மழை - 8

 



மழை - 8:

"அம்மா எங்க..?" என்று சாதாரணமாகத்தான் கேட்டான்.. ஆனால் இவளோ 'அம்மாக்கிட்ட சொல்லிடுவானோ..!' என்று பயந்தவள் "தென்னமரம் சார்.. எங்க அம்மாக்கிட்ட சொல்லிடாதீங்க.. அம்மா திட்டுவாங்க.." என்று பயந்துக்கொண்டே கூறியவள் "சார்.. தென்னமரம் சார்.. சொல்லிடாதீங்க.." என்று கெஞ்சினாள்.

"ஓய்.. என்ன பார்த்தா உனக்கு தென்னைமரம் போல இருக்கா.. (பனைமரம்போல இருக்கு) ஹ்ம்ம்..?"என்று சின்ன பிள்ளையை மிரட்டும் தொனியில் கேட்க அவள் 'இல்லை'என்று தலையாட்ட "இல்லை.. உன் கண்ணுக்கு என் மண்டைல தென்னைமரம் நட்டு வச்ச மாதிரி இருக்கா..?" என்கவும் அவள் அவன் தோற்றத்தைக் கற்பனையில் நினைத்து பார்த்து அவன் இருப்பதை மறந்து தன்னையும் அறியாமல் கலகலவென சிரித்து விட்டாள்.

"பார்த்து.. பார்த்து.. தென்னைமரம் நட்டு வச்சு தண்ணியெல்லாம் சிறப்பா ஊத்தியாச்சு போல..!" என்று அவள் தன்னை கற்பனையில் அந்த தோற்றத்தில் நினைத்து தான் சிரிக்கிறாள் என சரியாக ஊகித்தான். "ஹா.. ஹா.. ஆமா தென்னமரம் சார்.." என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவள் அவன் தன்னை பார்த்து முறைக்கவும் கப்பென்று மூடிக் கொண்டு ஆடுத் திருடியவள் போல் திருத்திருவென முழித்தாள்.

தன் கைகளால் வாயைப் பொத்தியவாறு அவன் முகத்தைப் பார்த்தவள் மீண்டும் சிரிக்க "ஏய்.. என்ன டி..? சொல்லிட்டு சிரி நீ சிரிக்கிறதை பார்த்தா வேற ஏதோ வில்லங்கமா என்னை வச்சு யோசிச்சிருக்க..? சொல்லு…!" என்கவும் அவளோ "ம்ஹம்" என்று வாயைப் பொத்தியவாறு முடியாது என்று சொல்ல "ஓய் இப்போ சொல்லப் போரியா இல்லையா..?" என்கவும் அவள் சொன்ன பதிலில் எந்தளவுக்கு அவள் கற்பனை குதிரைத் தறிக்கெட்டு ஒடியிருக்கிறது அதுவும் தன்னை வைத்து என்று கடுப்பானான்.

"இல்லை.. இந்த சின்னப் பிள்ளைகளுக்கு முடியெல்லாம் சேர்த்து உச்சியில் ஒரு சிண்டு போடுவாங்க.. அதை தென்னைமரம் என்று தான் சொல்லுவாங்க.. அதான் உங்களுக்கு அப்படி போட்டா எப்படி இருக்குமென்று யோசிச்சேன்..? அந்த கெட்டப்பில் நீங்க ரொம்ப காமெடியா இருக்கவும் சிரிப்பு வந்துடுச்சு.." என்று சிரித்தவளிடம் "ஏன் அதோட விட்டுட்ட..? அப்படியே நெற்றியில் கன்னத்தில் மங்கமா சைஸ் கருப்பு திருஷ்டி பொட்டு வைக்க வேண்டியது தானே..?" என்று கடுப்பாகக் கூறினான்.

(வீரு உன் முடிக்கு வந்த சோதனையைப் பார்த்தியா.. நெற்றியில் புரளும் கேசத்தை ஜெல் தடவி அடக்கி வச்சிருக்க.. உன் முடிக்கா இந்த சோதனை.. ஐயோ இந்த கூத்தை நீ யாருக்கிட்ட போய் சொல்லுவ.. ஐயோ ஐயோ..)

"ஹா.. ஹா.. ஹிமம் அதுவும்.." என்று ஏதோ மேலும் கூற வந்தவள் அவன் முறைக்கவும் வாயைக் கப்பென்று மூடிக்கொண்டாள். "இரு உங்க அம்மாக்கிட்டயே சொல்றேன்.. அப்போதான் சரிப்பட்டு வருவ.." என்று மிரட்டவும் "ஐயோ..! சாரி தென்னமரம் சார்.. ச்சீ தென்னமரம்னே வருது.. சாரி சார் மன்னிச்சுக்கோங்க.." என்று அவனிடம் மன்றாடினாள்.

கண்களில் குறும்புடன் பார்த்தவன் அவளிடம் "ஓகே.. உங்க அம்மாக்கிட்ட சொல்லக்கூடாதுன்னா என்னன மாமான்னு கூப்பிடு..!" என்று கூறவும் "என்னது..?" என்று அதிர்ந்து விழித்தாள் "நீங்க யாரு..? என்னன்னு தெரியாம எப்படி மாமான்னு கூப்பிட முடியும்..? அதெல்லாம் நான் கூப்பிட மாட்டேன்.. நான் எங்க அம்மாக்கிட்ட அடியே வாங்கிப்பேன்.. நகருங்க.. நான் போகனும்.." என்று அவனை தள்ளச் சொல்ல அவனோ தன் நீளக் கால்களை அகட்டி வைத்தவாறு தன் கைகளை மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு ஐய்யனார் சிலைப் போல் அவள் செல்ல வழிவிடாமல் அந்த சந்தை அடைத்துக் கொண்டான்.

"இப்போ எப்படி போவ..?" என்று தன் புருவங்களை ஏற்றியவாறு கேட்க "வழி விடுங்க.. எங்க அம்மா தென்னந்தோப்பு வரைக்கும் போயிருக்காங்க.. அவங்களைத் தானே பார்க்க வந்தீங்க.. தோ தெரியுது பாருங்க.. அந்த தோப்பு.. அங்கே தான் இருக்காங்க.. போங்க காலையிலேயே வம்பு பண்றீங்க.." என்று சற்று தூரத்தில் தெரிந்த தோப்பைக் காட்டி விட்டு அவனை தள்ளி விட்டு செல்லப் பார்த்தாள்.

நடக்கும் காரியமா அது.. அவனோ தேக்கு மர தேகம் கொண்டவன்.. அவளோ கொடிப் போன்ற உடலமைப்பைக் கொண்டவள்.. அவள் தள்ளியா அவன் நகரப் போகிறான்.. இம்மியளவும் நகராமல் அவன் அப்படியே இருக்க.. அவன் நெஞ்சில் தன் கையை பதித்திருத்தவளோ 'இது என்ன கல்லு மாதிரி இருக்கு' என்று தன்னை அறியாமல் மேலும் கையை அவனது நெஞ்சில் பதிக்க "என்ன உன் ஆராய்ச்சியெல்லாம் முடிஞ்சிருச்சா..?" என்கவும் தான் "சாஹி என்ன காரியம் டி பண்ற..?" என்று அதிர்ந்தவாறு தன் கையை எடுத்துக் கொண்டாள்.

"ஓய்.. மாமான்னு கூப்பிட முடியுமா முடியாதா..? இரு உங்க அம்மாக்கிட்ட சொல்றேன்.." என்று மிரட்டவும் "சொன்னா சொல்லிக்கோங்க.. எனக்கென்ன..? என்ன அடிப்பாங்க.. நான் வாங்கிப்பேன்.. தேச்சுவிட்டா சரியா போய்டும்.. அதுக்காகவெல்லாம் யாருன்னே தெரியாத உங்களை மாமான்னு கூப்பிட முடியாது.." என்கவும் "சரி நான் எங்க அத்தைக்கிட்டையே பேசிக்கிறேன்.." என்றவனை கைப் பிடித்து நிறுத்தியவள் "யாரு உங்க அத்தை..?" என்று வினவவும் "உங்க அம்மா தான்.. அத்தை மகளே.." என்று சிரிப்புடன் கூற "நீங்க.. நீங்க.." என்று திக்கினாள்.

"நான்.. நான்.." என்று ராகம் பாட "நீங்க.. அந்த அமெரிக்கன் அர்னால்டோட தம்பியா..?" என்று கேட்கவும் "யாரு அமெரிக்கன் அர்னால்டு..?" என்று யோசித்தவன் மகேனை தான் அவள் சொல்கிறாள் என புரிந்துக்கொண்டவன் "டேய் மகேன்னு.. உனக்கு வச்சிருக்காங்கப் பாரு பேரு.." என்று அடக்க மாட்டாமல் சிரித்தான்.. தன்னை அறியாமலே அவன் சிரிப்பதைப் பார்த்து ரசித்தாள்.

தன் சிரிப்பை அடக்கியவன் "யாரு..? எங்க அண்ணனுக்கு இந்த பேரு வச்சது.." என்று கேட்கவும் "செளமி தான்.." என்று அவன் கேட்கவும் பேச்சு வாக்கில் கூறிவிட்டாள்.. அவள் கூறியப் பிறகுதான் நியாபகம் வந்தது தன் அக்கா இதனைப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று கூறியது நினைவு வர "ஐயோ போச்சி.. என் ஓட்ட வாய் இருக்கே.. இப்படி உளறிட்டேனே.." என்று தன்னை தானே கடிந்துக்கொண்டாள்.

"செளமி.. ஏன் எங்க அண்ணனுக்கு இந்த பேரை வச்சா..? நாங்க இங்க சின்ன வயசுல வந்ததோட சரி.. அதுக்கப்புறம் மீட் பண்ணியதே இல்லையே.." என்று கேள்விகளால் அவளைத் துளைத்தெடுத்தான். "அது.. அது.." என்று திக்கினாள் 'சொன்னால் அக்கா திட்டுவாள்.. சொல்லவில்லையென்றால் இந்த தேக்கு மரம் விடாது..' என்று மனதிற்குள் நினைத்தவள் அவனிடம் "நான் போகனும்.." என்று உதட்டைப் பிதுக்கி அழுகைக்கு தயாராக அவள் பிதுக்கிய உதட்டை தன் விரல்களால் பற்றினான்.

(தேக்கு மரமா.. நீயும் அவனுக்கு பட்டுப்பட்டுன்னு பேரு வைக்க ஆரம்பிச்சுட்டியா.. விளங்கிடும் தென்ன மரம்.. தேக்கு மரம்.. இன்னும் என்னன்ன லிஸ்ட்ல இருக்கு அவுத்து விடு..)

அவள் சதைப்பற்றான கீழுதட்டைப் பற்றியதும் தன் கண்களை விரித்தவள் "விடுங்க" என்று அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளவும்.. தன் மற்றொரு கையால் அவள் இருக்கையைப் பற்றிக் கொண்டவன் "சாக்கிக்குட்டி" என்று அவள் கண்களை பார்த்து மயங்கியவன் "நீ சொல்லு பேபி.. எப்படி செளமி எங்க அண்ணனுக்கு பேரு வச்சா..? நீ சொன்னா என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுவேன்.. சொல்லு நீ என்னை தாரளமா நம்பலாம்.." என்று கூறவும் "விடுங்க விடுங்க.." என்று அவனிடமிருந்து பிரிந்தவள் "யாருக்கிட்டையாவது நீங்க சொல்லிட்டா.. என்ன பண்றது..?" என்று பயத்துடன் கேட்டாள்.

"நான் சொல்ல மாட்டேன் சாக்கிக் குட்டி.. நீ சொல்லு.. தாராளமா என்னை நீ நம்பலாம்.." என்று அவளிடம் கூறவும் "அது அக்கா மாமாவை பேஸ்புக்கில் பார்ப்பா.. அவரோட போட்டோஸ் எல்லாம் சேவ் பண்ணி வச்சுப்பா.. இது யாருக்கும் தெரியாது.. என்கிட்ட மட்டும் சொன்னா.." என்று கூறவும் "ஓ.. அப்போ லவ்வா..?' என்று கேட்கவும் "தெரியலை.. ஆனால் அவங்க போட்டோஸ் சேவ் பண்ணி வச்சு.. அதனை பார்த்து ரசிப்பா.." என்று கூறவும் "இது காதல் தான்.." என்று ஊர்ஜிதமானது வீருக்கு.

அவன் மனமோ "அப்பாடி.. அப்போ நம்ம ரூட்டும் க்ளியர்.." என்று ஆசுவாசமாக உணர்ந்தவன் "ஓய்.. அவன் மாமான்னா நானும் மாமா தானே.. என்னையும் மாமான்னு கூப்புடுற.. இல்லை உன்னை காக்காவுக்கு தூக்கிப் போட்டுடுவேன்.." என்கவும் "என்னை உங்களால் தூக்க முடியாது.. நான் எவ்ளோ கிலோ தெரியுமா.." என்று பேசிக் கொண்டிருக்கும் போதே தன் ஒற்றைக் கையாலேயே அவளைத் தூக்கி தன்னோடு அணைத்து பின் இரண்டு கைக்கொண்டு குழந்தைப் போல் அவளைத் தன் கைகளில் ஏந்தியவன் அவள் "விடுங்க விடுங்க.." என்று கத்துவதைப் பொருட்படுத்தாமல் தலைக்கு மேல் தூக்கினான்.

(ஏய்.. வாங்கோ வாங்கோ.. சாமியோவ் சர்க்கஸ் வித்தை வாங்க சாமியோவ்... யாருக்கிட்ட எங்க வீரு நூறு கிலோவா இருந்தாலும் அசால்ட்டா தூக்கும் என் சிங்கக்குட்டி..)

அப்பொழுது "லொள் லொள் " என சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தவன் ஒரு நாய் ஓடி வரவும் அவளை பட்டென்று கீழே இறக்கி விட்டான்.

ஒரு நாய்க்குட்டியைப் பார்த்து என் சிங்கக்குட்டி ஆபாயிடுச்சே..

 இதென்னடா என் சிங்கத்துக்கு வந்த சோதனை..

வீர் காதில் "லொள் லொளென.." சத்தம் கேட்டதுமே திரும்பிப் பார்த்தவனின் கண்கள் அகல விரிந்தது. "யப்பா.. என்னா பெருசு..? இது என்ன நாயே இப்படி இருக்கு..? கடிச்சா கொத்து சதை காலி.. வீரு வாய் வச்சா இரண்டு கிலோ சதையை எடுக்காம விடாது போலடா.." என்று நினைத்தவன் தன் கைகளில் இருந்தவளை இறக்கி விட்டவன்.. அந்த நாயின் கூர்மையான பற்களைக் கண்டதும் "ஐயோ..!" என்று மனதிற்குள் அலறினான்.

(வெளியே பயந்தா அவனது சாக்கிக்குட்டி அவனை என்ன நினைப்பாள்..)

உள்ளுக்குள் பயத்துடனும் வெளியே தெனாவட்டாக நின்றவனை.. சோதிப்பது போலவே அவன் மீது தாவி தன் இரட்டைக்கால்களை அவன் மீது வைத்துவாறு தன் கோரப் பற்களைக் காட்டி "உர்ர்ர்ர்.. லொள் லொள்ளென.." குளைக்க இவனுக்கோ "அட லூசுப் பிடிச்ச நாயே..! நான் தான் உன்னை பார்த்ததுக்கே பயப்படுறேன்னு தெரியுதல்லா... அப்புறம் என்னதுக்கு மேல வேற ஏறி பயப்படுத்துற.. மூஞ்சியும் முகரக்கட்டையும் பாரு.." என்று மனதிற்குள்ளே திட்டினான்.

"புஜ்ஜிக்குட்டி..! மாமாடா.. நம்ம மாமா ஒன்னும் இல்லை.." என்றவாறு அதன் காதையும் கழுத்தையும் மாறி மாறித் தடவிக்கொடுத்தவள் அதனை ஆசுவாசப்படுத்தினாள். "அதை அந்த தடவு தடவனுமா.. நோ சாக்கிக்குட்டி உன் கை என்மேல் தான் படனும்.. அதை தடவாத.." என்று மனதிற்குள்ளேயே புலம்பியவன் சாக்கியின் புஜ்ஜிக்குட்டியைப் பரம எதிரிப்போல் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

அவனது மனசாட்சியோ "ஏன்டா ஒரு நாயைப் போய் இப்படி பார்க்கிற..? அது வாயில்லாத ஜீவன் டா.." என்கவும் "அதுவா வாயில்லாதது.. பார்த்த தானே பல்லு எவ்வளவு பெருசுன்னு.. கவ்விருந்த போச்சு.. நம்ம ஹாஸ்பிட்டல் முதல் பேஷண்டே நான் தான்.. அதுக்கா வாயில்லை..? கடுப்பக் கிளப்பாமல் ஓடிடு.."

சாஹித்யா தன் புஜ்ஜிக்குட்டியை தடவிக்கொடுத்துக் கொண்டே அதன் நெற்றியில் முத்தம் வைத்து "செல்லக்குட்டி.." என கொஞ்ச அதனைப் பார்த்தவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

"தடவிக் கொடுக்குறான்னு பார்த்தால்.. முத்தம் வேற கொடுக்குறா.." என்று தன் மனதிற்குள்ளேயே அவளிடம் சிணுங்கியவன் "இந்த நாயிக்கு வந்த வாழ்வைப் பார்த்தியா ச்சே.." என்று பொறாமையுடன் பார்த்தான்.

(பொறாமையில் புஸ்வானமா பொரியும் நம் வீரைப் பாருங்க..)

அவள் முத்தம் கொடுக்கவும் புஜ்ஜிக்குட்டியும் தன் நீண்ட நாக்கால் அவளின் கைகளை நக்கி அவள் மேல் உடலை உரசிச் செல்லம் கொஞ்சியது. "வீரோ நான் பண்ண வேண்டியதெல்லாம் இது பண்ணுது ஷிட்.." என்று மனதுக்குள் குமுறினான்.

அவள் தடவிக் கொடுக்க அதுவும் அவளிடம் செல்லம் கொஞ்சிக்கொண்டே வாலை ஆட்டியது..

(உன்னையே முறைச்சுப் பார்த்துட்டே இருக்கும் இந்த வீருக்கு முத்தம் கொடுத்தாலும் அவன் வாலை ஆட்டுவான் சாக்கிக்குட்டி.. நான் டபிள் மீனிங்கில் சொல்லலை ப்பா…)

"மாமா" என்ற ஆச்சரியமாக ஒரு குரல் கேட்கவும் நிமிர்ந்துப் பார்த்தான்.. ஒரு பெண் நின்றிருக்கவும் அவளைப் பார்த்ததுமே தெரிந்துக்கொண்டான் செளமியா என்று.. "ஹாய் செளமி..!" என்று கையசைக்க அவளது கண்களோ ஆர்வமாக அவன் பின்னால் யாரையோ தேடுவது போல் இருந்தது.. தன் தமையனை தான் தேடுகிறாள் என்று புரிந்துக்கொண்டவன் "ஹுக்கும்" என்று தொண்டையை செறுமவும் தன் கவனம் கலைந்து அவனைப் பார்த்தாள்.

(உங்க அமெரிக்கன் அர்னால்டை தேடுறீங்களா மியாக்குட்டி..)

"வாங்க மாமா உள்ளே.. அத்தை மாமா எப்படி இருக்காங்க.." என்று கேட்டவள் தன் அர்னால்டை பற்றிக் கேட்க கூச்சமாக இருக்கவும் எதுவும் கேட்காமல் அவனை உள்ளே அழைத்தாள். "ஓய்.. சாஹி புஜ்ஜியைக் கொஞ்சினது போதும்.. மாமாக்கு காபிப் போட்டுக் கொடு.. நான் பிள்ளைகளை கலைச்சி விட்டுட்டு வரேன்…" என்றதும் அவன் குழப்பமாக பார்க்க "சின்ன பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்கிறேன் மாமா.." என்று விளக்கம் கொடுக்கவும் அவனுக்கு புரிந்தது தன் சாக்கிக்குட்டி தாஜா பண்ணிய சிறுவன் இங்கு டியுஷனிற்கு வந்திருக்கிறான் என்று…

புஜ்ஜியை விட்டுவிட்டு "வாங்க போலாம்.." என்று உள்ளே அழைத்து சென்றாள் சாஹித்யா.. "ஏன் மாமான்னு கூப்பிட்டா குறைஞ்சிப் போயிடுவியா..? குள்ள வாத்து.." என்று மனதிற்குள் சிணுங்கியவாறு அவள் பின்னால் சென்றாள்.

"வாங்க.. கை கால் கழுவிட்டு வந்துரலாம்.." என்று அழைக்கவும் "வெயிட் அ செகண்ட்..!" என்றவன் தன் மொபைலையும் கையில் கொண்டு வந்திருந்த பொருட்கள் அனைத்தையும் அங்கிருந்த மேஜையில் வைத்தவன் "லெட்ஸ் கோ சாக்கி.." என்று அவளுடன் சென்றான்..

இருவரும் பின் கட்டுக்கு சென்று... அங்கிருந்த கிணற்றில் நீர் இரைத்து வாளியில் அவனிடம் கொடுக்க தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவளையே கூர்மையாகப் பார்த்தவன் "ஹே சாக்கி.. மாமா கூப்பிடுடி.." என்கவும் அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்து "இவன் என்ன லூசா.." என்பதுபோல் பார்த்தாள்..

அவள் பார்வையைக் கண்டு "இவன் என்ன லூசான்னு தானே நினைக்கிற..?" என்று கேட்டதும் "ஐயோ..! இவன் என்ன அப்படியே சொல்றேன்.." என்று நினைத்தவள் தன் முட்டைக் கண்களை விரிக்க "பார்த்து வெளியே வந்துரப்போகுது.." என்றவன் அவள் கையிலிருந்த வாளியை வாங்கி முகம் கைக்கால்களைக் கழுவிக் கொண்டு தன் கைகளில் இருந்த தண்ணீரை அவள் மீது தெளிக்கவும் "ஐயோ..!" என்று கண்களை மூட அதை பயன்படுத்தி அவள் பாவாடையில் தன் கையைத் துடைத்தவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு ஓடிவிட்டான்.

(எதுக்கு இவன் ஓடுறான்.. அவ அடிச்சிடுவா என்றா இல்லை வெட்கமா..கண்டிப்பா வெட்கம் மட்டும் வேண்டாம் வீர்..)

இங்கு பிள்ளைகளை வீட்டிற்கு போக சொல்லிவிட்டு வந்த செளமி மேஜையின் மீது இருந்த வீரின் போன் அடிக்கவும் எடுப்பதா வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்த (சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாமா..) அதில் மகேனின் கம்பீரமான முகம் தெரியவும் ஏதோ ஒரு வேகத்தில் எடுத்து விட்டாள்.

"ஹலோ..! வீர் அத்தை வீட்டுக்குப் போயிட்டியா டா..?" என்று மகேன் இந்த பக்கம் கேட்கவும் அவள் எங்கு அதையெல்லாம் கேட்டாள் அவள் அவன் 'ஹலோ' என்றதுமே அவனுடைய ஆண்மை நிறைந்த குரலில் கவரப்பட்டவளின் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவியென பொழிய ஆரம்பித்திருந்தது.

அந்த பக்கம் மகேன் "டேய்.. கேட்குதா..? வீர்..?" என்று கத்த "ஹலோ..!" என்று தன் நடுங்கும் குரலால் பேச "இது யாரு பா புதுசா யாரோ பொண்ணு..? போற வழியில் கரக்ட் பண்ணிட்டானா..?" (ஆமா ஆமா)என்று ஒரு நிமிடம் யோசித்தவன் "ச்சே ச்சே நம்ம வீர் அப்படிலாம் பண்ண மாட்டான்.." (டேய் கூருக்கெட்டவனே அவன் ஆளுப் பார்த்து புக்கே பண்ணிட்டான்) என்று நினைத்தவன் "ஹலோ..! நீங்க யாருங்க என் தம்பி போன் எப்படி உங்க கையில் வந்துச்சு.." என்று வினவினான்.

(இந்த பக்கி அவனை இன்னுமா நம்புது..? அவன் அவனோட ஆளப் பார்த்து முத்தம் வரைக்கும் போயிட்டான்.. இவன் இன்னும் அவனை நம்புறான்..இன்னுமா வீரி இந்த உலகம் உன்னை நம்புது.. சோ சேட்)

"நான் செளமியா பேசுறேன்.. இங்க தான் மாமா இருக்காங்க.." என்று நடுங்கும் குரலை கேட்டதும் சற்று நேரம் அமைதியாக இருந்தவன் "ஏய் பூனை..! எப்படி இருக்க..?" என்கவும் "ஹிம்ம்.. நீங்க எப்படி இருக்கீங்க மாமா..?" என்று கேட்டதும் "என்ன மரியாதை தூள் பறக்குது..?" என்று கேலியாக சிரித்துக்கொண்டு கேட்டான்.

(மகேனு வேண்டாம் அப்புறம் உண்மையாவே பறக்க வச்சுருவா..)

அவன் சிரிக்கவும் அப்படியே அதனை உள்வாங்கியவள் பேசாமல் அப்படியே இருக்கவும்.. வீர் வரவும் சரியாக இருந்தது. "யாரு செளமி..?" என்று கேட்டுக்கொண்டே வந்தவனிடம் "மகி மாமா தான்.. போன் அடிச்சிக்கிட்டே இருந்துச்சு அதான் மாமா எடுத்தேன்.." என்று அவனிடம் போனை கொடுத்து விட்டு சமையலறைக்குள் சென்று விட்டாள்.

செளமி வீருக்கு காபி போட்டுக்கொண்டு சென்று கொடுக்க... முகமெல்லாம் கோபத்தில் சிவந்து பின் கட்டிலிருந்து வந்தவளைப் பார்த்த செளமி "ஏன் டி இப்படி வந்துருக்க..? என்னாச்சு..? இப்படி முகம் சிவந்துருக்கு.." என்று கேட்க சாஹித்யா வீரை முறைத்துப் பார்த்தாள்..

அவனோ அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே கண்ணடித்தவன் ஒன்றும் தெரியாது போல் காபியைக் குடித்துக் கொண்டிருந்தான்.. அவனது சாக்கிக்குட்டியோ தன் மனதிற்குள் "முத்தமா கொடுக்குற இரு.. உனக்கு மொளகா பொடி தான்.." என்று நினைத்துக்கொண்டு "செளமி..! போய் அம்மாவை கூட்டிட்டு வா.. நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." என்று சாஹித்யா சமையலறைக்குள் சென்றாள்.

"நீங்க சாப்பிடுங்க மாமா.. நான் அம்மாவை கூட்டிட்டு வரேன்.." என்று செளமி தன் தாயை அழைக்க சென்றாள்.. இங்கு சமையலறைக்குள் வந்தவளோ "இவ்வளவு பெருசு வளர்ந்திருக்கான்.. அறிவு இல்லை முத்தம் கொடுக்கிறான்... சின்ன வயசுல கொடுத்தான் சரி.. இப்போவும் அப்படியே கொடுக்கிறான்.. லூசு" என்று புலம்பினாள்..

(டேய் வீரு நீ அப்போவே அப்படியா.. பிஞ்சுல பழுத்த கேசா நீ…)

புதிதாக ஒரு காபி போட்டு.. அதில் சர்க்கரைக்கு பதில் உப்பை அள்ளி போட்டு.. நன்றாக கலக்கி எடுத்து வந்து.. அவனிடம் கொடுக்க "நான் இப்போதான் காபி சாப்டேன் சாக்கி.. நீ குடி.." என்கவும் "ஐயோ..! ச்சீ இதையா.. நானா..?" என்று உள்ளுக்குள் அலறியவள் "நான் போட்டதை நீங்க குடிச்சுதான் ஆகனும்.." என்று அன்பு கட்டளையிட பாவம் அதை நம்பி எடுத்து வாயில் வைத்தான்..

( உப்பு சாப்பிட்டு உப்பி போகனும்னு உன் தலையில் எழுதியிருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது வீரு.. அனுபவி ராசா அனுபவி..)

ஒரு மடக்கு தான் குடித்திருப்பான் அதற்குள் புறையேறி வாயில் இருந்ததை துப்பி "என்ன டி இது..!" என்று கலவரத்துடன் கேட்கவும் "ஹா..ஹா.." என்று வில்லி போலவே சிரித்தவள் "நீங்க எனக்கு முத்தம் கொடுத்ததுக்கு மிளகாய் பொடி போடலாம்னு இருந்தேன்.. நீங்க ஊருக்கு போகனும் இல்லையா.. போற வழியில வயிறு கலக்கிடுச்சுனா.. என்ன பண்றது..? பாவம் அதான் உப்பு போட்டேன்.." என்று அசால்டாக கூற "அடிப்பாவி..! அவ்வா.." என்று வாயில் விரல் வைத்தான்..

(உஷாரு வீரு.. பாலுக்கு பதிலா பெனாயில் குடுக்காம போனாலே.. அதை நினைச்சு சந்தோஷ படு..)

பின் சௌமி தன் தாயை அழைத்து வரவும் அவரிடம் பேசியவன் மருத்துவமனையின் திறப்பு விழாவை பற்றி கூறியவன் அழைப்பு விடுத்து கிளம்பினான்..

மழை பொழியும்... 


No comments:

Theme images by RBFried. Powered by Blogger.