மனம் மயக்கும் மோகினி - 1

 



மனம் மயக்கும் மோகினி

மோகினி - 1: 

புதுச்சேரி…

காலை நேரம் கிழக்கு திசையில் வானம் மெல்ல சிவக்கத் தொடங்கியிருந்தது. இரவின் கருமை கரைந்து, நீலமும் செம்மையும் கலந்த ஒரு புதிய வர்ணம் பூமிக்கு பூசப்பட்டிருந்தது. 

புதுச்சேரியின் பிரெஞ்சு காலனிப் பகுதி, அந்த அதிகாலை நேரத்தின் அமைதியில் ஒரு ஓவியம் போல உறைந்து கிடந்தது. கடலிலிருந்து வீசிய மெல்லிய காற்றில், அரும்பு மலர்களின் வாசம் கலந்திருந்தது. 

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மஞ்சள் நிறக் கட்டிடங்களின் சுவர்களில் படர்ந்திருந்த அந்த மலர்க்கொடிகள், இரவில் பெய்த பனித்துளிகளால் நனைந்து பளபளத்தன.

அந்த வீட்டின் பால்கனியில், ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார் மங்களம் பாட்டி. அவருக்கு வயது எழுபதைத் தாண்டியிருந்தாலும், அவரது பார்வையில் ஒருவிதத் தெளிவும், முகத்தில் ஒருவித நிம்மதியும் குடியிருந்தன. 

கையில் இருந்த சூடான ஃபில்டர் காபி கோப்பையிலிருந்து எழுந்த ஆவி, அவரது மூக்குக் கண்ணாடியில் மெல்லிய படலமாகப் படிந்து மறைந்தது. அவர் கண்கள், எதிரே தெரிந்த கடலை பார்த்துக் கொண்டிருந்தாலும், அவரது சிந்தனையோ இங்கு இல்லாமல் நடந்து முடிந்து போன விஷயங்களைத்தான் அளசிக் கொண்டிருந்தது.

இருபது வருடங்களுக்கு முன், தன் ஒரே மகள் அஞ்சலியை, பிரான்சிலிருந்து வந்திருந்த கட்டிடக் கலை நிபுணர் லியுக் வில்லியம்ஸிற்கும் மணம் முடித்துக் கொடுத்தபோது, இதே போன்ற ஒரு காலைப் பொழுதை அவர் நினைவுகூர்ந்தார். 

ஊரே பேசியது. 

"நம்ம மங்களம் பொண்ணு இருக்காள்ல, ஒரு வெள்ளைக்காரனைக் கட்டிக்கப் போகுதாம்," என்று சிலர் ஆச்சரியப்பட்டார்கள், சிலர் கேலி பேசினார்கள். ஆனால் மங்களத்திற்குத் தெரியும், தன் மகளின் சந்தோஷம் அந்த பிரெஞ்சுக்காரனின் அன்பில்தான் இருக்கிறது என்று. 

லியுக் வில்லியம்ஸ், பிரான்சின் குளிரை விட, புதுவையின் வெயிலையும், தமிழ் மக்களின் அன்பையும் அதிகம் நேசித்தான். அஞ்சலியின் பரதநாட்டியத்தில் மயங்கி, அவளது தமிழ் கலாச்சாரத்தின் மீது காதல் கொண்டு, இங்கேயே தங்கிவிட்டான்.

அவர்களின் காதலின் அடையாளமாக, முதலில் மோனாவும், இரண்டு வருடங்கள் கழித்து எம்மாவும் பிறந்தார்கள். அந்த வீடு, தமிழ்ப் பேச்சும், பிரெஞ்சு வார்த்தைகளும் கலந்து ஒலிக்கும் ஒரு சங்கமமாக மாறியது. 

மங்களம் பாட்டி தன் பேத்திகளுக்கு தமிழ் கதைகள் சொன்னால், லியுக் வில்லியம்ஸ் அவர்களுக்கு பிரெஞ்சுப் பாடல்களைக் கற்றுக் கொடுத்தான். அஞ்சலி இருவருக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்தாள். எல்லாம் ஒரு கனவு போல அழகாகச் சென்று கொண்டிருந்தது.

அந்தக் கனவைக் கலைத்தது அந்த விமான விபத்து. மோனாவிற்குப் பத்து வயது, எம்மாவிற்கு எட்டு வயது. ஒரு கட்டிடக் கலை மாநாட்டிற்காக டெல்லி சென்றிருந்த லியுக்கும் அஞ்சலியும், திரும்பி வரவேயில்லை. அந்தச் செய்தி வந்த நாள், மங்களம் பாட்டியின் உலகம் இருண்டு போனது.. 

ஆனால், தன் துக்கத்தை வெளிக்காட்ட அவருக்கு நேரமில்லை. 

பயந்துபோய், தன் புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு நின்ற தன் இரண்டு பேத்திகளுக்காக அவர் வாழ வேண்டியிருந்தது. அன்று முதல், அவரே அந்தப் பிள்ளைகளுக்குத் தாயும், தந்தையுமானார்.

"பாட்டி..." மெல்லிய குரல் கேட்டு, மங்களம் தன் நினைவுகளிலிருந்து மீண்டார். திரும்பிப் பார்த்தவர், அங்கே எம்மா நின்று கொண்டிருந்தாள். அவளது நீல நிறக் கண்கள், அவளது தந்தை லியுக்கை நினைவுபடுத்தின. ஆனால் அவளது கருங்கூந்தலும், மென்மையான முக ஜாடையும் அச்சு அசல் அப்படியே அஞ்சலிதான். 

கையில் ஒரு ஸ்கெட்ச் பேடும், பென்சிலும் இருந்தன. "என்னடா கண்ணா, இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சிட்ட?" பாசத்துடன் கேட்டார் மங்களம்.

"காலை வெயில் பால்கனியில அழகா படுது பாட்டி. அதை வரையலாம்னு வந்தேன்," என்றபடி, பாட்டியின் அருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள். 

அவளது கைகள் வேகமாக ஸ்கெட்ச் பேடில் நகரத் தொடங்கின. கோடுகள் இணைந்து, பால்கனியின் கம்பிகளும், அதன் மீது படர்ந்திருந்த மலர்கொடியும், பின்னணியில் தெரிந்த கடலும் உயிர் பெற்றன. 

எம்மாவின் உலகம், அவளது ஓவியங்களுக்குள் இருந்தது. 

அமைதியானவள், அதிகம் பேசமாட்டாள், ஆனால் அவளது ஓவியங்கள் ஆயிரம் கதைகள் பேசும்.

"அக்கா டாவ்? (அக்கா எங்கே?)" என்று பிரெஞ்சும் தமிழும் கலந்த மொழியில் கேட்டாள். 

பாட்டிக்கு அந்த மொழிப் பிரயோகம் பழகிப் போயிருந்தது.

"உன்னை மாதிரி அவளுக்கு அமைதியா ஒரு இடத்துல உட்கார்ந்து பழக்கமில்லையே... காலையிலேயே ஜாகிங் போயிருப்பா. மணி ஆறரை ஆகுதில்ல," என்றார் காபியை உறிஞ்சியபடி.

அவர் சொல்லி முடிப்பதற்குள், வாசலில் காலணி சத்தம் கேட்டது. 

வியர்வையில் நனைந்த டி-ஷர்ட்டுடனும், காதுகளில் ஹெட்ஃபோனுடனும் உள்ளே நுழைந்தாள் மோனா வில்லியம்ஸ். அவள்தான் மூத்தவள். அவளது தோற்றத்தில் ஒருவித கம்பீரமும், வேகமும் இருக்கும். 

தந்தையின் பிரெஞ்சு சாயல் அவளிடம் குறைவாகவும், தாயின் தமிழ் அழகு கூடுதலாகவும் இருந்தது. அவளது அடர் பழுப்பு நிறக் கண்கள் எப்போதும் ஒருவிதத் தேடலுடனும், ஆர்வத்துடனும் மின்னும்.

" போன்ஜோர் (Bonjour) பாட்டி! போன்ஜோர் (Bonjour) எம்மு!" என்றபடி, ஹெட்ஃபோனைக் கழற்றிவிட்டு, பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"வந்துட்டியா?. போய் குளிச்சிட்டு வா. தோசை ஊத்தி வைக்கிறேன்," என்றார் மங்களம்.

"பைவ் மினிட்ஸ் பாட்டி," என்றபடி, தன் அறையை நோக்கி ஓடினாள் மோனா.

அந்த வீடு, அவர்களின் மூன்று பேரின் உலகமாக இருந்தது. 

வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் நினைவுகள் நிறைந்திருந்தன.

 ஹாலில் மாட்டியிருந்த பெரிய ஓவியம், லியுக் வரைந்தது. அதன் கீழே இருந்த மர அலமாரியில், அஞ்சலி பரதநாட்டியத்திற்காக வாங்கிய விருதுகள் வைக்கப்பட்டிருந்தன. மோனாவின் அறையில், அவள் எடுத்த புகைப்படங்கள் சுவர்களை அலங்கரித்தன. எம்மாவின் அறையில், அவளது ஓவியங்கள் நிறைந்து வழிந்தன. 

பாட்டி, அந்த நினைவுகளை எல்லாம் பத்திரமாகப் பாதுகாத்து, தன் பேத்திகளின் கனவுகளுக்கு உரமிட்டுக் கொண்டிருந்தார்.

காலை உணவு மேஜையில், மூவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். 

சூடான தோசையும், தேங்காய் சட்னியும், சாம்பாரும் மணத்தன.

"பாட்டி, இன்னைக்கு தோசை சூப்பர்!" என்றாள் மோனா, மூன்றாவது தோசையை தன் தட்டில் வைத்துக்கொண்டே.

"உனக்கு பிடிக்குமேன்னுதான்டா செஞ்சேன்," என்றார் பாட்டி புன்னகையுடன்.

எம்மா அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் பார்வை, தன் அக்கா மீதே இருந்தது. 

மோனா ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறாள் என்பதை அவளது பரபரப்பான செய்கைகள் காட்டிக் கொடுத்தன.

"பாட்டி... நான் ஒரு விஷயம் சொல்லணும்," என்று ஆரம்பித்தாள் மோனா.

மங்களம் பாட்டி நிமிர்ந்து பார்த்தார். 

"என்ன விஷயம்? காலேஜ்ல ஏதாச்சும் பிரச்சனையா?"

"அச்சோ... அதெல்லாம் இல்லை பாட்டி. இது வேற விஷயம். ஒரு சின்ன ட்ரிப்..." இழுத்தாள்.

"ட்ரிப்பா? எங்க?" 

மோனா தன் பையிலிருந்து ஒரு டேப்லெட்டை எடுத்து ஆன் செய்தாள். அதில் சில புகைப்படங்களைக் காட்டினாள். பச்சை பசேலென்ற வயல்வெளிகள், ஒரு சிறிய நதி, அடர்ந்த மரங்கள், மலைகளின் பின்னணி என அந்தப் புகைப்படங்கள் ரம்மியமாக இருந்தன.

"இந்த ஊர் பேரு தேனாம்பட்டி. கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கு. ஒரு டிராவல் பிளாக்ல படிச்சேன். ரொம்ப அழகான, அமைதியான கிராமமாம். இன்னும் டூரிஸ்ட் கூட்டம் அதிகமா வராத இடமாம்," என்று விளக்கினாள்.

எம்மா ஆர்வத்துடன் அந்தப் புகைப்படங்களைப் பார்த்தாள். 

"வாவ்! அக்கா, சூப்பரா இருக்கு இந்த இடம்."

"ஆமா எம்மு. நாம அங்க போகலாம். ஒரு பத்து நாள். நான் இந்த ஊரோட இயற்கையை போட்டோ எடுக்கணும். நீ அங்க இருக்கிற நிலப்பரப்பை வரையலாம். நம்ம ரெண்டு பேர் வேலையையும் சேர்த்து ஒரு போட்டோ-ஆர்ட் எக்ஸிபிஷன் மாதிரி வைக்கலாம். என்ன சொல்ற?" 

மோனாவின் கண்களில் கனவுகள் மின்னின.

மங்களம் பாட்டிக்கு உள்ளுக்குள் ஒருவிதப் பதட்டம். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள், அவர்களுக்கு சிறகுகள் முளைத்துவிட்டன என்பதை அவர் அறிவார். ஆனாலும், அவர்களைத் தனியாக அனுப்ப அவருக்கு மனம் வரவில்லை. 

புதுச்சேரியைத் தாண்டி அவர்கள் தனியாக எங்கும் சென்றதில்லை.

"தனியாவா? அவ்வளவு தூரம்? அதுவும் தெரியாத ஊருக்கு?" அவரது குரலில் கவலை தெரிந்தது.

"ப்ளீஸ் பாட்டி. நாங்க ரெண்டு பேரும் பத்திரமா பாத்துக்குறோம். அங்க ஒரு ஹோட்டல் இருக்கு. பேரு 'தென்றல்'. நல்லா இருக்குன்னு ரிவ்யூஸ் படிச்சேன். ஆன்லைன்ல புக் பண்ணிட்டா, தங்குறதுக்கு பிரச்சனை இல்லை. ப்ளீஸ் பாட்டி... இது என்னோட கனவு ப்ராஜெக்ட்," மோனா கெஞ்சினாள்.

எம்மாவும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.

"ஆமா பாட்டி. ப்ளீஸ்... நாங்க அடிக்கடி போன் பண்றோம். நீங்க கவலைப்படாம இருக்கலாம்."

மங்களம் பாட்டி இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். அவர்களின் கண்களில் தெரிந்த ஆர்வத்தையும், ஏக்கத்தையும் அவரால் மறுக்க முடியவில்லை. தன் மகளும் இப்படித்தான் இருந்தாள். கனவுகளைத் துரத்திச் செல்பவள். இந்த குணம் அவளிடமிருந்துதான் பிள்ளைகளுக்கு வந்திருக்கிறது.

ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். 

"சரி. ஆனா ஒரு கண்டிஷன். தினமும் ராத்திரி எனக்கு போன் பண்ணிப் பேசணும். அங்க போய்ச் சேர்ந்த உடனே ஹோட்டல் நம்பர் எனக்கு அனுப்பணும். பத்திரமா இருக்கணும். சரியா?"

"ஓகே பாட்டி! தேங்க்யூ! தேங்க்யூ சோ மச்!" மோனா உற்சாகத்தில் துள்ளிக் குதித்து பாட்டியைக் கட்டிக்கொண்டாள். 

எம்மாவின் முகத்திலும் அத்தனை சந்தோஷம்.

அடுத்த சில நாட்கள், அந்த வீடு பயணத்திற்கான தயாரிப்புகளில் பரபரப்பாக இருந்தது. 

மோனா தன் கேமரா, லென்ஸ்கள், ட்ரைபாட் என அனைத்தையும் சரிபார்த்தாள். 

எம்மா தன் ஸ்கெட்ச் பேடுகள், விதவிதமான பென்சில்கள், வாட்டர் கலர்கள் என தன் கலைப் பொருட்களை அடுக்கினாள். 

பாட்டி, அவர்களுக்குத் தேவையான உடைகளையும், வழியில் சாப்பிடுவதற்காக முறுக்கு, தட்டை போன்ற தின்பண்டங்களையும் ஒரு பெரிய பையில் கட்டிக் கொடுத்தார்.

பயணம் புறப்படும் நாள் வந்தது. 

அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து, குளித்துத் தயாராகிவிட்டனர். 

பாட்டி இருவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று, அர்ச்சனை செய்து, விபூதி பூசிவிட்டார்."பார்த்துப் போயிட்டு வாங்க புள்ளைகளா. தெரியாத இடத்துல அதிகம் பேசாதீங்க. ஜாக்கிரதையா இருங்க," என்று அவர் நூறாவது முறையாகச் சொன்னபோது, அவரது கண்கள் கலங்கியிருந்தன.

"கவலைப்படாதீங்க பாட்டி. நாங்க பத்திரமா இருப்போம்," என்று இருவரும் அவருக்கு உறுதியளித்து, அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டனர்.

கோயம்புத்தூருக்கான சொகுசுப் பேருந்தில் ஏறி அமர்ந்தபோது, மோனாவிற்கும் எம்மாவிற்கும் சிறகுகள் முளைத்தது போல இருந்தது. 

ஜன்னல் வழியே, தங்களுக்குப் பிரியமான புதுச்சேரியின் வீதிகள் மெல்லப் பின்னோக்கிச் செல்வதைப் பார்த்தனர்.

"அக்கா, நம்ம வாழ்க்கைல இது ஒரு புது அத்தியாயம் மாதிரி இருக்குல்ல?" என்றாள் எம்மா, தன் தலையை மோனாவின் தோளில் சாய்த்தபடி.

மோனா அவளது தலையை மெதுவாக வருடிக்கொடுத்தாள்.

"ஆமா எம்மு. இது நமக்கான பயணம். நம்ம கனவுகளை நோக்கிய பயணம்."

பேருந்து நகரத்தைக் கடந்து, நெடுஞ்சாலையில் வேகமெடுத்தது. புதுவையின் காலைக் காற்று மெல்ல மறைந்து, ஒரு புதிய நிலத்தின் காற்று அவர்களை வரவேற்கக் காத்திருந்தது. அந்தப் பயணம், அவர்களின் வாழ்க்கையை, அவர்களின் கனவுகளை, அவர்களின் எதிர்காலத்தையே மாற்றப் போகிறது என்பதை அறியாமல், அந்த இரண்டு சகோதரிகளும் உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புகளுடனும் தேனாம்பட்டியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் விதி, தேனாம்பட்டி கிராமத்தில், அவர்களுக்காக ஒரு புதிய கதையை எழுதிக் காத்திருந்தது.

(அது விதி இல்ல .. நான் செய்ய போற சதி.. ஹிஹி)

மனம் மயங்கும் …


No comments