவன் எழுந்ததும், கனியை எழுப்பினாள். அவள் அம்மா, "டிஸ்டர்ப் பண்ணாத மா. தூக்கம் தூக்கமா வருது," என்று திரும்பி படுத்தாள்.


"ரிஷி, விடுங்க அத்தை தூங்கட்டும். நான் குளிச்சுட்டு வந்து எழுப்பி விடுறேன்," என்று சொன்னதும், அப்போது சுதர்ஷன், "நிரு!" என்று கூப்பிடும் குரல் கேட்டதும் அவர் அங்கு சென்றார்.


இவன் குளித்து முடித்து, துண்டுடன் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு, தன் முகத்தில் வளர்ந்திருந்த தாடி, மீசையை ட்ரிம் பண்ணியதை பார்த்து, "நல்லாதான் இருக்கு," என்று யோசித்து கொண்டிருக்கும் போதே, துண்டு அவிழ்ந்து விழவும், "ஐயோ!" என்று கத்தி, துண்டை எடுத்து கட்டி கொண்டு கட்டிலை பார்த்தவன், "அப்பாடி! குட்டிமா இல்ல."


ஆனால் அவன் அப்போது தான் யோசித்தான், "யாரோ இழுத்து விட்டது மாதிரி தானே இருந்தது?" என்று அவன் யோசிக்கும் போதே உள்ளே வந்த கனி, "நான் தான் அவிழ்த்து விட்டு ஓடினேன்," என்றதும், "அடிங்க உன்னை!" என்று அடிக்க வந்தவனை “வெவ்வ் வெவ்” என்று வக்கலம் காட்டி ஓடிவிட்டாள்.


இவன் சிரித்து கொண்டே உடை அணிந்து கொண்டு ஹாலுக்கு வந்தான். அங்கு அனைவரும் இவனுக்காக காத்திருந்தனர்.


சுதர்சன், அவருடைய தந்தை கந்தசாமி, செண்பகம் – அனைவரும் அமர்ந்திருந்தனர்.


நிரந்திரா, அனைவருக்கும் பரிமாறி விட்டு, அனைவரும் சாப்பிட்டதும், அவரை ரிஷி அமர்த்தி, அவருக்கு பரிமாறினான்.


இது எப்பொழுதும் நடப்பதுதான் என்பது போல, அனைவரும் அவ்விடம் விட்டு களைந்தனர். 


"ஹ்ம்ம்... தினமும் தாங்க முடியல கடவுளே!" என்றாள் கனி. "போடி, உனக்கு பொறாமை. என் மருமகன் என்னை கவனித்து கொள்கிறான்," என்றதும், "ஆமா ஆமா, ரொம்ப பொறாமை தான்!"


இதைக் கேட்டு கொண்டு சிரித்தவனின் அருகில் வந்து, அவன் கையில் நருக்கென கிள்ளி விட்டு ஓடிவிட்டாள்.


ரிஷி, தன் அத்தையிடம் சொல்லி கொண்டு கல்லூரிக்கு செல்ல வெளியே வந்தான். 


அங்கு தோட்டத்தில் தன் தாத்தா, பாட்டி இருப்பதை கண்டு, அவர்களிடம் சொல்லி கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டான்.


வெளிக் கதவைத் தாண்டும் முன், "டேய் நந்தா!" என்று மொட்டை மாடியில் இருந்து குரல் வந்தது. 


வேறு யாராக இருக்க முடியும்? அவனது குட்டிமா தான். "அவன் பை!" என்று கை ஆட்டியதும், இவளும், "பை!" சொன்னாள்.


ஆனால், தான் கல்லூரிக்கு சென்று இரண்டு மூன்று மணி நேரம் கூட ஆகிருக்காது, உடனே லீவ் போட்டு வீட்டுக்கு வருமாறு அழைப்பு வந்தது.


No comments