மோகம் -2




 மோகம்-2 :


"ஐயோ..! கடவுளே.." என்ற இவள் குரலில் சிரித்தவர்கள் இவள் பக்கம் திரும்பினர்.

மித்ரன் அவளை பார்த்து "என்ன வேணும்..?" என்றான்.


அவள் அவனை பயத்துடன் பார்க்கவும்.. "நான் என்ன சிங்கமா..? புலியா..? கடிச்சா தின்னுட போறேன்..!" என்று தனக்குள் கேட்டுக்கொண்டவன் வெளியில் அவளை முறைத்தான். 


"எதுக்கு இப்படி முறைச்சு பாக்குறாங்க..? எற்கனவே பயமா இருக்கு..! இதுல இவர் வேற முறைச்சு முறைச்சு பாக்குறார்.." என்று தனக்குள்ளே பேசிக்கொண்டாள்.


விக்கி அவள்பால் இரக்கம் கொண்டு " நீங்க பயத்துடன் பார்த்தால்.. இன்னும் முறைச்சுதான் பார்ப்பான்.. அதனால் எப்பொழுதும் போல நார்மலா இருங்க" என்று சிரித்த முகமாக கூறினான்.


"யாரு..? என்னன்னு ஒன்றுமே தெரியாமல்..! நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்..?" என்று மனதோடு பேசியவள் விக்கியைப் பார்த்து சிநேகமாக சிரித்தாள்.


அதை பார்த்த மித்ரன் அவளது சிரித்த முகத்தை தன் மனதில் பதிந்து கொண்டான். "அண்ணா" என்று தயங்கி தயங்கி விக்கியை அழைத்தாள்.. அவள் அழைத்ததும்.."என்னையா அண்ணான்னு கூப்பிட்ட..?" என்றான். அவள் ஆமென தலையாட்டியதும்.. மித்ரன் விக்கியிடம் "ஏன..? அவ என்ன அண்ணா என்று கூப்பிடுவாள் நினைச்சியா..!"என்றான். 


"ஆமாம் மச்சான்.. அப்படி மட்டும் நினைச்சு பாரேன..!" என்றதும் மித்ரனின் முகம் வெலக்கெண்ணெய் குடித்தது போலானது. அவன் முகம் போனப்போக்கை பார்த்து வாய் விட்டு சிரித்தாள்.


அதை விக்கி கனிவுடன் பார்த்தானென்றால்.. மித்ரனோ காதலுடன் பார்த்தான். அவன் பார்வை தன்னை எதுவோ செய்ய.. தன் பார்வையை விக்கி பக்கம் திருப்பி அவனிடம்.. "நீங்க போலீஸ் இல்லையா அண்ணா..? "என்று உள்ளுக்குள் பயந்துக்கொண்டே கேட்டாள்.


அவன் "இல்லை" என்று தலையாட்டியதும் பயத்துடன் விக்கியைப் பார்த்தாள். "உன் சித்தியை மிரட்டி வைக்கத்தான் அப்படி சொன்னான்" என்று அவளிடம் கூறிவிட்டு வண்டி ஓட்டுவதில் தன் கவனத்தை செலுத்தினான்.


பின்பு சிறிது நேரம் கழித்து ஒரு ஹோட்டலில் சாப்பிட இறங்கினார்கள்.. மித்ரன் விக்கியிடம் தனியாக குடும்பத்தினர் அமர்ந்து சாப்பிடும்படி ஒரு அறையை புக் செய்ய சொன்னான்.


அவன் முன்னே செல்ல.. மித்ரன் மதி இறங்க கை நீடடவும்.. அவளும் அவன் கையை பிடித்து இறங்கிவிட்டு சிறிது நேரம் நடந்தவள்.. அனைவரும் அவளையே பார்ப்பதுபோல தோன்றவே.. அவள் பிடித்திருந்த அவன் கையை பதட்டத்தில் அழுத்திப் பிடித்துக்கொண்டு அவனோடு ஒட்டி நடந்தாள்.


இதுவரை அவள் வீடு.. வயல்.. இது மட்டும்தான் அவளுக்கு தெரியும்.. வெளியே இதுவரை அவள் வந்ததில்லை.. அவள் தோழி ராணியுடன் சந்தைக்கு வாராவாரம் காய்கறி விற்க செல்வாள்.. அதனால் அவளுக்கு இதெல்லாம் புதுமையாக இருக்கவே ஆர்வமாக பார்த்துக்கொண்டு வந்தாள். 


ஆனால் ஒருவன் தன்னை ஆர்வமாக பார்ப்பதை அவள் அறியவில்லை..!


மித்ரனோ தன்னை ஒட்டி வருபவளையே பார்த்துக்கொண்டு வந்தான். விக்கி இவர்களை நோக்கி வரவும் தங்களுக்காக ஒதுக்கியிருந்த அறையை அடைந்தனர். 


அங்கிருந்த கதிரையை நகர்த்தி.. அவள் அமர வசதி செய்து அவளிடம்.. "மது..! இங்க உட்கார்.." என்றான். அங்கிருந்த சுவற்றில் பெய்ன்டிங் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தவள் தன்னை மது என்று அழைத்தவனை கண்டு என்ன என்று தன் புருவத்தை ஏற்றி இறக்கினாள்.


அந்த பாவத்தில் மித்ரன் சொக்கிபோனான் .அதனை பார்த்த விக்கி அய்யோ என்று நினைத்துக் கொண்டு மதியை அழைத்து இருக்கையில் அமருமாறு சொல்லிவிட்டு ,மித்ரனிடம் சென்று "மச்சான் உன் டைட்டானிக் கப்பல இங்க ஓட்டாதா வீட்டுல வச்சு ஓட்டுடா" என்றான்.


விக்கியைப் பார்த்து அசடு வழிந்தவன் , "சரி விடுடா "என்று விட்டு இருக்கையில் இருவரும் அமர்ந்தனர். "மது உனக்கு சாப்பிட என்ன வேணும் "என்று கேட்டவனை வேற்றுகிரகவாசி போல பார்த்தாள் , மீண்டும்"சொல்லுடா "என்றான். அவள் விழிப்பதை பார்த்து விக்கி மித்ரனிடம் "மச்சான் நீயே ஏதாவது ஆர்டர் பண்ணுடா "என்றான்.


அவன் பேரரிடம் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி ,நாண், சிக்கன் டிக்கா மசாலா ,லாலிபாப் என நிறைய வகையான உணவுகளை ஆர்டர் செய்தான்.


அடுத்த பதினைந்து நிமிடத்தில் மித்ரன் ஆர்டர் பண்ணிய அனைத்து உணவுகளும் கொண்டுவந்து வைத்தனர். 


மதி அனைத்து உணவுகளையும் கண்டு "இவ்வளவா , புதுசு புதுசா இருக்கு ... நான் நீராகாரம்தான் அதிகம் சாப்பிடுவேன் அப்போதான் வயல்ல வேலை செய்யுமுடியும்" என்றாள்.இவள் சாதாரணமாகத்தான் சொன்னாள் ஆனால் கேட்ட மற்ற இருவருக்கும் தான் ஒரு மாதிரி ஆகிப்போனது.

அவள் பேசிக்கொண்டே அப்பொழுதுதான் இருவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து "சாப்பிடலாம் வாங்க, எனக்கு பசிக்கிது "என்றாள்.


மித்ரன் எதுவோ கோபமாக சொல்ல வந்தவன் பின்பு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.

பின்பு மதிக்கு பிளேட் எடுத்து வைத்து அதில் பிரியாணி ,நாண் , சிக்கன் டிக்கா, லாலிபாப் என அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக பரிமாறினான்.


அவன் பறிமாறுவதை கண்டு கண் கலங்கியவளை அவள் இடதுக்கையை இழுத்து தன் கைகளுக்குள் வைத்து ஆறுதலாக அழுத்திக்கொடுத்தவன், "சாப்பிடு "என்றான்.


பின்பு மித்ரனும் விக்கியும் ஏதோ சிரித்துக்கொண்டே சாப்பிட மதி மித்ரனை பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தாள்.


மித்ரனை பார்த்துக்கொண்டே எனக்கு இறங்க கைலாம் குடுத்து உதவி பண்ணினாரு ,அப்புறம் இப்போ எனக்கு சாப்பாடுலாம் பரிமாறினாரு ,கொஞ்சமே கொஞ்சம் நல்லவருதான்போல என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.


அப்பொழுது மித்ரனுக்கு புரையேற தன்னிச்சையாக அவன் தலையில் கை வைத்து தட்டி அவனிடம் தண்ணீரைக் குடுத்தாள்.அவன் தன்னையே பார்க்க ''சாப்பிடுங்க "என்று விட்டு தன் சாப்பாட்டில் கவனமானாள்.


பின்பு மூவரும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர். காரில் ஏறி அமர்ந்ததும் விக்கி வண்டியை எடுத்தான். சிறிது நேர பயணத்திற்கு பிறகு மித்ரன் தூக்கத்தில் ஜன்னல் ஓரமாக சாயப் போனவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டு அவள் தலைமேல் தன் தலையை வைத்துக்கொண்டான்.


ஆறு மணி நேரப்பயணத்திற்கு பிறகு ஒரு வீட்டின் வாசலில் கார் நின்றது. விக்கி முதலில் வீட்டினுள் சென்று விட்டான்.


மித்ரன் தன் தோளில் சாய்ந்து தூங்கியவளை எழுப்பினான். இருவரும் வண்டியிலிருந்து இறங்க தன் வீட்டாருடன் விக்கி வெளியே வந்தான்.


ஐம்பதுகளில் இருந்த ஒரு பெண்மணி ஆரத்தித் தட்டுடன் நின்றிருந்தார்.அவர்கள் இருவரையும் நெருங்கி ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் செல்லுமாறு கூறினார். விக்கி இருவரையும் உள்ளே அழைத்து சென்றதும் ,"வலதுகால் எடுத்து வச்சு வாங்கக்கா" என்று ஒரு குரல் கேட்கவும் மதி நிமிர்ந்து பார்த்தாள்.


அங்கே ஒரு சின்ன பெண் மதியைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்தவாறு அவள் கையை வந்து பற்றிக்கொண்டாள். வலதுகாலை எடுத்து வைத்து வந்தவளைப் பார்த்து விக்கி தன் குடும்பத்தாரை அறிமுகப்படுத்தினான். 


ஆரத்தி எடுத்தப்பெண்மணியை சுட்டிக்காட்டி "இவங்க தான் என் அம்மா நிர்மளா ,இவரு அப்பா ஜானகிராமன் ,இது என் தங்கை அபிநயா "என்று அறிமுகப்படுத்தினான்.


அவர்கள் கூறியதும் மதி மித்ரன் இருவரும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். நிர்மளா மதியின் தலையில் கை வைத்து "நல்லா இருமா ,எங்க மித்ரன நல்லா பார்த்துக்கனும் சரியா "என்றார். அவருக்கு சம்மதாக தலையை ஆட்டினாள்.


அப்பொழுது ,"ஒரு பெரியமனுஷியை கண்டுகொள்ளாமல் அங்கென்ன பேச்சு வேண்டி கிடக்கு "என்று அபிநயா கூறினாள். அதை கேட்டு சிரித்துக்கொண்டே மித்ரன் அளருகில் வந்து "வாலு "என்று அவள் தலையில் கைவைத்து ஆட்டினான்.


பின்பு மதியை அழைத்து பூஜை அறையில் விளக்கேற்ற சொல்லி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.


சிறிது நேரம் கழித்து மித்ரன் நிர்மலாவிடம் கிளம்புவதாக கூறினான். 


"கொஞ்சம் நேரம் இருந்துட்டு போகலாம் மித்தேஷ்".


உடனே அபிநயா "அப்படி எல்லாம் உடனே அனுப்ப முடியாது.. வேணும்னா மதி அக்காவ இங்க விட்டுட்டுப் போங்க " என்று மித்ரனிடம் கூறினாள். 


அதை கேட்டு அதிர்ந்த மித்ரன், "அம்மா பரதேவதை எதுக்கும்மா என் அடி மடியில் கைவைக்குற.. உனக்கு எந்த விஷயத்துல விளையாடனும்னு தெரியாதா..".


"ஆமாம்.. ஆமாம்.. கூட்டிட்டு வந்த அன்னைக்கே இப்படி பிரிக்கிறியே.. மித்ரன் தாங்க மாட்டான் ".


"அவன் பொண்டாட்டி பாட்டு பாட வேண்டாமா "என்றான் விக்கி .


"அது என்ன அண்ணா பொண்டாட்டி பாட்டு " என்று அபிநயா கேட்க 


"அதான் அபி சிம்பு கூட பாடிட்டு ஆடுவாரே..".


அதை கேட்டு அனைவரும் சிரித்தனர். 


"டேய் வேண்டாம்.. அப்புறம் உன் குயின்க்கு கால் பண்ணி சொல்லிடுவேன்" என்று சொன்னதும் அதற்கு மேல் பேசாமல் வாயை கப்பென்று மூடிக்கொண்டான்.


"மச்சான்! நோ" என்று தன் வாயில் கையை வைத்து தலையை ஆட்டினான் பாவமாக. 


அதை கண்டு மித்ரன் கெத்தாக "அது.. அந்த பயம் இருக்கட்டும்" என்றான்.


அவர்களை விசித்திரமாக பார்த்த அபிநயாவிடம் இருவரும் அசடு வழிய சிரித்து வைத்தனர். 


பின்பு இருவரும் அங்கிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு, மித்ரன் மதி காரில் ஏறுவதற்காக கதவை திறந்து வைத்துக் கொண்டு நின்றான். 


மதி அனைவரிடமும் போய்ட்டு வருவதாக கூறி விட்டு மித்ரன் நின்ற இடத்திற்கு சென்று அவனைப் பார்க்கவும், " ஏறு" என்றான்.


அவள் தலையை ஆட்டி விட்டு அமர்ந்ததும் கதவை சாற்றி விட்டு பின்பு இவன் டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை ஸ்டார்ட் பண்ணினான்.


அவர்களிடம் கையை ஆட்டி சிரித்த முகத்துடன் போய்ட்டு வருவதாகக் கூறினாள்.


மித்ரனும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு விக்கியிடம் "நாளைக்கு காலையில் ராயப்பேட்டை ஆபிஸ்க்கு வந்துடு மச்சான் " என்று சொல்லி தலையசைத்து விட்டு கிளம்பினான்.


மதி மித்ரனிடம், " இப்போ எங்க போறோம்?".


"மேடம் சொன்னாதான் வருவீங்களோ! ".

 

"இல்லை" என்று தலையாட்டியதும் 


"கேட்டதுக்கு பதில் "அவன் அவளை பார்க்கவும்

 

"அதான் தலையாட்டினேனே"


"தலையாட்டினா எனக்கெப்படி தெரியும், நான் தான் வண்டி ஓட்டிட்டு இருக்கேன்ல''


இப்பொழுதும் ஆமென தலையாட்டியவள் பின்பு தன் நாக்கைக் கடித்து கொண்டு, ''மன்னிச்சிடுங்க.. இனிமே மாத்திக்கிறேன்".


அவள் நாக்கைக் கடித்ததும், மித்ரன் அவள் பாவனையில் சொக்கி தான் போனான்..


உடனே வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.


அவன் திடீரென்று வண்டியை நிறுத்தவும் பயந்தவள், "என்னங்க ஆச்சு?" என்கவும் தான் "ஒன்னுமில்லை" என்று தலையசைத்தான்.


பின்பு வண்டியை எடுத்தவன், "இப்போ நம்ம வீட்டுக்கு தான் போறோம்". 


"நாம போய் இப்போ நின்னா.. உங்க அப்பா அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்களா?".


ஒருகணம் தன் உடல் இறுக தான் பற்றியிருந்த ஸ்டீயரிங்கை அழுந்த பற்றியவன், பின்பு உணர்ச்சியற்ற குரலில், "யாரும் எதுவும் என்னை கேட்க முடியாது", பின்பு வேதனையுடன் "என்னை யாரும் எதுவும் கேட்கவும் மாட்டாங்க" என்றான்.

No comments