வெம்மை தீர்க்கும் வெண்பனியே!!!


அத்தியாயம்-1:


"ஆஷி! இப்போ எதுக்கு தள்ளிப்போற..? நான் உன்னை என்ன பண்ணிடுவேன்னு இப்படி பண்ற..? இப்படி பண்ணாத, எனக்கு எரிச்சலா இருக்கு.." என்று தன்னை கண்டவுடன் தள்ளி சென்றவளிடம் எரிச்சலாக கேட்டான்.


"ஜீவி..!" என்று ஏதோ கூற வந்தவளை தடுத்து நிறுத்தியவன் "எதுவும் பேச வேண்டாம்.. விடு.. எப்பா சாமி..! உங்ககிட்ட பிரெண்டா வாக்கப்பட்டு நான் படுற பாடு இருக்கே.. என் எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது."


"நீ என்னமோ.. நான் உன்கிட்ட வாந்தாலே பேய பார்த்தது போல தெறிச்சு ஓடுற.. அவன் என்னடான்னா எதுக்கு வந்த? ஏன் வந்த? இனி வராதன்னு

மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுறான்.. என்னடி.? என்னை பார்த்தால் உங்களுக்கு கேனையன் மாதிரி தெரியுதா..?"


"என்னை தெருத்தெருவா பைத்தியம் போல சட்டையெல்லாம் கிழுச்சுக்கிட்டு, முடியெல்லாம் கலைஞ்சி போய் பார்க்கவே பிச்சைக்காரன் போல அலைய விடணும்.. அதுதானே உங்க ரெண்டு பேரோட ஆசை.. அதுவரையும் நீங்க ஓய மாட்டீங்க அப்படித்தானே" என்று விரக்தியில் கத்தியவன் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தொண்டையில் சரித்துக் கொண்டான்.


பாவம் அவனும் எவ்வளவு தான் பேசுவான்.. பேசிப்பேசியே தொண்டை வரண்டு போச்சு.. 


"இதுங்கக்கூட பேசிப்பேசி மாரடிக்குறதுக்கு, பேசாம ஒரு காவி வேட்டி கட்டிக்கிட்டு இமயமலைக்கு போயிடலாம்.. மனுஷப்பிறவியா இதுங்கெல்லாம்..! எப்பா சாமி ஆள விடுங்கடா.. உங்களுக்கு கோடி கும்பிடு"


"பேசிப்பேசியே மூச்சு வாங்க வைக்கிறதே இவங்க பொழப்பா போச்சு" என்று முனகியவன் நிமிர்ந்து எதிரில் இருந்தவளை பார்த்தவனுக்கு பிபி எகிரியது..


அவளோ அங்கு அப்படி ஒருவன் இருப்பதையே மறந்தவளாக காதில் ஹெட் செட்டை மாட்டிக்கொண்டு "என்ஜாயி எஞ்சாமி" பாடலுக்கேற்ப தலையை அசைத்து பாடிக்கொண்டிருந்தாள்.


'அப்போ இதுவரைக்கும் நான் தொண்டை கிழிய கத்தினதெல்லாம் இந்த டேபிளுக்கும் செவுத்துக்கும் தானா' என்று நினைத்து இவள.. என்று வீராப்பாக அவளருகில் வந்தவன் அவள் கையில் வைத்திருந்த கைப்பேசியை பிடுங்கவும் அவள் முறைத்த முறைப்பில் ஓரெட்டு பின் வாங்கியவன் "நீயும் வேண்டாம்.. அவனும் வேண்டாம்.. நான் உங்க ரெண்டு பேரையும் இன்னைக்கே டிவோர்ஸ் பண்றேன்.." என்று வாயில் வந்ததை உளறினான்.


"பண்ணிட்டு..?" என்று கூலாக கேட்க இவ்வாறு சொன்னால் பதறுவாள் வேண்டாம் என்று கூறுவாள் என்று நினைத்தவனுக்கு பெரிய ஏமாற்றம்.. அவன் முகம் பேயறைந்தது போல் ஆக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் "அழகன் டா நீ.." என்று உள்ளுக்குள் கொஞ்சிக் கொண்டாள்..


அவன் அதிர்ந்து நிற்பதை கண்டு கஷ்டப்பட்டு தன் முகத்தை மாற்றியவள் "ஹிம்ம் டிவோர்ஸ் பண்ணிட்டு..? அப்பறம் எங்க போறதா உத்தேசம்..? இமயமலைக்கா..? இல்ல வேற ஏதும் பிளான் வச்சுருக்கியா..? சாமியாரா போறதுன்னு முடிவாயிடுச்சு.. நீ மட்டும் ஏன் தனியா போற.. அந்த வீணா போனவனையும் கூட்டிட்டு போ.." என்று கூறிவிட்டு தன் வீட்டிற்கு சென்றுவிட்டாள்..


"ஐயோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் மனசுல நினைச்சதை அப்படியே சொல்லிட்டு போறாளே படுபாவி.. மனசாட்சியே இல்லாம போறாளே" என்று அவன் கத்தினான்..


ஆஷி சொன்ன அந்த வீணாப்போனவனோ தன் அறை சுவற்றில் ஒட்டி வைத்திருந்த பெண்களின் புகைப்படங்களை பார்வையிட்டவன் அதில் சிலரின் புகைப்படத்தின் மேல் சிவப்பு கலர் பேனாவால் கிராஸ் குறியிட்டவன் தன் கைப்பேசி அழைக்கவும் அதை பார்த்தவன் ப்ச் என்ற சத்தத்துடன் அந்த அழைப்பை ஏற்றான்..


அதில் என்ன சொல்லப்பட்டதோ "ஹிம்ம்.. செஞ்சிடலாம்" என்றவன் போனை அதன் இடத்தில் வைத்து விட்டு விட்ட வேலையை தொடர்ந்தான்..


இரவு ஒன்பது மணியிருக்கும் அந்த சாலையில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை.. வெறும் ஒன்றிரண்டு வண்டிகள் மட்டுமே அப்படியும் இப்படியும் போய்க் கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த பையை இறுக்கமாக பற்றி கொண்டவளுக்கு வயிறு பசியில் கத்தியது "எனக்கு கொஞ்சம் சாப்பிட ஏதாவது தா..?" என்று..


ஆனால் கையில் காசு தான் இல்லை.. அது வயிருக்கு தெரியுமா.. கொஞ்ச நேரம் பொறுத்தவள் தாங்க முடியாமல் "ஐயோ பசிக்குதே! இப்போ என்ன பண்றது..? கையில ஒத்த பைசா இல்ல.. இந்த மாமாவோட விலாசத்தை வேற தவற விட்டுட்டேன்.. இருந்த காசெல்லாம் பஸ்ஸுக்கே சரியா போச்சு.."


"இந்த ஊருல யாரை பார்த்தாலும் பயமா இருக்கு.. ஏதாவது கேட்க கிட்ட போனாலே ஒருமாதிரி பாக்குறாங்க.. நைட் எங்க தங்குறது." என்று யோசித்துக் கொண்டே வந்தாள்.. 


"ஊஊஊ…" என்று எங்கோ ஒரு மூலையில் நாய் ஊலையிடும் சத்தம் கேட்க.. ரோட்டில் சரக்கேற்றி செல்லும் பெரிய பெரிய சரக்குந்துகள்.. லாரிகள் அனைத்தும் சர் சர்ரென்று அந்த ஹைவேயில் சென்று கொண்டிருக்க 'தி சென்னை சில்க்ஸ்' கடையில் கொடுத்த பையைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு எங்கு போவதென்று தெரியாமல் அலைந்து கொண்டிருந்தவள்.. நாய் ஊலையிடவும் பயந்து ஓரமாக இருந்த பேருந்து பயணிகளின் நிழற்குடையில் நின்றுக் கொண்டாள்…


(எவ்வளவு நாள் தான் மஞ்சப் பையைக் கடன் வாங்குறது..சோ அதுக்கு ரெஸ்ட்)


"கடவுளே..! ரொம்ப பயமா இருக்கு.. நாம எடுத்த முடிவு தப்போ..? பூனைக்கு பயந்து புலிக்கிட்ட மாட்டிக்கிட்ட கதையா இருக்கே..! இப்போ என்ன பண்றது..? எங்க போறது..! ஒன்னுமே தெரியலையே..!" என்று மனதிற்குள் தன்னையே நொந்தவாறு நின்றுக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் தன் பக்கத்தில் நிழலாட திரும்பி பார்த்தவள் முகம்.. பேயறைந்தது போலானது.


அங்கு குடித்துவிட்டு போதையில் தள்ளாடியவாறே நான்கு பேர் பார்க்கவே விகாரமாக அவளைப் பார்வையாலே துகிலுறித்து அப்படியே விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டு மனதுக்குள் அலறியவள் அவர்களைக் கண்டுக்கொள்ளமல் சற்று தூரம் நடக்க அவர்களும் இவளைப் பின் தொடர்ந்தனர்.


சற்று வேகமாக தன் நடையை எட்டிப் போட்டவள் அவர்களைத் திரும்பிப் பார்க்க அவர்கள் அவளைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்க.. கல்மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தாள். மெயின் ரோட்டில் இருந்து ஒரு சந்து பிரியவே அந்த சந்தில் நுழைந்தவள் எதிரே வந்தவனின் மேல் மோதி "ஐயோ..!" என்றவாறே கீழே விழுந்தவள் "மன்னிச்சிடுங்க.. மன்னிச்சிடுங்க அண்ணா..!" என்றவாறு தன்னை சமன்படுத்திக் கொண்டு ஓடினாள்.


தன் மேல் மோதி கீழே விழப்போனவளை "ஹே.." என்று அவளை பிடிப்பதற்குள் அரக்க பறக்க எழுந்து அவனிடம் மன்னிப்புக் கேட்டவாரே ஓட ஆரம்பித்தாள். "ஏன் இந்தப் பொண்ணு இப்படி விழுந்தடிச்சி ஓடுது..?" என்று நினைத்துக் கொண்டே அவன் தன் வேலையைப் பார்க்க சென்றான்.


"கடவுளே காப்பாத்து ப்ளீஸ், வீட்டை விட்டு வந்தது பெரிய தப்பு தான் ப்ளீஸ்.. என்னை காப்பாத்து..!" என்று மனதுள் கடவுளிடம் வேண்டிக்கொண்டே ஓடி வந்தவள் பின்னால் அவர்கள் வருகிறார்களா என்று திரும்பிப் பார்த்தாள்.. யாரும் பின் தொடர்ந்து வரவில்லை என்றதும் நின்று சற்று நேரம் மூச்சு வாங்கியவள் யாரோ வரும் அரவம் கேட்கவும் படப்படக்கும் மனதுடன் அங்கு பக்கத்திலிருந்த குப்பைத் தொட்டிப் பக்கத்தில் சென்று மறைந்துக்கொண்டாள்.


தன்னை அந்த நால்வரில் யாரேனும் ஒருவர் பார்த்து விட்டால் கூட தன் கதை முடிந்தது என்று நினைத்தவள் உலகிலுள்ள அனைத்து கடவுள்களையும் தனக்கு துணைக்கு அழைத்தாள்..


மூச்சு கூட வெளியிட்டால் அந்த சத்தத்தில் தன்னை கண்டு கொள்வார்களோ என்று வாயை கைகளால் பொத்தி கொண்டாள்.. பயத்தில் அவளுக்கு இதயம் தாறுமாறாக துடிக்க "ஒன்னுமில்லை.. ஒன்னுமில்லை.. எதுவும் ஆகாது" என்று தன்னை தானே தேற்றியவள் ஏதோ அரவம் கேட்கவும் சட்டென்று அமைதியானாள்..


ஒரு பெண்ணும் ஆடவனும் பேசிக் கொண்டு செல்ல சற்று நேரம் ஆசுவாசமாக நெஞ்சில் கைவைத்து நிம்மதியடைந்தவளை "யாரும்மா நீ..?" என்ற குரல் கலைத்தது.. அக்குரலைக் கேட்டவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்..


அங்கு அறுபது வயதை ஒத்த ஒரு மூதாட்டி இவளைக் கேள்வியாகப் பார்த்தப்படி நின்றுக் கொண்டிருந்தார். அவரை பார்த்து பயம் நீங்கியவள் "பாட்டி..! பாட்டி..!" என்று அனத்தியவாறு எழுந்து வந்து அவர் கைகளை பற்றிக் கொண்டாள்..


பயத்தில் வேர்த்து விருவிருத்து தொப்பலாக வேர்வையில் நனைந்திருந்தவள் கைகள் வெடவெடவென நடுங்கி கொண்டிருந்ததை உணர்ந்தவர் "ஒன்னுமில்லை பயப்படாத.." என்று அவள் முதுகை வருடிக் கொடுத்தவர் "நீ எந்த ஊரும்மா..?" என்று வினவ என்ன சொல்வதென்று தெரியாமல் திருத்திருவென விழித்தாள்..


"நான்.. நான்.." என்று திணறியவள் "பாட்டி எனக்கு யாரும் இல்லை.. அம்மா அப்பா இறந்து போய்ட்டாங்க.. எங்க போறதுன்னு தெரியல.. அதான் இந்த ஊருல ஏதாவது வேலை கிடைக்குமான்னு பார்க்க வந்தேன்.. ஆனால் யாரும் தர மாட்டேங்குறங்க.." என்று உண்மையும் பொய்யுமாக உரைத்தவள் அவரை பாவமாக பார்த்தாள்..


அவளை கண்டு கனிவாக புன்னகைத்தவர் "சரி! உன் பெயர் என்ன..?" 


"மதுபாலா.."


"உன்னை போலவே உன் பேரும் அழகா இருக்கும்மா.. சரி வா என் வீடு இங்க கொஞ்சம் பக்கத்துல தான்.. போலாமா.." என்று கேட்கவும் "உங்களுக்கு எதுக்கு பாட்டி சிரமம்?" என்று தயங்கவும் "இதிலென்ன சிரமம் உன்னை பார்த்தா என் பேத்தி நியாபகம் தான் வருது.. சரி வா உனக்கு நாளைக்கு நான் வேலை செய்யுற இடத்துல வேலை வாங்கி தரேன்.." என்று கூறவும் சந்தோஷமாக தலையாட்டினாள்..


ஆனால் அங்கு தான் அவள் வாழ்க்கையே திசை மாறப்போவது தெரியாமல் அவருடன் சந்தோஷமாக நடந்து சென்றாள்.. அவருடன் நடக்கும் பொழுது பின்னாடி திரும்பி திரும்பி பார்த்தவாரு வந்தாள் அந்த கயவர்கள் தன்னை தொடர்கிறார்களா என்று..


"உங்க பேரு என்ன பாட்டி?" என்று கேட்கவும் "பார்வதி" என்றவர் அவள் சோர்வாக தெரியவும் "ஏதாவது சாப்பிடுறியா?" என்று கேட்கவும் எங்கு நடுவில் நின்றால் அந்த கயவர்கள் மீண்டும் வந்து விடுவார்களோ என்று எண்ணி "இல்லை.. பாட்டி வேண்டாம்" என்றாள்..


பின் இருவரும் நடந்து சென்று கொண்டிருக்க ஒரு ஜீப் அவர்கள் அருகில் வந்து நிற்க "பாப்பா இந்த வண்டியில் ஏறு.. ஏற்கனவே பார்க்க சோர்வா தெரியுற வா.." என்று அழைத்தவரை கேள்வியாக பார்த்தாள்..


"எனக்கு தெரிஞ்ச தம்பி வண்டி தான்.. இவர் வீட்டுல தான் வேலை பார்க்கிறேன்.. வா" என்று அழைக்கவும் அவருடன் ஏறிக்கொண்டாள் மறுப்பு சொல்லாமல்.


அத்தியாயம்-1(2)


அந்த அறை முழுவதும் இருட்டால் சூழ்ந்திருக்க.. எங்கு பார்த்தாலும் இருட்டு.. பார்ப்பவரின் நெஞ்சை பயம் கொள்ள செய்யும் இருட்டு.. தலை விண்விண்னென்று வலிக்க தூக்கத்தில் இருந்தவள் தலையை பிடித்து கொண்டு எழுந்து அமர்ந்தாள்..


கண்களை திறந்து பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை.. வெறும் இருட்டாக இருக்கவே கண்களை நன்றாக தேய்த்து விட்டு பார்த்தவள் "என்ன..? ஒரே இருட்டா இருக்கு.. பயமா வேற இருக்கு.. நான் எங்க இருக்கேன்!" என்று நினைத்து கொண்டே எழுந்தவளுக்கு தலை சுற்ற அப்படியே கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.


தான் இருப்பது எந்த இடமென்று தெரியவில்லை.. எங்கு பார்த்தாலும் இருட்டாகவே இருக்க.. "ஐயோ.! நான் எங்க இருக்கேன்னு கூட தெரியலையே..!" என்று நினைத்தவளுக்கு நேற்று வீட்டை விட்டு வந்ததும் அதன் பின்னர் தன்னை நான்கு கயவர்கள் துரத்தியதும் அவர்களிடமிருந்து தப்பித்து குப்பை தொட்டி பின்னாடி மறைந்தது அனைத்தும் வரிசையாக நியாபகம் வந்தது..


அதன் பின்னர் பார்வதியை பார்த்தது நியாபகம் வரவே "பாட்டி..! பார்வதி பாட்டி.." என்று அவரை அழைத்தாள்.. ஆனால் அவர் தான் குரல் கொடுக்கவே இல்லை.


"பாட்டி!!" என்று அழைத்து கொண்டே இருந்தவளுக்கு யாரோ வரும் அரவம் கேட்கவும் அந்த சத்தம் வரும் திசை திரும்பி பார்த்தவளுக்கு அதிர்ச்சி.. அந்த திசையை பார்த்தவளின் முகம் பேயறைந்தது போலானது.. கைகால்கள் அனைத்தும் பயத்தில் வெடவெடவென நடுங்க வேர்வையில் தொப்பலாக நனைந்திருந்தாள்.


அப்படி அவள் பயப்படும் அளவிற்கு அந்த திசையில் எதை தான் அவளும் கண்டாள்.. சிங்கமா..? புலியா..? 


சிங்கம் புலியாக இருந்தால் கூட ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் எப்படியாவது அதனிடமிருந்து தப்பி விடலாம் என்ற ஒரு நம்பிக்கை பிறக்கும்..! ஆனால் அவள் எதிரில் உள்ளது ஆறடி உயர ஜந்துக்கள், மனித தோல் போர்த்திய அரக்கர்கள், வெறிபிடித்து அலையும் மிருகங்கள்..


மிருகங்களா..? இல்லை.. இல்லை.. மிருகங்களுடன் இவர்களை இணைத்து பேசினால் கூட என்கிட்ட சண்டைக்கு வந்துடும்.. அந்தளவுக்கு இந்த உலகில் வாழவே தகுதியில்லாத கொடூரமான ஜென்மங்கள். அப்படி அவள் யாரை தான் பார்த்தாள்.


ஆம்.. நேற்று இரவு அவளை துரத்திய அதே நால்வர்.. தங்களின் பாண்பாக்கு போட்டு கரை படிந்த பற்களை காட்டி அவளை பார்த்து இளித்த படி நின்றிந்தனர்.. அவர்களை பார்க்கவே கோரமாக இருந்தது.. அவளுக்கு வாந்தி வருவது போலிருக்க நெஞ்சை நீவி விட்டவள் "எப்படி..÷ நான் பார்வதி பாட்டி கூட தானே வந்தேன்..!"


"அவங்க எங்க..?"என்று நினைத்தவள் "பாட்டி.. பாட்டி.." என்று கத்தி பார்வதியை அழைத்தாள். ஆனால் அவள் அலரளுக்கு அந்த ஜந்துக்களின் சிரிப்பு சத்தம் மட்டுமே அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.


'ஐயோ..! இவர்கள் கையில் மாட்டிக்கொண்டால் அவ்வளவு தான்' என்று நினைத்தவள் அங்கிருந்து ஓட பார்க்க அந்த நால்வரும் அவள் அடுத்த செயலை கணித்தது போல் சுற்றி வளைத்து கொண்டனர்.


அவர்கள் தன்னை சுற்றி வளைத்து கொண்டதும் இனி தப்பிக்க முடியாது என்று நினைத்தவள் அவர்களிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்.. "அண்ணா..! என்னை விட்டுடுங்க, ப்ளீஸ்.." என்று அழ ஆரம்பிக்க அதையெல்லாம் அவர்கள் கண்டு கொண்டது போல தெரியவில்லை.


"டேய்! ரங்கா போடா.. நீ தானே ஆசையா கேட்ட போ போ.. உனக்கு தான் எடுத்துக்கோ" என்று அந்த நால்வரில் ஒருவன் அந்த ரங்கா என்பவனிடம் உரைக்க அந்த ரங்காவுக்கு வாயெல்லாம் பல்லானது.


அவன் அவளை நெருங்க கையெடுத்து கும்பிட்டவாறு பின்னால் செல்ல, எவ்வளவு தூரம் தான் செல்லவும் முடியும் சுவர் தட்டி நின்றவள் அவன் தன் மேல் கையை வைக்க வரவும் தன்னையும் அறியாமல் "ஆது" என்று கத்தினாள்..


"என்னமா? என்னமா ஆச்சு..? ஏன் உடம்பெல்லாம் இப்படி நடுங்குது? என்னாச்சு?" என்று பார்வதி பாட்டி அவள் தலையை கோதியவாறு முதுகை நீவிவிட்டார்.. அதுவரையிலும் அந்த கொடூர கனவிலிருந்து வெளிவராதவள் வாயில் இருந்து வந்ததெல்லாம் "ஆது.. ஆது.." என்ற பெயர் மட்டுமே..


அவர் குரல் கேட்கவும் அவை நிஜமல்ல கனவு தான் என்று உணர்ந்து மெல்ல மெல்ல அந்த கனவிலிருந்து வெளிவந்தவள் அவரை கட்டிப்பிடித்து கொண்டு அழுதாள்.. "பாட்டி.. பாட்டி.." என்று தேம்ப "ஒன்னுமில்லை பாப்பா, கெட்ட கனவு ஏதும் கண்டியா..? விடு ஒன்னுமில்லை.." என்று தேற்றியவர் "நேரம் ஆகுது.. சுத்த படுத்திட்டு வா.. சாப்பிடலாம்" என்றவர் அந்த அறையை விட்டு வெளியேறினார்.


அவள் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள் படுக்கையில் இருந்து எழவும் அதுவரை அவளையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்த ஓர் உருவம் வந்த தடம் தெரியாமல் சென்றது.


அறையை விட்டு வெளியே வந்தவள் பின்கட்டில் சத்தம் கேட்க அங்கு சென்றாள்.. அங்கு பார்வதி சமைத்து கொண்டிருக்க "பாட்டி நேற்று இரவு என்ன நடந்துச்சு..? எனக்கு அந்த வண்டியில் ஏறியது மட்டும் தான் நியாபகம் இருக்கு.. அதுக்கப்பறம் என்ன நடந்துச்சு..? நான் எப்படி இங்க வந்தேன்?" என்று வினவினாள் குழப்பமான முகத்துடன்.


நேற்று இரவு நடந்ததை கூறவாரம்பித்தார் பார்வதி..


"நீ வண்டியில் ஏறியதும் மயங்கிட்ட கண்ணு.. அப்பறம் பாப்புகண்ணா தான் உன்னை தூக்கிட்டு வந்து அறையில் படுக்க வச்சுது.. நான் என்னன்னு கேட்டேன்.. பசி மயக்கம் தான்னு ஒரு ஊசி போட்டுட்டு போயிடுச்சு.. இதுதான் நடந்தது" என்று கூறினார்..


"சரி.. நீ போய் குளிச்சுட்டு வா, சாப்பிட்டுட்டு உனக்கான வேலையை பற்றி கேட்டுட்டு வரலாம்" என்கவும் "சரி" என்று தலையாட்டியவள் தான் எடுத்து வந்திருந்த பையில் இருந்து உடையை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள்.


இங்கு தன் வீட்டில் தன் அறையின் பால்கனியில் இருந்து முகத்தில் எந்த விதமான உணர்ச்சியையும் காட்டாமல் கற்பாறையென இறுகியிருந்தவன் அவள் மேல் வைத்த கண்ணை மட்டும் எடுக்கவில்லை..அவன் பார்வை அவளையே சுற்றி வந்து கொண்டிருந்தது..


தன் கைப்பேசி சிணுங்கிய சத்தத்தில் தன் நினைவில் இருந்து மீண்டவன் அதனை எடுத்து காதில் வைத்தான்..


அங்கு என்ன சொல்லப்பட்டதோ ஹிம்ம் இங்க என் வீட்டுல தான் இருக்கா..


……


ஹிம்ம் சரி.. அப்பறம் நான் சொன்ன விஷயம் என்று கேட்க


….


ஹிம்ம் ஓகே.. பக்காவா முடிச்சுடலாம் என்றவன் கைப்பேசியை அனைத்தான்.


கண்களை மூடி ஆழ்ந்த மூச்செடுத்து தன் நெஞ்சை நீவி விட்டவன் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வெம்மையாய் அவன் கன்னத்தில் இறங்கியது. அவன் மனக்கொதிப்பின் வெளிப்பாடோ!! யாரறிவார்..?


******


"ஹே.. செல்லம்! இன்னைக்கு உன்னை பார்க்க போறேன்.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?" என்று தன் காதலனிடம் கைப்பேசியில் குறிஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள் விமலா.


"அடியேய்! விமலா.. இந்த சோத்தை கொஞ்சம் வடிச்சு விடு டி" என்று அவள் தாய் கூற "அடப்போ ம்மா.. நீ வேற நொய்யி நொய்யின்னு எப்போ பார்த்தாலும் ஏதாவது சொல்லிட்டே இருக்க.. மனுஷியை நிம்மதியாவே இருக்க விடமாட்டேங்குற.." என்று சலித்துக் கொண்டவள் சாதத்தை வடித்தாள்.


தன் கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி கேட்கவும் ஓடி எடுத்தவள் அதனை திறந்து பார்க்க "ஹேய் லட்டு.. எங்கடி போய்ட்ட அதுக்குள்ள?" என்ற செய்தியை கண்டு "எங்க அம்மா தான் வேலை விட்டுட்டே இருக்காங்க டா.. அதான் போய்ட்டேன்" என்று கூறினாள்.


"நீ கவலை படாத செல்லக்குட்டி மாமன் கிட்ட வந்த பிறகு உனக்கு எந்த வேலையும் இருக்காது.. நிம்மதியா இருக்கலாம்.. உனக்கு என்ன வேணுமோ சொல்லு நான் எல்லாம் செய்றேன்" என்று கூறினான்..


"என் புஜ்ஜி குட்டி டா நீ.. சரி எத்தனை மணிக்கு வரட்டும் எனக்கு ஆசையா இருக்கு டா உன்னை பார்க்க" என்கவும் "எனக்கும் தான் டி.. உன்னை பார்க்கணும் பேசனும்னு ஆசையா இருக்கு."


"என்கிட்ட வந்துடு.. நீ வந்தா மட்டும் போதும் எனக்கு எல்லாமே கிடைச்சுடும்.. என் பொன் முட்டை இடுற வாத்து டி செல்லம் நீ.." என்று கூற அதனை கேட்டவள் அவன் கூறுவது உண்மை என்று அகமகிழ்ந்து போனாள்..


ஆனால் அவன் கூறியதோ வேறு அர்த்தத்தில், இவள் புரிந்து கொண்டது வேறு அர்த்தத்தில். 


"ஹிம்ம்.. சரி" என்று அவனுக்கு முத்தம் கொடுக்கும் ஸ்மைலி பொம்மையை அனுப்பி வைக்க அவனிடமிருந்து வந்த பதிலில் அந்த பாவையின் முகம் செவ்வானமாக சிவந்து போனது.


"விமலா! விமலா!" என்று அவள் தாய் அழைப்பது கேட்க "ச்சே..! இவங்க வேற எப்போ பார்த்தாலும் தொணத்தொணன்னு" என்று முனகியவள் "வரேன் ம்மா" என்று அவருக்கு பதில் கொடுத்தவள் ஒரு செல்பி எடுத்து தன் காதலனுக்கு அனுப்பி வைத்தவள் "நான் சொன்ன நேரத்துக்கு கண்டிப்பா வந்துடுவேன் செல்லம்.." என்று குறிஞ்செய்தி அனுப்பியவள் தன் தாயிடம் சென்றாள்.


இங்கு அவள் அனுப்பிய குறிஞ்செய்தியை படித்தவன் "ஹாஹா மாட்டிடுச்சு.. வாடி வா உன்னை போல ஆளுங்க இருக்குற வரையில் எனக்கு பஞ்சம் வராது" என்றவன் தன் நண்பனுக்கு அழைத்தான்.


"மச்சி..! சரக்கு ரெடி.. பார்ட்டியை வர சொல்லிடு.."


"ஹிம்ம்.. சரி மச்சி.. அமௌண்ட் பத்தி பார்ட்டிகிட்ட எதாவது பேசனுமா டா.." 


"ஹிம்ம் அமௌண்ட் இன்னைக்கே வேணும்னு சொல்லு.. அப்போதான் சரக்கு இல்லன்னா வேற ஆளு வெயிட்டிங்ன்னு சொல்லு" என்று கூறினான்.


"ஹிம்ம் பொண்ணு எப்படி மச்சி..? பெரிய இடத்து பொண்ணா? இல்ல லோக்கலா..? பார்க்க எப்படி இருப்பாள்?" என்று வழிந்தான்.


"இல்ல மச்சி.. பெரிய இடமெல்லாம் இல்லை.. நாம எப்போவும் தூக்குற மிடில் கிளாஸ் தான்.. ஆனால் பொண்ணு பார்க்க சும்மா நச்சுன்னு இருக்கா.. அதான் இன்னொரு பார்ட்டிகிட்ட பேசியிருக்கேன்.. இவன் ஒத்து வரான்னான்னு பாரு.. இல்லைன்னா இன்னொரு பார்ட்டி இருக்கு.. அதுவும் பிரெஷ் பீஸா இருந்தால் கோடி கோடியா கொட்டி கொடுக்கிறேன்னு சொல்றான் டா" என்று சிரித்தான்..


"மச்சான் அப்போ அவனை விட்டுடாத டா.. செம லாபம் பாக்கலாம்.. நான் இப்போ தான் வலை போட்டிருக்கேன்.. கூடியசீக்கிரம் மீன் மாட்டிடும் அப்பறம் நம்ம காட்டுல மழை தான்" என்றவன் "சரி டா டைமுக்கு வந்துடு" என்று விட்டு வைத்து விட்டான்.


இங்கு தன் காதலனை முதல் முதலாக காண போகும் ஆர்வமும் வெட்கமும் போட்டி போட தன்னை கண்ணாடியில் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு தயரானவள் திருப்தியானதும் தன் தாயிடம் மனதறிந்து பொய் கூறினாள்.. கிளம்பியது காதலனை பார்க்க வீட்டில் "ம்மா.. நான் ரேகா வீட்டுக்கு போய்ட்டு வரேன்" என்று விட்டு சென்றாள்..


பாவம் அவளுக்கு அப்பொழுது தெரியவில்லை தானே சென்று புதைகுழியில் விழுகிறோம் என்று. ஒருவேளை கடைசி வரை தெரியப்போவதில்லையோ இதனை வயது கோளாறு என்பதா அல்லது அறியாமை என்பதா இல்லை காதல் அறிவை மழுங்கடித்து விட்டதா..? 


வெம்மை தீர்க்க வருவாள்(ன்)