நந்தனின் கண்ணம்மா -1
நந்தனின் கண்ணம்மா 1:
"NK HOSPITALS" கொல்கத்தாவின் நம்பர் ஒன் மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று.
இதில் தான் நம் கதையின் நாயகி வேலை பார்க்கிறாள்.
பெயர் கனிஷ்கா. வயது 23. அம்மணி போன வருடம் தான் தனது படிப்பை முடித்துவிட்டு, இங்கு மூன்று மாதங்களாக வேலை செய்கிறாள். இவள் மட்டுமல்ல, இவளது நண்பனும் இங்கேதான் வேலை செய்கிறான். அவன் பெயர் விஷ்ணு. இருவரும் கல்லூரியில் படிக்கும்பொழுதே நல்ல நண்பர்கள்.
மருத்துவமனை பக்கத்திலேயே (அரை மணி நேர பயணம்) ஒரு அப்பார்ட்மென்ட்டில் வசிக்கிறாள். ஒரு ஹால், கிட்சன், ஒரு பெட்ரூம், அட்டாச்சுடு பாத்ரூம் கொண்ட அழகான வீடு. விஷ்ணு எப்போதும் போல, ஏழு மணிக்கெல்லாம் இவளை அழைக்க வந்துவிட்டான்.
காலிங் பெல் அமுக்கி, ஐந்து நிமிடம் கழித்தே கதவைத் திறந்தாள்.
அவள் இப்பொழுதுதான் தூக்கத்தில் இருந்து எழுந்ததற்கான அறிகுறிகளோடு, தூக்கத்தில் சாமியாடிக் கொண்டிருந்தவளை நெருங்கியவன்,
"என்ன, இன்னைக்கும் லேட்டா எழுந்தியா? சீக்கிரமா தூங்குன்னு சொன்னா கேக்குறியா?" என்று தலையில் கொட்டினான்.
"ஹே, காலைலேயே அடிக்காதடா!" என்று சோபாவில் சென்று படுத்துக்கொண்டாள்.
விஷ்ணு சிரித்துக்கொண்டே சமயலறைக்குச் சென்று, காபி போட்டு எடுத்து வந்தான்.
அப்போதும் எழாதவளைக் கண்டு, "நேரம் ஆச்சு, நிஷ்! இன்னும் டென் மினிட்ஸ் தான் உனக்கு டைம். நான் பிரட் டோஸ்ட் பண்றதுக்குள்ள கிளம்பி வா. இல்லனா விட்டுட்டு போயிடுவேன். எப்படி வசதி?" என்றான்.
அவன் முடிப்பதற்குள், காபி குடித்துவிட்டு தன் அறைக்குள் ஓடிவிட்டாள்.
அவள் வருவதற்குள், சாப்பிட அனைத்தையும் செய்து வைத்துக்கொண்டு காத்திருந்தான்.
அரை மணி நேரம் கழித்தே வந்தாள்.
"கிளம்பலாம், விஷு!" என்று வந்தவளை அமர வைத்து, சாப்பிட வைத்தான்.
பாதிக்கூட சாப்பிடாமல் எழுந்தவளை வேதனையுடன் பார்த்தான்.
"சாப்பிடு, நிஷ்! நீ முன்ன மாதிரி இல்ல. ஒழுங்கா சாப்பிடாம இளைத்துப் போயிட்ட. இன்னும் கொஞ்சம் சாப்பிடு…" என்று சொன்னான்.
"இதுக்கு மேல முடியாது, டா…" என்று கைப்பையை எடுத்துக்கொண்டு வந்தாள்.
அவள் காரில் அமர்ந்ததும், வண்டியை எடுத்தான். வண்டியை ஓட்டிக்கொண்டே அவளிடம் பேச்சு கொடுத்தான்.
அவன் கேட்டதுக்கு மட்டுமே பதில் வந்தது.
இதற்கு முன்பென்றால் திறந்த வாயை மூடமாட்டாள்.
மருத்துவமனை வந்ததும், இறங்கிக்கொண்டவளைக் கண்டு, "எதுவாயிருந்தாலும் கால் பண்ணு. நா வரேன்!" என்று சொன்னவனைக் கண்டு, "நீ போய் தூங்குடா. நைட் ஷிப்ட் பாத்துட்டு டைர்டா இருக்கும். நா மேனேஜ் பண்ணிக்கிறேன். பாய், விஷு!" என்று சொல்லி செல்பவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
மனதிற்குள், "சாரி, நிஷ்! இன்னைக்கு நீ எத்தனை கால் பண்ணினாலும் நான் வர மாட்டேன்!" என்று நினைத்துக்கொண்டான்.
அப்போது, "பாத்து வழியுது, தொடச்சுக்கோங்க!" என்று ஒரு பெண் இவனைப் பார்த்து முறைத்துக்கொண்டு இருந்தாள்.
வேறு யாருமல்ல, அதே மருத்துவமனையில் பணிபுரியும் மேகனா தான் இவனை முறைத்தபடி இருந்தாள். இவனும் அவளைப் பார்த்து முறைத்து, "போடி!" என்று சொல்லி சென்றுவிட்டான்.
விஷ்ணுவை ஒருதலையாக காதலிக்கிறாள்.
இரண்டு முறை விஷ்ணுவிடம் தன் காதலை சொல்லியும் இருக்கிறாள். ஆனால் அவன் தான், "எனக்கு அதுல விருப்பம் இல்லைங்க!" என்று சொல்லிவிட்டான். அப்போதில் இருந்து, இவன் அவளிடம் அதிகமாக பேச மாட்டான். ஆனால் மேகனா விடுவாதாக இல்லை.
கனி தன் அறைக்குச் சென்று, நோயாளிகளை அனுப்புமாறு நர்சிடம் சொன்னாள். உள்ளே வந்தவனைக் கண்டு, இவள் உலகமே இயக்கத்தை நிறுத்தியது போல் அசைவற்று இருந்தவளைக் கண்டு, மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.
பிறகு அவள் அப்படியே அசையாமல் அமர்ந்திருப்பதைக் கண்டு, "டாக்டர்!" என்று கத்தி அழைத்ததும் தான் நினைவுக்கு வந்தாள்.
"எஃ… என்ன ப்ரொப்லெம்? என்ன பண்ணுது?..." என்று அவள் கேட்டதும், "நீ தான் பிரச்சனை!" என்றதும், "ஹலோ, மிஸ்டர்! ஒர்கிங் டைம்ல இங்க எதுக்கு வந்து கலாட்டா பண்றீங்க?"
"ஹலோ, டாக்டர்! நானும் டிரீட்மென்ட்க்கு தான் வந்தேன். செக் பண்ணுங்க…" என்று அவள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அவன் தன் அருகே அமர்ந்ததும், அவனுக்கெப்படியோ இவளுக்குப் படப்படவென வந்தது. அதைக் கண்டு, மேசை மேல் இருந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்தான். வாங்கிக் குடித்தவளையே மேலும் கீழும் ஆராய்ந்தான். அவன் பார்வையைப் பார்த்து, "மிஸ்டர்!" என்று கோபத்துடன் அழைத்தாள்.
"நீங்க செக் பண்ணுங்க, டாக்டர்! நான் ஒன்னும் பண்ணலையே, எதுக்கு முறைக்குறீங்க…" என்றதும், "ஆமா, ஆமா! இவரு அப்படியே முறைமாப்பிளை பாரு! முறைச்சு பாக்குறாங்க போயா!" என்று முணுமுணுத்தாள்.
அது அவன் காதுகளைத் தென்றல் போல் தீண்டிச் சென்றது.
"முறைமாப்பிளை இல்லை தான், ஆனால் டாக்டர்! உங்க கழுத்துல இருக்குற தாலிய கேட்டு பாருங்க. நான் யாருனு சொல்லும்…" என்று சொன்னதும், அவள் கண்களில் கண்ணீரைக் கண்டதும், "கண்ணம்மா!" என்று இருக்கையில் இருந்து அருகில் வந்தவனைக் கை நீட்டித் தடுத்து, "என்னைத் தேடி வராதீங்கன்னு சொல்லிட்டு தானே வந்தேன்…"
"எதுக்கு இப்போ வந்தீங்க? என்னை நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னு எதும் சபதம் எடுத்துருக்கீங்களா?" என்று அழுதாள்.
"கண்ணம்மா, புரிஞ்சுக்கடா! நான் தெரியாம பண்ணிட்டேன் டா…" என்றவனைப் பார்த்து, "இங்கேயிருந்து போயிடு! உன் மூஞ்சில முழிக்கவே கூடாதுனு தான்! யாருக்கும் தெரியாம இங்க வந்தேன். ப்ளீஸ், என்னை நிம்மதியா இருக்க விடு…" என்று அவள் அழுததும், வேதனையுடன் வெளியே சென்றான் ரிஷிநந்தன்.
ரிஷி வெளியே சென்றதும், அழுதுக்கொண்டிருந்தவள் இனி தன்னால் இங்கு இருக்க முடியாது என்று, மருத்துவமனையின் மேலிடத்திற்கு அறை நாள் விடுப்பு எடுத்துக்கொள்வதாகக் கூறி, ஒரு மெயில் அனுப்பிவிட்டு, வெளியே இருந்த நர்ஸைக் கூப்பிட்டுத் தகவல் சொல்லிவிட்டு, வெளியே வந்தாள்.
அங்கு தன் கார் அருகே நின்றுகொண்டிருந்தவனைக் கண்டும் காணாமல் விலகிச் செல்லப் பார்த்தவளை, கை நீட்டித் தடுத்தான்.
"நிகா, நான் சொல்ல வருவதைக் கொஞ்சம் கேளு டி…" என்றவனை முறைத்துவிட்டு விலகியவளை, கை பிடித்து நிறுத்தினான்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த செக்யூரிட்டி வந்து, "என்னமா? யாரு இவன்? உன்கிட்ட தகராறு பண்றானா? யாரு டா நீ? போலீஸ்க்கு போன் பண்ணவா?" என்றதும், கனிஷ்கா "இல்லை அண்ணா, என்னோட கணவர் தான்" என்று பெங்காலி மொழியில் அவரிடம் சொல்லிவிட்டு, அவள் அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் வண்டியில் ஏறியதும், "அப்பாடி! மலையறங்கிட்டா…".
"முருகா காப்பாத்து!" என்று கடவுளை வேண்டினான். கடவுளோ, 'இனி தான் ஆட்டமே ஆரம்பம் டா கண்ணா!' என்று சிரித்தது. பாவம், ரிஷி அறியவில்லை.
காரில் ஏறியதிலிருந்து ஜன்னல் பக்கமாக சாய்ந்தவள் தான். அதன் பிறகு அவன் பக்கம் அவள் திரும்பவே இல்லை.
சிறிது நேரம் கழித்து, வண்டி நின்றதும் அபார்ட்மெண்ட் வந்துவிட்டது தெரிந்து, எதும் பேசாமல் இறங்கியவளை பார்த்து அவனும் இறங்கி நின்றான்.
அவள் அவனை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாள். வீட்டிற்குள் நுழைந்ததும் விஷுக்கு கால் பண்ணினாள்.
அவன் எடுத்ததும், சரமாரியாக திட்டியவளை கண்டுகொள்ளாமல், "என்ன நிஷ், கால் பண்ணிருக்க…" என்று கேட்டதும், மறுபக்கம் இருந்தவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
"டேய் எருமை மாடு, என்னமோ பெரிய இவன் மாதிரி கால் பண்ணு வரேன்னு சொன்ன கால் கூட எடுக்க முடியலையா? இன்னும் பத்து நிமிஷம் தான் டைம் உனக்கு, அதுக்குள்ள வர இல்லனா என்ன பண்ணுவேன்னு தெரியாது…" என்று சொல்லிவிட்டு வைத்து விட்டாள்.
இந்த பக்கம் இருந்தவனுக்கு, "அப்பாடி!" என்று இருந்தது. "ஐயோ! நம்ம பாடே இப்படி இருக்கு… மாம்ஸ் என்ன ஆனாரென்னு தெரியலையே…"
உடனடியாகக் கனி இருந்த இடத்திற்கு கிளம்பினான்.
அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்தவன், வெளியில் நின்றிருந்த ரிஷியை கண்டு, "என்ன மாம்ஸ்? அடி பலமோ…" என்றான்.
"வாடா நல்லவனே… உன்ன என்ன சொன்னேன்? அவள ஒழுங்கா பாத்துக்க சொன்னா, அவள் எப்படி ஆயிட்டா பாருடா… அவளைப் பார்த்ததும், மனசே தாங்கலடா! என் கண்ணம்மா எப்படி இருந்தவள் இப்படி ஆயிட்டா…"
"அதான் நீங்க வந்துட்டீங்கல்ல… எல்லாம் சரியாகிவிடும்… இருங்க மாம்ஸ், நா போய் பாக்குறேன்…" கதவை தட்டியதும் திறந்தவளை கண்டு, "எதுக்கு வர சொன்ன..?" என்று ஒன்னுமே தெரியாதது போல் கேட்டான்.
அப்போது, அவள் எதோ சொல்ல வருவதற்குள் காலிங் பெல் அடித்தது.
"ஐயோ! இந்த மாம்ஸ் ஏன் அவரே வந்து இவக்கிட்ட சிக்குறாரு…" என்று நினைத்துக்கொண்டு இருந்தவனை, "போய் கதவைத் திற…" என்று சொன்னாள்.
"ஐயயோ! இன்னைக்கு அடி வாங்காம போக முடியாது போல…" என்று நினைத்து கொண்டே கதவைத் திறந்தான்.
விஷ்ணு கதவைத் திறந்ததும் நின்றது. அந்த அபார்ட்மெண்டில் வேலை செய்யும் செக்யூரிட்டி தான் நின்றுருந்தார்.
அவனை பார்த்து, "சார், அந்த பையன் ரொம்ப நேரமா வெளியே நிக்குறார்… உங்களுக்கு தெரியாதது இல்ல… இங்க வெளி ஆட்கள் நிக்க கூடாது. உள்ள அந்த பையன் கூட இந்த பொண்ணு வந்தாங்க… அதான் உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்னு சொல்றேன்…"
அதற்கு விஷ்ணு, "சரி அண்ணா, நான் அவங்ககிட்ட சொல்றேன்…" அவர் சென்றதும், "இப்போ என்ன பண்றதுன்னு சொல்லு கனி…" என்றான்.
"அவங்க சாப்டாங்களானு கேட்டு, சாப்பிட வச்சு அனுப்பிடு…" என்றாள்.
"இவளுக்கு மாம்ஸ் தான் சரி… பட்டு வருவார்…" என்று நினைத்து கொண்டு, "சரி, நான் போய் அனுப்பிட்டு வரேன்…" என்று சென்றான்.
இவள், அவன் சென்றதும் பால்கனியில் நின்று இவர்களைத்தான் பார்த்துகொண்டு இருந்தாள்.
விஷு, ரிஷியிடம் வந்து, "மாம்ஸ், அவ உங்களை ஊருக்கு கிளம்ப சொல்றா…" என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே மழை படபடவென வந்தது.
உடனே விஷு போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தான்.
கனி தான் அழைத்தாள்.
"மழை வருது. அவரை இங்கேயே சாப்பிடு சொல்லு… நான் போய் சமைக்கிறேன்… ரெண்டு பேரும் மேல வாங்க…" என்று வைத்து விட்டாள்.
"மாம்ஸ், மழை வந்து காப்பாத்தி விட்டுச்சு… இல்லனா அவ்ளோதான்…"
"சரி… நீங்க உங்க பொண்டாட்டி கூட சண்டை போடுவீங்களோ, இல்ல கால்ல விழுவீங்களோ எனக்கு தெரியாது… சீக்கிரம் எதாவது பண்ணி, அவள ஊருக்கு கிளப்புற வழிய பாருங்க…"
"மூணு மாசமா நம்ம ஊரு சாப்பாடு சாப்பிடாம, காஞ்சிப் போய் கிடக்கேன்…" என்றவனை கட்டிபிடித்து, "தாங்க்ஸ் டா மச்சான், அவக்கூட இருந்து பாத்துகிட்டதுக்கு…" என்றவனை, "தாங்க்ஸ்லாம் வேண்டாம்… நான் தான் உங்களுக்கு கால் பண்ணி வர சொன்னேன்னு மட்டும் சொல்லாதீங்க… இல்லனா அவ என்னை பந்தாடிடுவா…"
"சரி வா…" என்று ரிஷி அவனை அழைத்தான்.
அதற்கு விஷு உடனே, "மாம்ஸ், சிவப்பூஜைல கரடி மாதிரி… நான் எதுக்கு? நீங்க போங்க…"
"போய் நல்லா பலமா கிடைக்கும் வாங்குங்க… காலைல நீங்க இருந்தா பார்க்கலாம்…" என்றவனை, "என்ன டா பயமுறுத்துற…"
"ஆமா, நீங்க அப்படியே ரொம்ப பயந்தவர் தான்…" என்றான்.
"சரி டா, போயிட்டு போன் பண்ணு…" என்று அவனை அனுப்பி வைத்து விட்டு மேலே சென்றான்.

Post a Comment