உள்ளம் - 1



 

உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்


மயக்கம் 1:


அந்த கல்யாண மண்டபம் பரபரப்புடன் காணப்பட்டது.அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் கிசிகிசுப்பாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.


இவர்களுக்கு வேறு வேலை என்ன இருக்க போகிறது.. லட்டு போல விஷயம் கிடைத்து விட்டதல்லவா இனி ஒரு வாரத்திற்கு இவர்களின் பொழுதுபோக்கு நன்றாக போகும்..


மேடையில் அழுது கொண்டிருந்தவளைக் கண்டு பாவமாக இருக்க அருகில் இருந்த தோழிகள் அவளை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றார்கள் ஆனால் முடியவில்லை. 


ஊரைக்கூட்டிக் பத்திரிக்கை எல்லாம் கொடுத்துக் கல்யாணம் வைத்துக் கல்யாணத்தன்று மாப்பிள்ளை வேறு ஒரு பெண்ணை மணந்துக்கொண்டான் என்ற செய்தியைக் கேட்டால் எந்த பெண்ணுக்குத்தான் அழுகை வராது. 


அவள் தன் திருமணத்தை பற்றி எவ்வளவு ஆசைகள் எவ்வளவு கனவுகள் கண்டிருப்பாள். அனைத்தும் நொடியில் கருகி விட்டதே


தன் அக்கா மகள் அழுவது தாங்காமல் "அம்மு அழாதேடா அவன் பெரிய இவனா அவன் இல்லைனா என்ன நான் ஆயிரம் மாப்பிள்ளை கொண்டு வரேன் நீ யாரைக் கைக்காட்டுறியோ அவனைக் கட்டி வைக்கிறேன்டா." என்று கோபத்தில் கர்ஜித்தான்.


அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட்டவாறே மீண்டும் தொடர்ந்தான்.


" அவனுக்கு கொடுத்து வச்சது அவ்ளோதான் விடுடா...நீ ஏன்டா அம்மு அழுகுற அவனை வெட்டுனாதான் என் ஆத்திரம் தீரும்…"என்றவன் என்ன பண்ணுவது என்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்கும் தன் அக்கா கணவரிடம் "மாமா மங்கையை பார்த்துக்கோங்க" என்றவன் "அவன் எங்க இருந்தாலும் முதல்ல வெட்டிட்டுதான் மறு வேலை" என்றவன் அழுதுக் கொண்டிருந்த தமக்கையையும் தன் தாயையும் பார்த்தவன் "இப்போ எதுக்கு அழுவுறீங்க எழவா விழுந்துடுச்சி நீங்க அழுகுறதால அம்முவும் அழறா" என்று அதட்டியவனைத் தன் பக்கம் திருப்பினாள் மங்கை என்னும் மங்கையர்கரசி.


 தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள் அவனை தீர்க்கமாகப் பார்த்து "மாமா எனக்காக எது வேணாலும் செய்வியா"


"கண்டிப்பாடா குட்டிமா... உனக்கு செய்யாமா யாருக்கு செய்யப்போறேன்...நீ அழாம மட்டும் இருடா எனக்கு அது போதும்.. பாரு அழுது அழுது முகமே சிவந்துபோச்சு" என்று தன் ஆசை அக்கா மகளின் கன்னத்தை வருடினான்.


அவன் கையோடு தன்கையை சேர்த்து தன் கன்னத்தில் வைத்து அழுத்தியவள் "மாமா நான் அழக்கூடாதுன்னா எனக்கு ஒரு உதவி பண்ணு மாமா "


"சொல்லுடா என்ன பண்ணனும் அதை செஞ்சுட்டுதான் மறுவேலை "என்றதும் அவள் சொன்னதைக்கேட்டுத் தன் காதுகளில் சரியாகத்தான் விழுந்ததா என்று "என்ன குட்டிம்மா சொன்ன இப்போ" என்றவனின் குரல் மெலிதாக ஒலித்தது.


"என்னை கல்யாணம் பண்ணிக்கோ மாமா ப்ளீஸ்"என்றதும்தான் தாமதம் ஏதோ பேச வந்தவனை "ப்ளீஸ் மாமா எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு என்னை கட்டிக்கோ மாமா.. என்னை நீ கட்டிகளைனா நான் இப்படியே இருந்துட்டு போறேன்" என்றதும் அவனுக்கு நிறைய விஷயங்களில் இடித்தது.


அப்படியே நின்றவனிடம் அவன் தாயும் தமக்கையும் வந்து "அருளு முகூர்த்த நேரம் முடியப்போகுதுடா என் பெண்ணுக்கு வாழ்க்கை குடுடா "என்று அவனை கெஞ்சி யோசிக்க விடாமல் அழைத்து சென்று மேடையில் அமர்த்தினர்.


அதன் பிறகு சற்று சலசலப்பு அடங்கியதும் ஐயர் சீக்கிரம் வாங்கோ நல்ல நேரம் முடியப்போகுது என்று குரல் கொடுக்க பின் மங்கை வந்து அவன் அருகில் வரவும் அவள் கழுத்தில் ஒரு நடுக்கத்துடனே தாலியைக் கட்டினான் அருள் பாண்டியன்.


மாப்பிள்ளை வீட்டார் அப்பொழுதே கிளம்பி விட்டனர். அவர்களுக்கு அதற்கு பின் அங்கு என்ன வேலை.. தன் மகன் செய்து வைத்திருந்த காரியத்தில் தலை காட்ட முடியவில்லை..


ஆறுமுகம் சீதா தம்பதியருக்கு இரண்டு செல்வங்கள் முதலில் மங்கையர்கரசி என்ற மகளும் அடுத்தது வினோத் என்ற மகனும் இருந்தனர்.


சீதாவின் தம்பி தான் அருள் பாண்டியன்.


சீதாவின் பெற்றோருக்கு ஆண் பிள்ளை இல்லை என்று கோவில் கோவிலாக ஏறி இறங்கினர். ஒரு வழியாக சீதா பிறந்து பதினைந்து வருடம் கழித்து அருள் பாண்டியன் பிறந்தான்.


அருள் பாண்டியனுக்கு எட்டு வயது ஆகும் பொழுதே சீதாவிற்கு தங்கள் ஊரிலேயே நல்ல பையனாக பார்த்து சிறு வயதிலேயே திருமணம் முடித்தனர்.


திருமணம் முடிந்த அடுத்த வருடத்தில் மங்கை பிறந்தாள்.பெற்றெடுத்தது மட்டுமே சீதா அதன் பிறகு அவளுக்கு எப்பொழுதும் பாண்டியன் தான்.


எங்கு சென்றாலும் தன் அக்கா மகளை கைகளில் வைத்துக் கொண்டே சுற்றுவான்.


சிறு வயதில் தன்னை பார்த்து சிரித்த அந்த குட்டி பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. மங்கையும் சிறு வயதில் இருந்தே தன் மாமனிடமே இருப்பாள்.


அருளுக்கு மங்கை என்றாள் உயிர்...மங்கை எப்பொழுதும் தன் பாட்டி வீட்டில் தான் இருப்பாள்.


அவள் அழுதாள் இவனுக்கு தாங்காது "என்ன டா குட்டிமா வேணும்" என்று உருகுவான்.இதை அந்த கேடி நன்றாக தெரிந்து கொண்டு எது வேண்டும் என்றாலும் தன் மாமனிடம் தான் கூறுவாள்.


அவனும் அவள் கேட்பதை வாங்கி குவிப்பான்.அப்படி தான் ஒரு நாள் கடையில் இருந்த உடையை பார்த்து கேட்டாள்.பிறகு சாக்லெட் அது இது என்று அவள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து கூட்டி வந்தவனிடம் சீதா சண்டை போட்டாள்.


"ஏன்டா தம்பி அவ கேக்குறதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிற இதே பழக்கம் தானே பெரியவள் ஆன பிறகும் வரும்". 


"அப்பறம் நம்மால் வாங்க முடியாத பொருளை காட்டி அது வேண்டும் என்று அடம் பிடித்தால் என்ன செய்றது " என்று கேட்டதும் "அதெல்லாம் என் குட்டி மா சமத்துப் பொண்ணு எதை கேட்கணுமோ அதை தான் கேட்பா இல்லடா குட்டி மா"


" நான் சொல்ற பேச்சை கேட்ப தானே" என்றதும் "ஆமா மாமா நீ சொல்றது மட்டும் தான் கேட்பேன்" என்று கூறிவிட்டு தன் தாயிடம் "வெவ்வெவ் " என்று வக்களம் காட்டியவள் தன் தாய் அடிப்பதற்குள் வீட்டினுள் ஓடி விட்டாள்.


அருளுக்கு பதினைந்து வயது இருக்கும் பொழுது அவன் தந்தை மாரடைப்பால் இறந்து விட்டார்.


 நாற்பது ஏக்கர் நிலம், ஆடு , மாடு என அனைத்தும் இருக்கவே தன் தந்தை போன பிறகு தன் தாயால் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று பத்தாம் வகுப்போடு பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டு விவசாயத்தில் இறங்கி விட்டான்.


ரெண்டு தெரு தள்ளியிருக்கும் தன் பாட்டி வீட்டிற்கு வந்தவள் தன் மாமனிடம் தன் தாய் அடித்து விட்டாள் என்று கூறினாள்.


அப்பொழுது தான் வயலில் இருந்து வந்தவன் இவள் அழுது கொண்டு வரவும் "என்ன டா ஆச்சு ஏன் அழுகுறீங்க" என்றதும் "மாமா அம்மா என்னை முதுகுலையே ரெண்டு அடி அடிச்சுடுச்சு... வா வந்து சண்டை போடு" என்று அவன் கையை பிடித்து இழுத்தாள்.


அவளிடம் என்ன ஏது என்று கூட கேட்காமல் உடனே அவளை தன் வண்டியில் ஏற்றி அழைத்து சென்றான்.


"எதுக்குக்கா புள்ளைய அடிச்ச பாவம் புள்ள எப்படி அழுகுதுன்னு பாரு... இனி புள்ள மேல கையை வைக்குற வேலையெல்லாம் வச்சுகாத ...அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது..."


"டேய் முதல்ல அவ என்ன பண்ணினாள் என்று கேளுடா " என்றதும் சீதாவை முறைத்தவன் "என்ன குட்டி மா பண்ணீங்க அம்மா உங்களை அடிக்குற அளவுக்கு ..." என்று அவன் கேட்டதும் "மாமா இப்பொ கொஞ்ச நாளுக்கு முன்னாடி பரிட்சை எழுதினேன்ல அதுல மார்க்கு கம்மியா வாங்கிட்டேன்னு அடிச்சிது..." என்றதும் சீதாவை முறைத்து "அவ நல்லா தானே படிப்பா ஒரு தடவை கம்மியா எடுத்தா அதுக்கு அடிப்பியா..."என்று திட்டியவன் மங்கையை தூக்கி கொண்டு "நீ வா குட்டிமா நாம நம்ம வீட்டுக்கு போலாம்..."


அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்த போது அருளின் அம்மா அலமேலுவும் பக்கத்து வீட்டு மணிமேகலையும் பேசிக்கொண்டிருந்தனர்.


இவர்கள் இருவரும் வரவும் மணிமேகலை "என்னடி வாயாடி எப்போ பார்ததாலும் உன் மாமனையே கட்டிக்கிட்டு திரியுற ..." என்று கேட்டதும் "என்னோட மாமா நான் கட்டிப்பேன் இல்ல கட்டையால கூட அடிப்பேன் உனக்கு என்ன வந்துச்சு..."என்று கேட்டாள்.


"ஓஹ் உன் மாமன கட்டிக்கிறியா" என்று கேட்டதும் "ஹிம்ம்"என்று கூறியதும் இதை கேட்ட அருள் இது தேவையில்லாத பேச்சு என்பது போல் "நீ வா குட்டிமா உள்ள போகலாம் "என்று அழைத்து போய் விட்டான்.


பின் மணிமேகலை சென்ற உடன் உள்ளே வந்த தன் அம்மாவிடம் "எதுக்கு சின்ன பிள்ளைகிட்ட இப்படி பேசுறாங்க... சின்ன பிள்ளை கிட்ட இப்படிலாம் பேச கூடாதுன்னு தெரியாதா... இனி இப்படி பேசுறத கேட்டேன் நான் மனுஷனா இருக்க மாட்டேன் பாத்துக்கோ..." என்று கடிந்து விட்டு உள்ளே சென்று விட்டான்.


மங்கை ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது பூப்பெய்தினாள்.


அப்பொழுது வெளியில் செல்ல அதிகமாக அவளை சீதா அனுமதிக்க வில்லை. 


அவளாவது சீதா பேச்சை கேட்பதாவது.முதலில் சீதா வெளியே செல்ல கூடாது என்று சொன்னதும் "நான் அப்படி தான் போவேன் "என்றவளிடம் "இரு டி உனக்கு ஒருத்தன் பரிஞ்சு பேசிக்கிட்டு வருவான்ல அவன் வரட்டும் அவன் சொன்னா தானே மகாராணி கேப்ப.. வரட்டும் அவன்..." என்று கூறினார்.


அவன் வந்ததும் அவனிடம் சொன்னதும் "சரி நான் மங்கை கிட்ட பேசிக்கிறேன் 

விடு ..." என்று அவளை பார்க்க சென்றான்.


தோட்டத்தில் பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் விளையாடி கொண்டிருந்தாள்.


அருளை கண்டதும் "மாமா" என்று கூவிக்கொண்டே இவனிடம் ஓடி வந்தாள்.


அவள் வந்ததும் தேன் மிட்டாயை நீட்டியவனிடம் "ஐ... மாமா தேன் மிட்டாய்" என்று வாங்கியவள் அங்கிருந்த பிள்ளைகளுக்கு கொடுத்து தன் மாமனுக்கும் குடுத்து தானும் உண்டாள்.


அவளை உள்ளே அழைத்து சென்று "குட்டிமா இனி நீ சின்ன பிள்ளை இல்லடா...இனி நீ விளையாட்டு தனமா இருக்க கூடாது… வெளிய தனியா வரக்கூடாது அங்க நம்ம வீட்டுக்கு வரணும்னு தோணுச்சுன்னா அப்பாகிட்ட சொல்லு இல்லனா எனக்கு போன் பண்ணு சரியா..."


"அப்புறம் இனிமே யாருக்கிட்டயும் தேவை இல்லாம பேசக்கூடாது முக்கியமா ஆண்கள் கிட்ட சரியா…"


அவள் தேன் மிட்டாயைச் சுவைத்துக் கொண்டு இருக்கவும் "குட்டி மா நான் சொன்னது புரியுதா "என்று கேட்டதும் "ஆம்" என தலையை நான்கு பக்கமும் உருட்டினாள்.


அவள் தலையில் கையை வைத்து ஆட்டியவன் "சரிடா நான் வீட்டுக்கு கிளம்புறேன் வரட்டா " என்றவன் கிளம்பினான்.


மங்கை பத்தாவது படிக்கும் போது அவள் பள்ளியில் இருந்து ஒரு போன் கால் வந்தது. பள்ளியின் தாளாளர் தான் அழைத்திருந்தார் சீதா தான் எடுத்துப் பேசினார். பள்ளிக்கு வர சொல்லி சொன்னதாக தன் கணவரிடம் கூறினாள்.


"இப்போ என்ன பிரச்சனையை இழுத்து வச்சுருக்கான்னு தெரியலை" என்று சீதா புலம்பியதும் "என் புள்ளை எதும் பண்ணிருக்காது" என்று ஆறுமுகம் கூறியதும்"ம்ம் அப்பனும் மாமனும் அவ பண்றதுக்கு எல்லாம் ஆமாம் சாமி போடுங்க அவள் இன்னும் நல்லா தலை மேல ஏறி ஆடுவா" என்றதும் "நீ கொஞ்சம் சும்மா இருடி ஸ்கூலுக்கு இப்போ வரியா இல்லையா "என்றதும் ''தம்பிய போய்ட்டு வர சொல்லுங்க ஏதோ சின்ன விஷயமாதான் இருக்கும் இவ எவன் மண்டையாவது உடைச்சு வச்சிருப்பா என்னால போய் திட்டு வாங்கிட்டு வர முடியாது சாமி" என்று விட்டு அருளுக்கு போன் பண்ணி பள்ளியில் வர சொன்னதாக கூறி வைத்துவிட்டார்.


அருள் போகும் பொழுது மங்கையும் இன்னொரு பெண்ணும் நின்று கொண்டிருந்தனர். எதிரே ஒருவர் தலையில் கட்டுடன் அமர்ந்திருந்தார். 


இவனை பார்த்ததும் "வாங்க சார் நீங்க தான் இந்த பெண்ணோட பேரண்ட்டா " என்றதும் "ம்ம் சொல்லுங்க சார்" என்று மங்கையைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.


மங்கை கோபத்துடன் அந்த கட்டுப் போட்டு அமர்ந்திருந்தவனையே முறைத்துக் கொண்டிருந்தாள்.


அருள் வந்ததைக்கூடக் கண்டுக் கொள்ளவில்லை.


அவளை சிறிது நேரம் யோசனையுடன் பார்த்தவன் தாளாளரிடம் திரும்பி "சொல்லுங்க சார் என்ன பிரச்சனை " என்றதும் சற்று தயங்கியவர் அங்கு அமர்ந்திருந்தவரைச் சுட்டிக்காட்டி "சார் டென்த்துக்கு கெமிஸ்ட்ரி டீச்சர் இவருதான்."


"இந்த பொண்ணுங்க ரெண்டு பேரும் இன்று காலையில் ரெக்கார்ட் நோட் சம்மிட் பண்ண போயிருக்காங்க" என்று இருவரையும் சுட்டிக் காட்டியவர் "அங்க இந்த சார் பேட் டச் பண்ணினதா சொல்லி அங்க இருந்த பாட்டிலை எடுத்து மண்டைல அடிச்சிருக்காங்க இந்த பொண்ணு…'' என்றதும் உடனே எழுந்தவன் "ஓகே சார் நான் எங்க பெண்ணை வீட்டுக்குக் கூட்டிட்டு போகலாமா…" என்று கேட்டதும் "சார் பெரிய பிரச்சனை வேண்டாம் இவருக்கு இனி இங்கு வேலை கிடையாது... நீங்க வெளியே இந்த விஷயத்தை பற்றி போலீஸ் கிட்டயோ இல்லை வேற எங்கேயும் சொல்லாதீங்க சார் ஸ்கூல் பேரு கெட்டுப் போயிடும்…" என்று சொன்னதும் அதுவரைத் தன் கோபத்தை அடக்கிக்கொண்டிருந்தவன் "ஏன் சார் இதே எங்க பொண்ணு இடத்தில உங்க வீட்டுப் பெண் இருந்தாலும் இப்படிதான் பேசுவீங்களா…'' என்றதும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார். 


அவர் அமைதியாக இருக்கவும் "எங்க வீட்டுப் பொண்ணு தைரியமா இருந்ததால பாட்டில எடுத்து மண்டைய உடைச்சிருக்கா... இதுவே ஒன்னும் தெரியாம வேற பெண்ணாக இருந்தால் என்ன செய்வீங்க… உங்களுக்கென்ன இங்க இருந்துகிட்டு பணத்தால் எல்லாத்தையும் மூடி மறச்சிடுவீங்க... ஆனால் கஷ்டப்படுவது என்னமோ அந்த பெண்ணும் அவளின் பெற்றோரும்தான்…" என்றவன் நீங்க "வாங்கம்மா போகலாம்" என்றவன் அவர்களை அழைத்துக்கொண்டுக் கிளம்பினான். 


பள்ளியின் அருகில் உள்ள கேண்டினில் இருவரையும் அமர வைத்து அவர்களுக்குத் திண்பண்டம் வாங்கிக் கொடுத்தான். 


இருவருமே அதனை தொடவில்லை என்றதும் மங்கையைப் பார்த்தவன் அவள் தன்மேல் கோபமாக இருப்பது தெரிய சிரித்துக்கொண்டே அவள் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் திரும்பி "உன் பெயர் என்னம்மா மங்கைக்கூடத்தான் படிக்கிறியா…" 


"ம்ம் ஆமாண்ணா என் பெயர் முத்தமிழ் அந்த சாரை ஏன் அண்ணா சும்மா விட்டீங்க அவர் வேணுமென்றே தெரிந்துதான் பின்னாடி தட்டினார்.."


 அந்த பேச்சை வளர்க்காமல் முடிக்க நினைத்தவன் "சரி அதை விடுமா" என்றவன் "மங்கையோட ஸ்கூல் பேக்கை அவள் தம்பிட்ட குடுத்தனுப்புமா நீ எந்த ஊரு " என்றதும் "நான் இங்க பக்கத்துல தான் அண்ணா மங்களூர்" என்றதும் "ஓ சரிமா அங்க என்கூட படிச்சப் பையன் கதிர் அங்கே தான் இருக்கான்.." என்றதும் "அவங்க என் மாமா பையன்தான் அண்ணா" என்றதும் " ஓ சரி மா "என்றவன் அவளை உள்ளே அனுப்பி வைத்து சிறிது நேரம் அந்த கேண்டினில் அமர்ந்திருந்தான்.


அந்த கெமிஸ்ட்ரி எடுக்கும் சொட்டை மண்டை அப்பொழுது வெளியே தன் இருசக்கர வண்டியில் சென்றான்.அதை பார்த்த அருள் உடனே மங்கையைத் தன் வண்டியில் அமர சொன்னவன் சற்று இடைவெளி விட்டுப் பின் தொடர்ந்தான்.


முதலில் இதை மங்கை கவனிக்கவில்லை ஒரு வளைவில் வண்டி நிற்கவும்தான் கவனித்தாள் ஏன் இங்க நிறுத்தி இருக்காங்க என்று பார்க்க அந்த தெரு புதிதாக இருக்கவும் அருளைப் பார்த்தாள்.


அவன் பார்வை வேறு எங்கோ இருக்க அங்கு பார்க்க அந்த சொட்டை தன் வீட்டுக் கதவைத் திறப்பது தெரிந்தது.


பின் வண்டியைக் கிளப்பியவன் தன் வீட்டிற்கு விட்டான்.


அவளை இறக்கிவிட்டு திருப்பி வண்டியைக் கிளப்பப் போனவன் கையைப் பிடித்துத் தடுத்து "மாமா வேண்டாம் மாமா எதுக்கு பிரச்சனை அதான் அந்த சாரை வேலையவிட்டுத் தூக்கிட்டாங்கல்ல விடு மாமா..வீட்டுக்குள்ள வா" என்றதும் வந்தவன் அவள் பள்ளி உடையோடே இருக்கவும் அவள் உடையை எடுத்துக் கொடுத்தவன் "எவ்ளோ நேரம் அப்படியே இருப்ப இந்தா இந்த டிரஸை மாத்திக்கோ" என்றதும் வாங்கிக்கொண்டே உள்ளே சென்றாள்.


அவள் உள்ளே சென்றதும் தோட்டத்துக்கு சென்று அடுப்பு எரியவிட வைத்திருந்த விறகு கட்டை ஒன்றை எடுத்துக் கொண்டு தன் வண்டியில் கிளம்பினான்.


அங்கு அந்த சொட்டை வீட்டுக்குச் சென்று காலிங்பெல்லை அழுத்தினான். ஒரு பெண் வந்து கதவைத் திறக்கவும் "சார் இல்லையாமா" என்று கேட்டதும் "உள்ள தான் இருக்காங்க" என்று அவன் வர வழிவிட்டார்.


அந்த பெண் கதவை மூடிவிட்டு வருவதற்குள் அங்கு சோபாவில் அமர்ந்திருந்தவனுக்கு அவன் மறைத்து எடுத்து வந்த கட்டையாலே அடி வெளுத்தான்.


அந்த பெண் வந்து தடுக்கவும் அவளிடம் "உங்க புருஷன் என்ன பண்ணினார் என்று கேளுங்க…"


"தலையில் காயம் எப்படி வந்துச்சுன்னு கேளுங்க.." என்றதும் அவன் அடித்த அடியில் துடித்துக்கொண்டிருந்தவரைப் பார்த்து "அதுக்கு இப்படிதான் அடிக்கிறதா.." என்று ஏதும் அறியாமல் அந்த பெண் பேச, நடந்தது அனைத்தையும் கூறினான்.


அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த அந்த பெண் அவனை அறுவெறுப்புடன் பார்த்தவள் "ச்சி நீ எல்லாம் ஒரு மனுஷனா…" என்றவள் அவனை அருள் வைத்திருந்த கட்டையைப் பிடிங்கி அடித்தாள்.


இனி அந்தப் பெண்ணே அவனைப் பார்த்துக் கொள்வாள் என்று நினைத்தவன் அங்கிருந்து கிளம்பி தன் வீட்டிற்கு வர மங்கை அவனை முறைத்துப் பார்த்தாள்.தன்னை முறைத்து நின்றவளைப் பார்த்து சிரித்துவிட்டு உள்ளே செல்ல போனவனின் கையைப் பிடித்து தடுத்தாள்.


அவள் கையைப் பிடித்ததும் அவன் வலியால் "ஆ…"என்று அலறினான்.அவன் அலறியதும் பயந்தவள் பட்டென்று கையை விட்டாள்.


"என்ன மாமா என்ன ஆச்சு" என்றதும் தன் கையைப் பார்த்துக்கொண்டு "கட்டைல இருந்த செதாம்பு கைல ஏறிடுச்சுப்போல அதான் நீ அழுத்திப் பிடிக்கவும் வலிச்சுது". 


அவனை திண்ணையில் அமர வைத்து அவன் கையைப் பார்த்தாள். மூன்று இடத்தில் ஏறியிருந்தது. தன்னிடம் இருந்த ஊக்கை வைத்து அதனை எடுத்து விட்டாள்.அப்பொழுது தான் வினோத் மூலம் விஷயம் அறிந்த சீதாவும் ஆறுமுகமும் வந்தனர். 


"என் புள்ளை மேல கைய வச்ச அந்த வாத்தியைக் கொல்லாம விடமாட்டேன்…'' என்று கோபத்தில் உறுமினார் ஆறுமுகம். 


"டேய் தம்பி அவனை சும்மாவ விட்டுட்டு வந்த அவனை எல்லாம் கம்பத்தல கட்டி வச்சுத் தோலை உரிக்கனும்…" என்று சீறினார் சீதா.


"அதெல்லாம் மாமா போய் அவரை அடிச்சிட்டு வந்துடுச்சு.. இப்போ வந்து சவுண்ட் குடுக்குறீங்க…'' என்று கிண்டல் பண்ணியதும் தன் மகளை வந்து அணைத்துக்கொண்டார் சீதா.


"என்ன அமெரிக்காவும் சீனாவும் ஒன்னு சேர்ந்துடுச்சு…'' என்று அருள் நக்கல் அடித்தான்.


"மாமா இதுல யாரு சீனா... யாரு அமெரிக்கா…" என்று கேட்டதும் "எங்க அக்கா சீனா... நீ அமெரிக்கா டா குட்டி மா…" என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.


"ஏன் இதுக்கு சிரிக்கிற" என்று சீதா கேட்டதும் சிரித்துக் கொண்டே "ஏன்னா சீனாவில இருக்குறவங்களுக்கு சப்ப மூக்கு இருக்குமாம்... உனக்கு அப்படிதான் இருக்கு…'' என்று சொன்னவள் தன் மாமனிடம் திரும்பி "வா மாமா உன் அக்கா பத்ரகாளி ஆகுறதுக்குள்ள ஓடிரலாம்…" என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.


மயக்கம் தொடரும்…



No comments:

Theme images by RBFried. Powered by Blogger.