மோகம் -1




 மோகம்-1: 


சென்னை செல்லும் அந்த நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த வாகனத்தில் யாரும் பேசும் நிலைமையில் இல்லை. 


பதுமையென அமர்ந்திருந்தவளோ.. தன் பக்கத்தில் ராஜகுமாரனுக்குரிய கம்பீரத்தோடும், மிடுக்கோடும் அமர்ந்திருந்தவனை கண்டு.." யார் இவன்? வந்தான்.. கல்யாணம் பண்ணினான்.. இப்போ எங்கேயோ.? கூட்டிட்டு போறான்..!" 


யார் இவன்..? அப்பாவும் எதுவும் சொல்லல.. சித்தியும் அமைதியாகத்தானே இருந்தாங்க..!


 (அமைதியாவா..? அதுவும் உன் சித்தியா..! உன் புருஷன் அந்த அடங்கபிடாரிய அடக்கி வச்சிருந்தான்). 


இவன் என் புருஷனா..! இனிமே இவன் கூடத்தான் இருக்கனுமா.? இவன் என்ன செய்ய காத்திருக்கானோ..? தெரியலயே.. என்று மனதிற்குள் ஏதேதோ நினைத்துக்கொண்டு மருகினாள்.


ராணி சொன்னதெல்லாம் உண்மையா இருக்குமோ..! என்று இன்று காலையில் நடந்ததாக ராணி தன்னிடம் கூறியதை நினைத்துப்பார்த்தாள்.


தன் வீட்டிற்கு வருகை தந்திருக்கும்.. அந்த இரு இளைஞர்களை தன் வீட்டு முற்றத்தில் அமர வைத்திருந்தார் ராமர். என்ன ஏதென்று விஷயம் தெரியாமல் அவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.. அவர்களே வந்த விஷயத்தைக் கூறட்டும் என்று அமைதி காத்தார்.


வந்தவர்களில் ஒருவன் முக இறுக்கத்துடனும்.. மற்றொருவன் ஏதோ சொல்ல வருவதும்.. பின்பு தயங்குவதுமாக இருந்தான். இவர்கள் இப்பொழுது பேச்சை தொடங்கமாட்டார்கள் என்று தெரியவே தானே பேச ஆரம்பித்தார்.. 


"என்ன தம்பி..? யாரு நீங்க..? என்னை எதற்கு பார்க்க வந்துருக்கீங்க..? " என்று அடுக்கடுக்காக தன் கேள்விகளைக் கேட்டார்.


வந்தர்வர்களில் ஒருவன் "சார்..! என்று சற்று தயங்கியவன் "நாங்க சென்னையில் இருந்து வந்திருக்கிறோம்.. என் பெயர் விக்னேஷ்.. பக்கத்தில் அமர்ந்திருந்தவனை சுட்டிக்காட்டி இவன் என் நண்பன்.. பெயர் மித்ரேஷ்வரன்.. சென்னையில் சொந்தமாக பைனான்ஸ் கம்பேனி வச்சு நடத்திட்டு வரான்.." என்று அறிமுகப்படலமாக தங்களை பற்றி கூறினான்.


"சரி தம்பி..என்னை எதுக்கு பார்க்க வந்துருக்கீங்க..? "


"ஐயோ..! என்ன இந்த மனிதன் கேள்வியா கேட்டுத்தள்ளுறாரு.." என்று மனதுக்குள் பொருமியவன் "என் நண்பனுக்கு.. உங்க பெண்ணை கேட்டு வந்துருக்கோம் சார்.." என்று விக்கி கூறவும் எதிரிலிருந்தவர் அதிர்ந்தார்.


தன்னை சமன்படுத்திக் கொண்டு இவர் ஏதோ பேச வரவும் உள்ளே இருந்து இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த சிவகாமி (ராமரின் மனைவி) வெளியே வந்து வாயெல்லாம் பல்லாக "வாங்க தம்பி..! உங்க அம்மா அப்பா வரலையா..? " என்று மித்ரனை பார்த்து கேட்க அவன் அவளை முறைக்கவும் மேலும் தொடர்ந்தாள் "ஏன் கேட்கிறேன்னா இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் பெரியவங்க இருந்தா சட்டுப்புட்டுன்னு பேசி ஒரு முடிவுக்கு வரலாமில்லையா அதான்.." என்று தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டினாள்.


சிவகாமி வந்ததும் பல்லை கடித்தவனை விக்கி அவன் கையை அழுத்தி பிடித்து அமைதிபடுத்தினான். "ஏய் நான்தான் பேசிட்டுருக்கேனே.. நீ ஏன் இப்போ வெளியே வந்தாய்..?" என்று ராமர் சிவகாமியிடம் கத்தியதும் மித்ரனின் இதழ்கள் ஏனோ இகழ்ச்சியில் வளைந்தது..


ராமர் பேசியதை அவள் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அவரை அலட்சியப்படுத்தியவள் மித்ரனிடம் திரும்பி "என் பெண்ணை எங்கு பார்த்தீர்கள்..? நீங்க உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாமே..!"


 "அவர்களும் வந்திருந்தால் இன்றே பரிசம் போட்டிருக்கலாம் " என்று அவள் மட்டும் பேசிக்கொண்டே சென்றாள். இவள் பேசுவதை கேட்டு கோபமடைந்த ராமர் "ஏய்..! யாரு..? என்னன்னு விசாரிக்காம.. நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற.." என்று வெளியாட்கள் முன்பு தன்னை அவமதித்ததற்கு கோபத்தில் சீறினார்.


அவர் கோபத்தில் தன் பேச்சை சட்டென நிறுத்தியவர் "இல்லங்க.. இந்த தம்பியை நான் முன்பே நம்ம ஊரில் பார்த்துருக்கேன்.. நம்ம ஊரில் படம் எடுத்தாங்கள்ள.. அப்போ இந்த தம்பியை பார்த்திருக்கேன்.." என்று மித்ரனை சுட்டி காட்டினாள்.


இவர்கள் பேச்சை அங்கு அமர்ந்திருந்தவனால் கேட்க முடியவில்லை போல..! அதற்கு மேலும் அமைதி காக்க முடியாமல் தன் தொண்டையை செருமியவன் சிவகாமியை பார்த்து "உங்க பெண்ணை சொல்லவில்லை.." ராமரை காண்பித்து "இவருடைய பெண்ணை தான்.. நான் மணந்து கொள்ள போகிறேன்.." என்று அறிவிப்பு போல் கூறினான்.


சிவகாமி அதிர்ச்சியாய் அவனை பார்த்து "அவளையா..! அவள் இந்த வீட்டு சம்பலமில்லா வேலைக்காரி.. அவளை கட்டிக்கொடுக்க முடியாது.. வேண்டுமென்றால் என் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள்.." என்று தன் பெண்ணிற்கு அவனை கட்டி வைத்து விடும் வேகம் அவள் வார்த்தையில் தெரித்தது.


மித்ரனோ தன் கோபத்தை கைகளை மடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தவன்.. ஒரு முடிவுடன் அவளை பார்த்தபடி இருந்தான்.


சிவகாமியோ மனதிற்குள் "ஐயோ..! பார்த்தாலே பணக்காரன் போல் இருக்கிறான்.. கண்டிப்பாக கோடி கணக்கில் சொத்து இருக்கும் போல.. வெளியே நிக்குற வண்டியை பார்த்தாலே தெரியலையா..? கண்டிப்பா இவன நம் பெண்ணுக்கு கட்டி வைத்தால்..? என் மகள் ராணி மாதிரி இருப்பா.. ஆனா இவன் என் தலையில் மண்ணள்ளி கொட்டுறான்.. அந்த பிச்சைக்காரிய போய் கட்டுறேனு சொல்றான் கூருகெட்டவன்.." என்று ஏகத்துக்கும் மித்ரனுக்கு வசைமாரிப் பொழிந்தாள். 


"இவனை விட கூடாது.." என்று மனதில் நினைத்தவர்.."இவன்கிட்ட பேசி எப்படியாவது என் பெண்ணை கட்டிக்க வைக்கணும்.."

 

ஏதோ இவனிடம் கூற வந்த சிவகாமியிடம்.. கை நீட்டி அவரை தடுத்தவன் தன் முழு உயரத்துக்கு எழுந்து நின்றான். 


ராமரிடம் சென்று" உங்க மகள் மதுமதியை தான் திருமணம் செய்துகொள்ள போகிறேன்.. அதை நீங்களே நினைத்தாலும் தடுக்க முடியாது " என்று முன்பு முடிவு எடுத்தவன் போல் அறிவிப்பாக முதல் பாதியை ராமரிடம் கூறியவன்.. பிற்பாதியை சிவகாமியை பார்த்து கூறினான்.


பின்பு ராமரிடம் திரும்பி "நீங்க உங்க பெண்ணை நன்றாக..? பார்த்துக்கொண்டதை விட.. நான் நன்றாக பார்த்துக் கொள்வேன்.. " என்று "நன்றாக" என்ற வார்த்தையை அழுத்திக் கூறினான்.


அவன் அப்படி கூறவும் ராமர் முகம் சட்டென வேதனையை தத்தெடுத்து கொண்டது. காலம் கடந்து வருந்தி என்ன பயன்..?


சிவகாமி ஆங்காராமாக "முடியாது.. முடியவே முடியாது.. அந்த பிச்சைக்காரிக்கு..? இப்படி ஒரு வாழ்க்கை அமைய நான் விடமாட்டேன்.." என்றவரை விக்கியும் மித்ரனும் அற்பப்புழுவை பார்ப்பது போல் பார்த்தனர். 


பின்பு மித்ரன் இது வேலைக்காகாது என்று நினைத்துக்கொண்டு தான் கொண்டு வந்த பெட்டியில் இருந்து ஒரு பத்திரத்தை எடுத்து சிவகாமியின் முன்பு நீட்டி," இது நீங்க இருக்குற இந்த வீடு ,உங்களுக்கு இருக்குற நிலத்தை வச்சு என்கிட்ட ஒரு கோடி பணம் வாங்கினதுக்கான பத்திரம் இது" என்று அலுங்காமல் குலுங்காமல் ஒரு குண்டை இல்லை.. பெரிய பாறாங்கல்லையே சிவகாமியின் தலையில் போட்டான்.


அவன் சொல்வதை கேட்டு அதிர்ந்த சிவகாமி "நான் உன்கிட்ட பணமே வாங்கவில்லை.. யாருகிட்ட பொய் சொல்ற..? " என்று சொத்து என்றதுமே அதிர்ச்சியில் உறைந்து நம்பமுடியாமல் அவனிடம் "இல்லை" என்று திட்டவட்டமாக மறுத்தார்.


அதிர்ந்து நின்ற சிவகாமியைப் பார்த்த மித்ரன் சிரித்து கொண்டே "நீங்க தான் இந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துருக்கீங்க.. நீங்களே படிச்சு பாருங்க " என்று பத்திரத்தை அவளிடம் நீட்டி "இது உங்க கையெழுத்துதானே " என்று அதிலிருந்த சிவகாமியின் கையெழுத்தை சுட்டிக் காட்டியவாறு கேட்டான். 


சிவகாமி பத்திரத்திலிருந்த தன் கையெழுத்தை அதிர்ச்சியுடன் பார்த்து "ஆம்" என தலையசைக்க அவளைப் பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டே தன் தாடையை தடவியவாறு "ரெண்டே ஆப்ஷன்தான்" என்று சொல்லி நிறுத்த.. அவனை கேள்வியாக பார்த்த சிவகாமியிடம் "ஒன்னு ஒரு கோடி பணம்..இல்லையென்றால் மதுமதியை எனக்கு கட்டி கொடுங்கள்.." என்று தான் எண்ணிய எண்ணம் ஈடேற.. இந்த பக்கமும் போக முடியாமல்.. அந்த பக்கமும் போக விடாமல்.. அனைத்து வழிகளையும் அடைத்து வைத்து.. தான் சொன்னதை செய்தால்தான் உன் சொத்து உன் கைகளுக்கு வரும் என்ற கையறு நிலையில் நிற்க வைத்தான்.

 

சிவகாமி ஏதோ சொல்ல வாயெடுக்க அவள் பேசவே இடம் கொடுக்காமல் "முடியாது என்றால் இதோ நிற்கிறானே.. என் நண்பன் காவலதிகாரிதான்.. இவனிடம் நான் ஒரு புகார் எழுதி குடுத்தால் போதும்.. மொத்த குடும்பத்துக்கும் களி தான்.. எப்படி வசதி..?".


" உங்க பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தால்.. இந்த பத்திரத்தை கல்யாணம் முடிந்த அடுத்த நிமிடம் கிழித்து போட்டுருவேன்" என்றான்.


சிவகாமிக்கு இப்பொழுது அவள் இருந்த வீடும் தன் நிலமும் கைக்கு வந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டு "சரி" என்றாள். இதையெல்லாம் பார்வையாளராக மட்டுமே ராமர் பார்த்துக் கொண்டிருந்தார்.


அவருக்கு தன் மகள் இந்த இடத்தை விட்டு வேறு எங்காவது சென்று நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்தார். 


ஆனால் ராஜகுமாரன் போல் ஒருவன் வந்து தன் பெண்ணை கேட்டதும் அவருக்கு சம்மதம் தான், இருந்தாலும் வாயை திறக்கவில்லை. ஏனென்றால் இது வரைக்கும் தான் இருந்தும் தன் மகளுக்கு எதுவும் செய்ததில்லை..!


தன் மனைவியே அவனை கண்டதாக சொல்லவும்.. கண்டிப்பாக நம்பிக்கையானவனாக தான் இருப்பான் என்று தன் பெண்ணை அவன் அழைத்து செல்லட்டும் என்று ஒன்றும் சொல்லாமல் நின்றார்.


பின்பு தான் சிவகாமி கத்தவும்.. அவன் அவளை சொத்தை வைத்து மடக்கியதையும் பார்த்துக்கொண்டு நின்றவர் வேறெதுவும் பேசவில்லை. ஏனெனில் சொத்து மொத்தமும் தன் மனைவி பெயரில் தான் எழுதி வைத்திருந்தார்.


( அவராக எழுதவில்லை குடி போதையில் சிவகாமி தன் பெயருக்கு மாற்றி எழுதி கையெழுத்து வாங்கி கொண்டார்).


அப்பொழுது தான் வயலில் வேலை செய்து களைப்புடன் வீட்டிற்க்கு வந்த மதியை பார்த்து "ஏய் புடவை கட்டிட்டு வா.. உனக்கு கல்யாணம் போய் ரெடி ஆகு " என்று வெறுப்புடன் கூறினாள்.


சிவகாமிக்கு இப்பொழுது தன் பெயரில் இருக்கின்ற சொத்துதான் கண்ணுக்கு தெரிந்தது.. அதை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்று தான் அவர் யோசித்தார். அதிர்ந்து நின்ற மதியின் மனதையோ.. திருமணத்திற்கு அவளின் விருப்பத்தையோ அவர் கேட்கவில்லை.


அவருக்கு இப்பொழுது எப்படியாவது தன் சொத்து அனைத்தும் தன் கைகளுக்கு கிடைக்க வேண்டும்.. அதுதான் அவருடைய குறிக்கோளாக இருந்தது.. இதில் மதியின் மனதைப்பற்றி அறிய அவருக்கு நேரமுமில்லை..அதனை அவர் விரும்பவும் மாட்டார்.


தன் சிற்றன்னை சொன்னதை கேட்டு அதிர்ந்தவள் கண்கள் குளமாக தன் தந்தையை பார்த்தாள். அவரும் அவள் அருகில் வந்து "இன்றோடு உன் கஷ்ட காலம் முடிந்து விட்டது மதி..! போய் புடவை கட்டிட்டு வா..நான் உனக்கு உதவி செய்ய பக்கத்து வீட்டுக்கு போய் ராணியை போய் கூட்டிட்டு வரேன்.. உனக்கு உதவி பண்ணுவா, நீ உன் அறைக்கு போ மா.." என்று விட்டு சென்றார்.


அவள் வந்ததில் இருந்து அவளையே வைத்த கண் வாங்காமல் மித்ரன் பார்த்து கொண்டிருந்தான். அவள் கண் கலங்கவும் அவள் கண்ணீரை துடைக்க அவன் கைகள் பரபரத்தது. இன்னும் கொஞ்ச நேரம் பொறு மனமே..! சற்று நேரத்தில் அவள் என்னவள் ஆகிவிடுவாள்.. அதன் பிறகு எந்த தீங்கும் அண்டவிடாமல் பாதுகாக்க என்றும் அவளுடன் நானிருப்பேன்.. என்று தன் மனதிற்குள் கூறிக்கொண்டவன் தன்னை வெகு சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.


ராணி வரவும்.. தன் நண்பனுக்கு கண்களால் எதுவோ சொல்ல.. அவன் தாங்கள் வந்த வண்டியை நோக்கி சென்று அதில் இருந்த ஒரு பையை எடுத்துக்கொண்டு வந்து ராணியிடம் கொடுத்தான்.


ராணி உள்ளே சென்று மதியைத் தயார்படுத்திக்கொண்டே.. இங்கு நடந்ததை அவளிடம் ராமர் சொல்ல சொன்னதாக அனைத்தையும் கூறினாள். பின்பு சிறிது நேரம் கழித்து மதியை வெளியே அழைத்து வந்தாள் ராணி. 


பச்சைபட்டு கட்டி.. தங்க ஆபரணங்கள் அளவாக அணிந்து.. அழகே உருவாக நின்றவளை கண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.


சிவகாமி "ஐயோ..! எவ்வளவு நகை.. இந்த பட்டு புடவையை பார்த்தால்.. பத்தாயிரம் இருக்கும் போல.. இவளுக்கு வந்த வாழ்க்கையை பார்த்தியா.. கடவுளே..!" என்று மனதுக்குள் பொருமி கொண்டிருந்தாள். 


ராமர் தன் மகளை கண்டு.. "இனிமேலாவது என் மகளுக்கு எல்லாமே நல்லதா நடக்கட்டும்.." என்று இறைவனிடம் மனதார வேண்டிக்கொண்டார்.

மித்ரன் அவளை பார்த்ததும் எழுந்து நின்றவன் உணர்ச்சி வசபட்டதில் கரகரத்த தன் குரலை செறுமியவன் "போலாமா" என்றவுடன் தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மதுமதி.


அவளை அழைத்து சென்று சாமியரையில் நிறுத்தி.. தன் சட்டை பையில் இருந்த தாலி கோர்திருந்த மஞ்சள் கயிற்றை அவள் கழுத்தில் கட்டி தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான்.


ராமர் காலில் மட்டும் விழுந்து வணங்கியவன்.. சிவகாமி காலில் விழப்போன மதியை தன்னுடன் சேர்த்து "போலாமா.." என்றவன் பின்பு யாரையும் கண்டுக்கொள்ளவில்லை. 


சிவகாமி அவன் செய்த செயலில் முகம் கறுத்து நின்றார். 


அவன் காரில் மதியை ஏறுமாறு கூறி அவள் அமர்ந்ததும்.. அங்கு நின்றவர்களிடம் வந்து " இனி யாரும் மதியை தேடிக்கிட்டு சொந்தம் கொண்டாடி வரக்கூடாது" என்று சிவாகமியை பார்த்துக்கூறினான். ராமரை பார்த்து "உங்களுக்கு உங்க பெண்ணை பார்க்கணும்னு தோணுச்சுனா.. என்கிட்ட சொல்லிட்டு வந்து பாருங்க". 


அவன் வண்டியில் ஏறிக்கொண்டு தன் நண்பனை வண்டியை கிளப்ப சொன்னான்.

சில்லென்ற காற்று தன் முகத்தில் வந்து மோதவும் நினைவுக்கு வந்தவள் அங்கு ஏதோ பேசுவதை கேட்டு என்னவென்று கவனித்தாள். 


விக்கி மித்ரனிடம் "மச்சான்..! நீ என்னை போலீஸ்னு சொன்னதும்.. அந்த பொம்பளை மூஞ்சு பேயறைந்தது போல ஆயிடுச்சுடா " என்று இருவரும் பேசி தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர். 


இதனை கேட்டவளுக்கு பக்கென்று இருந்தது.

No comments