வாழ்வு - 2
"தாத்தா இவ்வளவு சீக்கிரம் ஏன் இன்னும் கொஞ்சநாள் போகட்டுமே.." என்றதும் "இதுதான் மா சரியான நேரம்.. நீ சொன்ன கண்டிஷனுக்கு நான்தான் ஒத்துக்கிட்டேனே.. இப்போகூட என் நண்பன் கிட்ட அவங்க வீட்டுக்குப் பக்கத்துலையே வாடகைக்கு வீடு பார்க்க சொல்லிருக்கேன்" என்று கூறினார்.
அப்பொழுதும் அவள் முகம் தெளியாமல் இருக்கவும் அவள் தலையை வருடி "என்னடா யோசிக்கிற" என்றதும் "தாத்தா" என்று தயங்கியவள் "எனக்கு பயமா இருக்கு தாத்தா அவங்க யாரையும் எனக்கு தெரியாது.." என்று கூறினாள்.
"அவங்க எல்லாரையும் எனக்கு நல்லா தெரியும்டா.. சென்னையில் தான் இவ்வளவு நாள் இருந்தாங்க.. நம்மை விட பணக்காரங்க..இங்கு விருத்தாசலத்துல மெயின்லயே பிளாட் வாங்கி போட்டுருக்காங்க.. ரெண்டு துணிக்கடை வேற இருக்கு.."
"அதுமில்லாம இப்போ உனக்கு பார்த்துருக்கேன்ல அந்த பையன் பேரு அபிமன்யு.. நம்ம அர்ஜுன் கூட காலேஜ்ல ஒன்னா படிச்சப் பையன் தான்டா.. ரொம்ப நல்ல பையன்.. அர்ஜுன் கூட படிக்கும் போது இங்க நம்ம வீட்டுக்கு வந்துருக்கான்.."
அத்தனை நேரம் பதட்டத்தில் இருந்தவள் அர்ஜுனின் நண்பன் என்றதும் நிம்மதி அடைந்தாள். அஜி அத்தானோட நண்பனா இருந்தா கண்டிப்பா நல்லவங்களா தான் இருப்பாங்க என்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு அப்பொழுது தெரியவில்லை முதல் நாளே நான் ரொம்ப ரொம்ப கெட்டவன் என தெரியப்படுத்தப்போகிறான் என்று.
தன் தாத்தாவிடம் "என்ன பெயர் தாத்தா சொன்னீங்க" என்றதும் "அபிமன்யு மா வயது 30 நம்ம அஜி வயசு தான் அவனோட பொண்டாட்டி பிரசவத்துல இறந்து போயிடுச்சாம்.. எட்டு மாத குழந்தைய வச்சுக்கிட்டுத் தவிக்கிறான் என்று சொன்னதுமே எனக்கு பாவமா போயிடுச்சுமா.."
"அந்த பொண்ணு இறந்த பிறகு அங்கே இருக்கப் பிடிக்காம இங்க சொந்த ஊருக்கே வந்துட்டாங்கலாம்..நமக்கு தெரிஞ்ச பையன் நல்ல பையன் அதனால்தான்டா தாத்தா உன்ன இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன்.."
"சந்தியா பயப்படாதடா.. அவங்க எல்லாம் தங்கமான மனுஷங்க நான் உனக்கு கெடுதல் நினைப்பேனா.. அதுமில்லாம நானும் உன்கூடவே இருப்பேன் எதுக்கும் கவலைப்படாதடா நிம்மதியா போய் தூங்கு சரியா.. நாளைக்கு ஆசிரமத்துக்குப் போகனும் இல்லையா.." என்றதும் "ஹிம்ம் சரி தாத்தா நீங்களும் தூங்குங்க தாத்தா.." என்று விட்டு தனது அறைக்கு சென்றாள்.
அவர்கள் வீட்டிற்கு அருகிலேயே ஒரு ஆசிரமம் உண்டு.அர்ஜூன் ஆரம்பித்தது தான் அவன் போன பிறகு அவர்கள்தான் ஆட்கள் வைத்தப் பார்த்துக் கொள்கிறார்கள்.
அந்த ஆசிரமம் அர்ஜூனின் கனவு என்று கூட சொல்லலாம். தினமும் அங்கு போய் தன் மன ஆறுதலுக்காக கொஞ்ச நேரம் அங்கு இருக்கும் சிறுபிள்ளைகளுடன் சந்தியா நேரம் செலவழிப்பாள்.
அங்கு சென்றால் அர்ஜுன் தன் அருகில் இருப்பது போலவே உணர்வாள்.அதனால் அவள் அதிக நேரம் அந்த ஆசிரமத்தில் தான் இருப்பாள்.
அவளுக்கு தெரிந்தது எல்லாம் தாத்தா, தன் பிரியத்துக்குரிய அஜி அத்தான் அந்த ஆசிரமத்தில் இருக்கும் சிறுபிள்ளைகள் இவர்கள் மட்டுமே சந்தியாவின் உலகம். இதை தவிர வேறு எதுவும் தெரியாது..தெரிந்து கொள்ளவும் அவள் விருப்பப்படவில்லை.
சந்தியாவைப் பொருத்த வரையில் தன் அத்தான் தாத்தா இவர்கள் இருவரும் தான் நல்லவர்கள். அவளைப் பொருத்தவரை அவளுடைய அம்மா அப்பா அண்ணன் மூவரையும் என்றோ இறந்து விட்டார்கள் அவர்கள் இருந்தும் ஒரு பிரயோஜனம் இல்லை என்று தான் கூற வேண்டும்.
தன் அறைக்கு வந்தவள் அர்ஜுனின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்தாள். "அத்தான் உங்க ஃப்ரண்ட் தான் மாப்பிள்ளையாம் பேரு அபிமன்யுன்னு தாத்தா சொன்னாரு.. உங்களை மாதிரியே அவரும் நல்லவரா அத்தான்? உங்க நண்பனா இருந்தா கண்டிப்பா நல்லவரா தான் இருப்பாரு இல்லை அத்தான்.."
"ஆனால் அவர் ரொம்ப பாவம் அத்தான் அவர் மனைவி இறந்து போய்ட்டாங்களாம் ஒரு குட்டிப் பாப்பா அவருக்கு இருக்காம்.. சின்ன குழந்தையை வச்சிக்கிட்டுப் பாவம் கஷ்டப் படுறாராம் தாத்தா சொன்னாரு..அவரோட மனைவிய ரொம்ப லவ் பண்ணுறாரு போல அவங்க இறந்ததும் அந்த ஊரே வேண்டாம்னு இங்க வந்துட்டாங்களாம்.."
"அந்த குட்டிப் பாப்பா பாவம் தானே அத்தான் நான் அவங்க வீட்டுக்குப் போனதும் அந்த குட்டிப் பாப்பாவ விடவே மாட்டேன்.. என் கூடவே வச்சுப்பேன்" என்று புகைப்படத்தில் தன்னை பார்த்து சிரித்தவனிடம் கூறினாள்.
அங்கு அபி நெஞ்சில் தன் மகளைக் கிடத்தித் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். தான் எடுத்த முடிவு சரியா தவறா என்று அவனுக்குத் தெரியவில்லை.. ஆனால் ஏதோ மனதுள் ஒரு இதம் பரவியதை அவன் உணர்ந்தான்.
தனக்கென்று ஒருத்திவரப் போகிறாள் என்பதாலா இல்லை தன் மகள் தாய் பாசத்திற்கு இனி ஏங்க தேவையில்லை என்றாதாலா ஆனால் ஏதோ இதமாக இருந்தது.
ஒருபக்கம் பயமாகவும் இருந்தது எங்கே தன் மகளை அவள் கொடுமைப் படுத்தினால் என்ன செய்வது ஏனெனில் எந்த நேரமும் தன் மகளுடன் அவனால் இருக்க முடியாதல்லவா இப்படியே யோசித்துக் கொண்டிருந்தவன் எப்பொழுது தூங்கினான் என்றே தெரியாமல் அப்படியே தூங்கி இருந்தான்.
காலையில் எழுந்ததும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சந்தியா தன் தாத்தாவிற்கு சாப்பிட எளிமையாக சமையலை முடித்து விட்டு அவரிடம் வந்து "தாத்தா சாப்பாடு வச்சுருக்கேன் சாப்பிடுங்க நான் ஆசிரமத்துக்கு போய்ட்டு வரேன்" என்று கூறியவள் ஆசிரமத்திற்கு கிளம்பினாள்.
"கொஞ்சம் சீக்கிரம் வரப் பாருடா சந்தியா மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்துருவாங்க உன்னை அவங்க பார்க்கனுமாம்" என்றதும் "சரி தாத்தா" என்று கிளம்பினாள்.
வெளியே சென்றவள் ஏதோ மறந்தவளாக திரும்பி உள்ளே வந்து "தாத்தா சாக்லேட் வாங்கிட்டு வர சொன்னேனே வாங்கிட்டு வந்தீங்களா தருண் கேட்டுக்கிட்டே இருந்தான்…" என்று கூறினாள்.
"அந்த பிரிட்ஜில் பாரு மா வச்சுருக்கேன்.. அந்த சின்னக்குட்டிக்கு சாக்லேட் இருந்தா தான் சாப்பாடு இறங்குமா.. வரேன் மாலை நேரமா வந்து அவன் கிட்ட பேசிக்கிறேன்.." என்று கூறினார்.
"தாத்தா அவன் சிரிச்சு சிரிச்சு மயக்கிடுறான்.." என்று சிரித்தவள் அவரிடம் கூறிவிட்டுக் கிளம்பினாள். அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளி ஒரு பெரிய வீடு இருந்தது அந்த வீட்டைப் பார்த்தால் ஆசிரமம் என்றே சொல்ல மாட்டார்கள். பெயர் பலகை வைக்க வேண்டாம் என்று அர்ஜூன் கூறியதால் பெயர் பலகைக் கூட வைக்கவில்லை.
சந்தியா எப்பொழுதும் காலையில் அங்கிருக்கும் பிள்ளைகளுடன்தான் உணவருந்தவாள்.அதும் இந்த தருண் குட்டி இவள் சாக்லேட் குடுத்து ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவான்.. இவளும் அவனுக்கு ரொம்ப செல்லம் கொடுத்துக் கெடுத்து வைத்திருந்தாள்.
தாத்தா கூட அடிக்கடி சொல்லுவார் அவனுக்கு நீ செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிருக்கா சந்தியா பாரு சாப்பாடே சாப்பிட மாட்டேங்கிறான் என்று கூறுவார். பெரியவனா ஆனா சரியா போய்டும் என்று சமாதானப் படுத்துவாள்.அவன் கேட்கும்போது கொடுக்காம இருக்க முடியலை தாத்தா என்று கூறுவாள்.
அபி வீட்டில் காலையில் ஹர்ஷி தான் முதலில் எழுந்து தன் தந்தையின் நெஞ்சில் குப்புற படுத்து அவன் இரண்டு நாள் ஷேவ் பண்ணாமல் தாடியுடன் இருந்த கன்னத்தை தன் பிஞ்சு கரங்களால் தட்டிக் கிள்ளி அவனை எழுப்பினாள்.
அவள் எழுப்பவும் எழுந்தவன் தூக்கம் இன்னும் அவனை நீங்காத கரக்கரத்தக் குரலில் "ஹர்ஷிக்குட்டி எழுந்துட்டீங்களா.."என்று அவளைத் தன் நெஞ்சில் நிற்க வைத்து அவள் பிஞ்சு கால்களில் முத்தமிட்டான்.
அவள் பிஞ்சு பாதத்தில் அவன் மீசை முடி குத்த முத்தமிட்டதும் கூச்சத்தில் கால்களை உதைத்து சிரித்தாள்.அவள் சிரிப்பதைப் பார்த்துத் தானும் சிரித்தவன் "என் குட்டிப் பொண்ணு சிரிக்குறீங்களா.." என்று அவள் நெற்றியில் தன் நெற்றியால் மெதுவாக முட்டினான்.
பின்பு அப்படியே எழுந்து பிரஷ் ஆயிட்டுக் "கீழே போகலாமா" என்று அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவளுக்கு நேப்கின் மாற்றி விட்டு அவனும் முகம் கழுவி பல்துலக்கி கீழே வந்தான்.
அவன் கீழே வந்து பார்த்தபோது அனைவரும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தனர். பரமனிடம் "எங்க தாத்தா இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டு இருக்கீங்க.." என்று கேட்டதும் "பொண்ணு வீட்டுக்கு தான்ப்பா " என்று கூறினார்.
"நீயும் போய் கிளம்பு" என்றதும் "நான் எதுக்கு தாத்தா நீங்க போய் பேசி முடிச்சிட்டு வாங்க" என்று கூறினான்.
தேவி வந்து ஹர்ஷியிடம் "ஹர்ஷிக்குட்டி நம்ம இன்னைக்கு எங்க போறோம் தெரியுமா.. அம்மா பார்க்க போறோம்டா.. வாங்க வாங்க நம்ம போய் ரெடி ஆகலாம்.. அம்மா உன்னை முதல் முதலில் பார்க்கும் போதே அப்படியே ஸ்டன் ஆகி நிற்கனும்.."
"நம்ம ஏஞ்சல் டிரெஸ்லாம் போட்டு அழகா ரெடி ஆகலாம் வாங்க.." என்று தன் அறைக்கு தூக்கிச் சென்றாள்.
இங்கு ஒருவன் "அம்மா" என்று சொன்னதுமே அதிர்ந்து நின்றவன்தான் பரமனின் குரலில் தான் நினைவுக்கு வந்தான்.
"போய் கிளம்பு அபி நேரம் ஆச்சுப்பா.." என்றதும் மறுத்துக் கூற முடியாமல் "நீங்க முன்னாடி போய் பேசிட்டு இருங்க தாத்தா நான் நம்ம கடையில் கொஞ்சம் வேலை இருக்கு பார்த்துட்டு உடனே வரேன்.." என்று கூறினான்.
அவன் கூறியதைக் கேட்டு யோசித்தவர் "சரி அபி சீக்கிரம் வா" என்றதும் அவன் கடைக்குக் கிளம்பிச் சென்றான். இவர்கள் அனைவரும் சந்தியா வீட்டிற்குக் கிளம்பி வந்தனர்.
இவள் இந்த பக்கம் கிளம்பி சென்ற சிறிது நேரத்திலே சேகர், சந்திரா, தேவி, பரமன், ஹர்ஷிதா அனைவரும் காரில் வந்திறங்கினர்.
சாப்பிட அமர்ந்த சதாசிவம் கார் வந்த சத்தம் கேட்டு வெளியே வந்து வாங்க என்று உள்ளே அழைத்துச் சென்றார். ஹர்ஷி புது இடத்திற்கு வந்ததும் திரும்பி திரும்பி அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். பரமனிடம் "அபி வரலையா பரமா.." என்று கேட்டார்.
"கடைல ஒரு வேலையாம் முடிச்சிட்டு உடனே வரதா சொன்னான்.. இப்போ வந்துருவான்டா" என்று கூறினார். "எங்கடா சந்தியாவை கூப்பிடு.." என்றதும் "இங்க பக்கத்துல நம்ம வீட்டுக்குப் போயிருக்கா.." என்றதும் "எந்த வீடு சதா.." என்றதும் தாங்கள் நடத்தும் ஆசிரமத்தைப் பற்றி கூறினார்.
"நல்ல விஷயம் டா சதா..எத்தனை பேர் இருக்காங்க" என்றதும் "இருபத்தைந்து பேரு எல்லாம் சின்ன சின்ன குழந்தைகள்.. அங்கேயே சமையல் ஆள் வைத்து சமைத்து பிள்ளைகளுக்கு தருவாங்க அங்கு பிள்ளைகளுடன் தான் சந்தியா சாப்பிடுவா..
இப்போ மணி எத்தனை என்று கடிகாரத்தைப் பார்த்து 8:30 ஆகுது.. எல்லாம் இப்போ சாப்பிட்டுட்டு இருப்பாங்க" என்றதும் "அப்போ வாங்களேன் அங்கேயே சாப்டுக்கலாம்.. நாங்களும் இன்னும் யாரும் சாப்பிடலை அப்படியே கிளம்பி வந்துட்டோம்.."என்று சந்திரா சொல்லவும் அனைவரும் அதனை ஆமோதித்துக் அந்த வீட்டிற்குக் கிளம்பினர்.
கடைக்கு சென்றவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.. தேவி அம்மா பார்க்க போகலாம் என்றதும் ஏதோ ஒரு இனம் புரியா உணர்வு அவனை ஆட்கொண்டது. தன் மனதில் ஒரு குரல் போ போய் பாரு என்று கூறிக்கொண்டே இருக்கவும் அதற்குமேல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை.
தாத்தா அழைத்ததும் போயே ஆகவேண்டுமா என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அந்த அம்மா என்ற சொல்லை கேட்டதும் ஹர்ஷிக்கு அம்மா என்றால் நான்தானே அப்பா அப்போ அவள் எனக்கு என்று யோசித்தவன் உடனே லதா நியாபகம் வரவும் ச்சே என்று கோபத்தில் அங்கிருந்த மேசையைக் குத்தினான்.
பிறகு ஒரு முடிவு எடுத்தவனாக கிளம்பினான் சதாசிவத்தின் வீட்டிற்கு.
இங்கு ஆசிரமத்திற்கு வந்தவள் நேரே குழந்தைகள் இருக்கும் அறைக்கு சென்றாள். அனைவரும் குளித்து முடித்துவிட்டு அங்கேயே விளையாடிக் கொண்டிருக்க "குட்டீஸ் என்ன பண்றீங்க எல்லாரும்"என்று கேட்டதும் உடனே அனைவரும் "அவள் அருகில் சந்தும்மா.." என்று ஓடிவந்தனர்.
"என்ன குளிச்சாச்சா குட்டீஸ்.. வாவ் எல்லாரும் குளிச்சு பிரஷா இருக்கீங்க..எங்கே என் அருந்தவாலு தருண்" என்றதும் அனைவரும் ஒரு இடத்தில் கையைக் காட்டினர்.
அங்கு இருக்கும் குழந்தைகள் அனைவரும் பத்து வயதிற்கு உட்பட்டவர்களே. அதில் ஜெயா என்பவள் தான் பெரிய பெண் வயது ஒன்பது மற்றவர்கள் ஆறு, ஏழு, ஐந்து வயதுடையவர்கள்.
தருணிற்கு மட்டும் நான்கு வயது. நான்கு வருடங்களுக்கு முன்பு அர்ஜூன் வீட்டிற்கு வேலை முடிந்து வந்து கொண்டிருந்த நேரம் குழந்தை அழும் சத்தம் கேட்கவும் பைக்கை நிறுத்தி விட்டு திரும்பி பார்த்தான்.
அங்கு யாரும் இல்லை கிளம்ப போனவன் திரும்ப அழுகிற குரல் கேட்கவும் அருகில் இருந்த குப்பைத் தொட்டியைப் பார்த்தான்.
அங்கிருந்து தான் சத்தம் வந்துக் கொண்டிருந்தது. போய் பார்க்கவும் பிறந்து பத்து நாள் கூட ஆகாத குழந்தையை யாரோ போட்டுவிட்டு சென்றிருந்தனர்.
அவன்தான் தருண் தன் அத்தான் தருணை வீட்டுக்கு அழைத்து வந்ததால் சந்தியாவிற்கு எப்பொழுதுமே தருண் என்றால் ஸ்பெஷல் அதிகம் செல்லம் கொடுப்பாள்.
தருணும் கேடிப் பயல் இவளிடம்தான் அனைத்து சேட்டையும் செய்வான். அங்கு தனியே அவன் மட்டும் குளிக்காமல் கோபத்துடன் உர்ரென்று நிற்க முகம் கனிந்தவள் ஜெயாவிடம் அனைவரையும் அழைத்துப் போய் சாப்பிடுமாறு கூறினாள்.
அவர்களை அனுப்பி வைத்து விட்டு அந்த குட்டியிடம் வந்தாள்.அவள் நெருங்கவும் தருண் அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றான். அவன் அருகே மண்டியிட்டு அமர்ந்து "தருக்குட்டி நீ கேட்டது வாங்கிட்டு வந்துருக்கேன்.. இங்கே பாரு பேக்ல வச்சுருக்கேன்.." என்று குசுகுசுவென அவன் காதில் மெதுவாகக் கூறினாள்.
உடனே ஓரப்பார்வையால் திரும்பிப்பார்த்தான் அவன் பார்க்கவும் பையில் இருந்த சாக்லேட்டை லேசாக எடுத்துக் காட்டி உள்ளே வைத்தாள். உடனே அவளிடம் தாவி "சந்தும்மா சாக்கி தா.." என்று கேட்டதும் அவளுக்கு உருகிப் போயிற்று,
இப்பொழுது குடுத்தால் அவன் சாப்பிடாமல் டிமிக்கி குடுப்பான் என்று தெரிந்ததால் அவனிடம் "என் தருக்குட்டி நான் சொன்னதெல்லாம் கேட்டு நல்லப் பிள்ளையா இருந்தா சாக்கி தருவேன்.." என்று கூறியவள் "இப்போ வாங்க நம்ம குளிக்கப் போகலாம்.." என்று வெளியே தூக்கி வந்தாள்.
அவள் வெளியே தூக்கி வரவும் இவர்கள் அனைவரும் சதாசிவத்துடன் வீட்டின் உள்ளே வந்தனர். அவர்களைப் பார்த்ததும் சிநேகமாக சிரித்தாள். சந்திரா அவள் அருகில் வந்து "எப்படி மா இருக்கே.." என்றதும் "நல்லா இருக்கேன்மா.." என்றதும் அவளிடம் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
தேவி தான் ஹர்ஷியைத் தூக்கி வைத்திருந்தாள். அவளும் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்க சந்தியா அவள் அருகில் வந்து ஹர்ஷியிடம் "ஹே க்யுட் பேபி அழகா இருக்கீங்களே ஏஞ்சல் போல.."என்று அவள் கன்னத்தை வருடவும் ஹர்ஷி வெட்கம் கொண்டு தன் அத்தையின் தோள் வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
சந்திரா ஹர்ஷியிடம் "அம்மா டா .. அம்மா பாரு அம்மாவ கூப்பிடு" என்றதும் திரும்பி சந்தியாவை உற்று பார்த்தாள். உடனே தன் அத்தையிடம் இருந்து சந்தியாவிடம் தாவினாள்.அவள் தருணை இடது கையில் ஏந்தி இருக்கவும் ஹர்ஷியை வலது கையில் தாங்கிக் கொண்டாள்.
உடனே அவளிடம் தருண் சமத்தாக தன் சந்துக்கு வலிக்கும் என்று அவளிடம் இருந்து இறங்கிக் கொண்டான்.அதைக் கண்டு "சமத்துக் குட்டியா இருக்கீங்களே உங்க பேரு என்ன குட்டி பையா.." என்றாள் தேவி.
"நான் குட்டி பையன் கிடையாது என் சந்துக்கு மட்டும் தான் நான் குட்டி என் பேரு தருண்.." என்று தன் மழலைக் குரலால் சொல்லவும் "சோ ஸ்வீட்.." என்று தன் பையில் இருந்த சாக்லேட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள் தேவி உடனே அதை பார்த்து நிமிர்ந்து சந்தியாவைப் பார்க்கவும் "அத்தைதான் தருக்குட்டி வாங்கிக்கோ.." என்றதும் தான் "நன்றி அத்தை" என்று வாங்கிக் கொண்டான்.
சிறிது நேரம் அவர்களிடம் பேசவும் சகஜமாக அனைவரும் பேசவும் சந்தியாவிற்கு எதுவும் அந்நியமாக தெரியவில்லை.அவளும் அவர்கள் பேச்சில் கலந்துக் கொண்டாள்.
பரமனுக்கு கால் வரவும் தன் போனை எடுத்து யாரென்று பார்த்தார் அபிமன்யு தான் அழைத்தான். "சொல்லு அபி எங்க இருக்க" என்று கேட்டார்.அபி என்றதுமே சந்தியா நெஞ்சம் ஏனோ படப்படத்தது.
"தாத்தா இங்க அர்ஜூன் வீடு சாத்தியிருக்கே..வேற அட்ரஸ்ல இருக்காங்களா" என்றதும் "இல்லை அபி நீ இருக்கிற தெருவில் தான் இருக்கோம்.. காரை அங்கேயே பார்க் பண்ணிட்டு இரண்டு வீடு தள்ளி ஒரு பெரிய வீடு இருக்கும் பாரு அங்க தான் இருக்கோம் வா" என்று போனை அனைத்தார்.
சதாசிவமும் பரமனும் வெளியே போய் அவனை அழைத்து வந்தனர். அப்பொழுது ஹர்ஷி தன் அம்மா நெஞ்சில் ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டு தன் அத்தை ஏதோ பேசவும் அவளைப் பார்த்து சிரித்தாள்.
ஹர்ஷி சிரிக்கவும் சந்தியாவும் அதைப் பார்த்து சிரித்துக் "குட்டிப் பொண்ணு அழகா சிரிக்கிறாங்களே" என்று சொல்லிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
அவள் வைத்த முத்ததில் பித்தம் தலைக்கேற நின்றவனை அவள் அறியவில்லை. அபிக்கு அந்த காட்சியைப் பார்க்கவே அத்தனை இதமாக மனதுக்கு சுகமாக இருந்தது.
தன் மகளும் தன் மனைவியும் சிரிப்பதைத் தன் மனப்பெட்டகத்தில் சேமித்து வைத்துக் கொண்டான்.
தன் மனைவியா ஆமாம் அவன் மனைவியே தான் அவனுக்கு மட்டுமே அவள்.. ஆனால் அதை அவன் உணரும் நிலையில் இல்லை.
தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்கவும் சந்தியா நிமிர்ந்து பார்த்தவள் சட்டென்று குனிந்துக் கொண்டாள்.அவள் தன்னைப் பார்த்து உடனே தலையைக் குனிந்துக் கொள்ளவும் அபியின் கண்களில் சுவாரஸ்யம் கூடியது.
அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சந்தியாவோ அவன் பக்கமே திரும்பவில்லை.அவள் ஹர்ஷியிடம் தீவிரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் ஹர்ஷியும் அதற்கு தன் பொக்கை வாயில் எச்சில் ஒழுக சிரித்துக் கொண்டிருந்தாள்.
தானும் அந்த சிரிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று எழுந்த ஆவலை தன் தலை முடியைக் கோதி கட்டுப்படுத்திக் கொண்டான்.
பின் அனைவரையும் சாப்பிட சதாசிவம் அழைத்தார். சந்தியா "நீங்க எல்லாரும் போய் சாப்பிடுங்க.. நான் தருணைக் குளிக்க வைத்து விட்டு வந்து சாப்ட்டுக்கிறேன்" என்று கூறியதும் தேவி ஹர்ஷியைத் தூக்க வர தன் அம்மாவை விட்டு வரவில்லை அந்த சின்னக்குட்டி.
"ஹர்ஷிக்குட்டி அம்மா வந்ததும் அத்தையை மறந்துட்டியா" என்று அவள் கன்னத்தை மெதுவாக கிள்ளி தன் உதட்டில் ஒற்றி முத்தமிட்டாள். பரமன் அவசரமாக "சரி சந்தியாவும் அபியும் பிள்ளைகளைப் பார்த்துக்குவாங்க.. வாங்க நாம போய் சாப்பிட்டு வரலாம்" என்றதும் அவர் அதற்காக கூறுகிறார் என்பதைக் கண்டு கொண்டு அனைவரும் சாப்பிடும் அறைக்கு சென்றனர்.
அபி என்ற ஒருவன் அங்கு இருக்கிறான் என்று கண்டுக்கொள்ளாமல் மகளைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு "தருக்குட்டி வாங்க குளிக்கலாம்.." என்று அவனை வெளியே அழைத்துச் சென்றாள்.
அந்த வீட்டின் முன்பு புற்தரையில் ஒரு பக்கம் குழந்தைகள் விளையாட என்று ஒரு பகுதியை ஒதுக்கி இருந்தனர். மறுபக்கம் அமருவதற்காக பென்ஞ் போடப் பட்டு இருந்தது.
அங்கு இருந்த பெஞ்சில் தருணை அமர்த்தி விட்டு "இரு தருக்குட்டி நான் போய் வெண்ணீ சோப்பு எல்லாம் எடுத்துட்டு வரேன்.." என்று ஹர்ஷியைத் தூக்கிக் கொண்டு போனாள்.
அவள் பின்னால் போக சொன்ன மனதைத் தன் கால்களைத் தரையில் ஊன்றி நின்றுக் கொண்டான். தன்னையே முறைத்துக் கொண்டு இருக்கும் அந்த சின்னவனை நோக்கி ஏன் இவன் இப்படி பார்க்கிறான் கண்டுப் பிடிச்சுட்டானோ என்று நினைத்தவன் சின்ன பையன் இவனுக்கு எப்படி தெரியும் என்று அசால்டாக விட்டு விட்டான்.
அவனுக்கு தெரியவில்லை இன்னும் சற்று நேரத்தில் தன்னவளின் முன்பு தன் மானத்தை அவன் வாங்க போகிறான் என்று.
சிறிது நேரம் கழித்து சந்தியா வரவும் ஒரு வயதானவர் சுடு தண்ணீரைக் கொண்டு வைத்துவிட்டு சென்றார்.அவள் வந்ததும் "சந்தும்மா ஏன் இவர் உன்னை முறைச்சு முறைச்சுப் பார்க்குறார்.." என்று அபியைக் காட்டிக் கூறினான்.
அவன் கூறியதைக் கேட்டுத் திருத்திருவென முழித்தான் அபிமன்யு சின்ன பையன் நினைச்சா இப்படி போட்டு உடைக்கிறான் என்று மனதில் நினைத்தான்.
அவன் மனசாட்சியோ நீ உன் பொண்டாட்டியைப் பார்க்கக்கூட முடியாது போல டா என்று இவனைப் பார்த்துக் கொக்கரித்து சிரித்தது.
நான் என் பொண்டாட்டிய பார்ப்பேன் கட்டிக்கூடப் பிடிப்பேன் இல்லை என்ன வேண்டும்னாலும் பண்ணுவேன் உனக்கென்ன என்று தன் மனசாட்சியிடம் எரிந்து விழுந்தான்.
இன்னும் சிறிது நேரத்தில் உள்ள சூடா வெளியே கூலா அவன் மனநிலையை மாற்றும் ஒரு நிகழ்வு நிகழப் போவதை அவன் அறியவில்லை.
வாழ்வு சிறக்கும்….
0 Comments