வாழ்வு - 1


சதாசிவம் மனது பாரமாக இருக்கவும் கோயிலுக்கு சென்றார். இந்த முதிய வயதில் எத்தனை கஷ்டங்களைத்தான் அவரும் தாங்குவார்.


இறைவனிடம் "என் பேரனைதான் நீ எடுத்துக்கிட்ட என் பேத்திக்காவது ஒரு நல்ல வழியைக் காட்டு" என்று வேண்டினார்.


சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்லலாம் என்று அமர்ந்தார். அப்பொழுது "சதா" என்ற குரல் கேட்கவும் யாரென்று திரும்பிப்பார்த்தார்.


அங்கு தூரத்தில் தன் வயதை உடைய ஒருத்தர் அழைத்தார் முதலில் யாரென்று அடையாளம் தெரியவில்லை பிறகு கண்டுக் கொண்டு "டேய் பரமா எப்படிடா இருக்க" என்று கட்டி அணைத்தார்.


"என்னத்த சொல்றது குடும்பத்துல நிம்மதியே இல்லடா என் பேரனோட மனைவி பிரசவத்துல இறந்துட்டடா என் பேரன் பச்சைக் குழந்தைய வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறான் அதுவே ரொம்ப வருத்தமா இருக்குடா" என்று கூறினார்.


அவர் கூறியதைக் கேட்ட சதாசிவம் தன் யோசனையை நண்பனிடம் கூறினார்.பின் சிறிது நேரம் இருவரும் பேசிவிட்டுக் தங்கள் வீட்டிற்குக் கிளம்பினர்.


சதாசிவம் தன் பேத்தியுடன் போராடிக் கொண்டிருந்தார். "பாப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்கோடா.." என்று கூறியதும் "எனக்கு கல்யாணம் வேண்டாம் தாத்தா கொஞ்சம் என்னோட நிலைமையில் இருந்து யோசிச்சு பாருங்க தாத்தா" என்று கூறினாள்.


"பாப்பா நீ புரியாம பேசிட்டு இருக்கடா ஒருவேலை நான் இந்த உலகத்தை விட்டுப் போயிட்டா உன்னால தனியா சமாளிக்க முடியாதுடா..உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுத்தாதான் நான் நிம்மதியா போய் சேருவேன்" என்று வேதனையுடன் கூறினார்.


அவர் கூறியதைக் கேட்டுப் பதறியவள் "ஏன் தாத்தா இப்படி எல்லாம் பேசுறீங்க நீங்களும் என்னை விட்டுப் போயிட்டா நான் என்ன பண்ணுவேன்…" என்று அவர் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.


"அழாதடா சந்தியா என்னால நிம்மதியா இருக்க முடியலடா என் பேரன் தான் வாழாம சின்ன வயசுலேயே போய் சேர்ந்துட்டான்.. நீ இப்படி வாழாம தனிமரமா இருந்தா அவன் ஆன்மா சாந்தி அடையாதுடா.. நீ நல்லாருக்கனும்னு தானே அவனும் நினைப்பான்…'' என்று வருந்தினார்.


"தாத்தா உங்களை விட்டு நான் எப்படி இருப்பேன்..என்னால இன்னொரு வாழ்க்யை யோசிச்சுக் கூட பார்க்க முடியலை தாத்தா.."


சிறிது நேரம் யோசித்தவள், "அஜி அத்தான் சந்தோஷப் படுவாங்கன்னா கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.. ஆனால் ஒரு கண்டீஷன் நீங்க என்கூடவே இருக்கனும்.. உங்களை தனியா விட்டுட்டு என்னால் நிம்மதியா இருக்க முடியாது…" என்று கூறிவிட்டு தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.


அவள் சம்மதம் தெரிவித்ததும் சதாசிவம் நிம்மதியாக உணர்ந்தார். உடனே தன் நண்பன் பரமனிற்கு அழைத்தார். "ஹலோ பரமா நான் சிவம் பேசுறேன்டா.."என்றதும் "டேய் சதா எப்படி இருக்க நான் நல்லா இருக்கேன்டா..நான் இப்போதான் என் பேத்திக்கிட்ட பேசினேன் எப்படியோ சம்மதிக்க வச்சுட்டேன்…நீ உன் பேரன் கிட்ட பேசிட்டு சொல்லுடா" என்று கூறினார்.


"டேய் சதா அவன் கிட்ட இதை சொன்னா ரொம்ப கோபப்படுவான்டா அதான் என்ன பண்றதுன்னு தெரியலை.." என்று கூறினர்.


"பரமா முதல்ல என் பேத்தியும் முரண்டுப் பிடிச்சா அப்புறம் என் பேரன் பேரைச் சொல்லியே சம்மதிக்க வச்சுட்டேன். - நீ அபிகிட்ட போய் பேசிப்பாரு அவன் ஒத்துக்கலைன்னா அவன் வீக்னெஸ்ல பார்த்து அடி பயல் தன்னால வழிக்கு வருவான்.."


"சரிடா வீட்டுல பேசிட்டு நல்ல முடிவா சொல்றேன் எப்படியோ ரெண்டு பேரும் நல்லார்ந்தா சரி…" என்று ஒரு பெருமூச்சுடன் போனை அனைத்தார்.


பரமன் தோட்டத்தில்ருந்து வீட்டினுள் சென்று தன் மருமகளிடம் கூறினார்."சந்திரா நேற்று கோயில்ல என் நண்பன பார்த்தேன் அப்போதான் சொன்னான் அவனோட பேரன் ஒரு விபத்துல இறந்துட்டதாகவும் மருமகப் பெண்ணுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும்னு பேசிட்டு இருந்தான். பொண்ணு பேரு சந்தியா 22 வயசு தான் ஆகுது .அவன் சொன்னதும் நம்ம அபிக்கு பேசி முடிச்சா என்னன்னு தோணுச்சு..அவன்கிட்டயும் சொன்னேன் நான் என் பேத்திக்கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னான்.."


"அவன்தான் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன போன் பண்ணினான் அவன் எப்படியோ அவன் பேத்திய சம்மதிக்க வச்சுட்டானாம். அதான் இப்போ அபிய ஒத்துக்க வச்சா எல்லாம் சுமூகமா முடிஞ்சிடும்.. நீ என்னமா சொல்ற என்று கேட்டார்.. "


"இதுல நான் சொல்ல என்ன மாமா இருக்கு நானும் அவனை தினமும் சொல்றேன் அதை பற்றி பேசினாலே எரிஞ்சு விழுறான்…"


"என் புள்ளைக்கு ஒரு நல்லது நடந்துடாதான்னு கோயில் கோயிலா சுத்துறேன்..எப்படியோ கடவுளா பாத்து ஒரு வழி காமிச்சுருக்கார். அவனை சம்மதிக்க வைக்கனும் எப்படியாவது " என்று கூறும்போதே "என்ன சம்மதிக்க வைக்கனும்" என்று கேட்டுக்கொண்டே வந்தார் சந்திராவின் கணவர் சேகர்.


தன் மாமனார் கூறிய அனைத்தையும் கணவனிடம் கூறவும் "சரி இன்னைக்கு நைட் பேசி ஒரு முடிவு எடுத்துடுவோம்" என்று கூறினார்.


இங்கு சந்தியா தன் அறையில் சுவற்றில் மாட்டியிருந்த படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த படத்தில் இருந்தவனோ இவளைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்."அஜி அத்தான் நான் இப்போ என்ன செய்யட்டும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை... நான் கஷ்டத்தில் இருந்தப்போ நீங்க தானே எப்பொழுதும் வந்து எனக்கு தைரியம் சொல்வீங்க..இப்போ தாத்தா கல்யாணம் பண்ணிக்க சொல்றார் நானும் ஒத்துக்கிட்டேன்.."


 "அங்க இருக்கிற மனுஷங்க எப்படி இருப்பாங்க என்று தெரியலை உங்களை மாதிரியே என்னை பாசமா பார்த்துப்பாங்களா எனக்கு நீங்க வேணும் அத்தான் உங்களைப் போல யாருமே என்னை பார்த்துக்க மாட்டாங்க என்று அவனுடன் பேசினாள்.." அதற்கும் அவன் சிரித்துக்கொண்டு தான் இருந்தான்.


 "என்ன ஆனாலும் என்கூடவே இருங்க அத்தான்.." என்று படத்தில் இருந்தவனிடம் கூறினாள்.அர்ஜுன் அவளுக்கு கணவன் என்பதை விட கடவுள் என்று தான் அவள் மனதில் நினைத்துக்கொண்டிருந்தாள்.


அம்மா அப்பா அண்ணன் அனைவரும் இருந்தும் அவள் அனாதை தான். சிறுவயதிலிருந்தே பாசத்தை அறியாதவளுக்கு பாசத்தை அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்தவன் அவளுக்கு அம்மா ,அப்பா, தம்பி ,அண்ணன், நண்பன் அனைத்தும் அவனே.


இங்கு சதாசிவமும் தன் பேரனிடம்தான் பேசிக்கொண்டிருந்தார். "கண்ணா எப்படியாவது இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கனும் நீ தான் எந்த பிரச்சனையும் இல்லாமா நடத்திக்கொடுக்கனும்.."


இவர்கள் அனைவரும் நினைத்தால் திருமணம் நடந்திடுமா அவன் ஒத்துக்கொள்ள வேண்டுமே..அந்த அவன் அபிமன்யு.


விருத்தாசலத்தில் சொந்தமாக இரண்டு ஜவுளி கடைகள் உள்ளன அவற்றை அபிமன்யு தான் பார்த்துக்கொள்கிறான். தன் குடும்பத்தின் மீது மிகவும் அன்பு கொண்டவன்..


இரண்டு வருடங்களுக்கு முன்பு தன் குடும்பத்தினர் இந்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதமா என்று லதாவின் புகைப்படத்தைக் காட்டவும் மறுக்க காரணம் இல்லாததால் சரி என்றான்..


ஆனால் என்று தன் மனைவி தன்னையும் தன் மகளையும் விட்டுச்சென்றாளோ அன்றிலிருந்து தன் வாழ்வையே வெறுத்தான்.


இரவு தன் வீட்டிற்கு வந்தவன் தன் மகளைத்தான் தேடினான். தன் தங்கை தேவியின் அறைக்கு சென்றான் அங்கே தான் அவன் மகள் ஹர்ஷிதா தன் அத்தையிடம் விளையாடிக் கொண்டிருந்தாள். 


"ஹர்ஷி குட்டி என்ன பண்றாங்க.." என்ற குரல் கேட்டதும் தன் தந்தையைக் கண்டுக் கொண்டு அவனிடம் தாவினாள்.


தன் குட்டிக் கண்களால் அவனைக் கொள்ளைக் கொண்டாள்."என்னடா குட்டி மா சாப்டீங்களா "என்று கேட்டதும் இரண்டு கையையும் தட்டி அவனைப் பார்த்து சிரித்தாள்.


"சிரிக்கிறீங்களா குட்டி... என் செல்லம் வாங்க வாங்க அப்பாக்கு பசிக்குது சாப்பிடப் போகலாமா" என்றுதும் "பா..பா... பா.."என்று கையை ஆட்டினாள் அந்த குட்டி தேவதை.

அவளைத் தூக்கிக்கொண்டே ஹாலிற்கு வந்தான்.


"அம்மா பசிக்கிது சாப்பாடு எடுத்துட்டு வாங்க.." என்றதும் சந்திரா அனைத்தையும் எடுத்து வந்தார். "அபி வாப்பா.." என்று அழைத்து அவனுக்கு பறிமாறினார். சேரில் தன் மகளுடன் அமர்ந்து "நீங்க எல்லாம் சாப்ட்டாச்சா" என்று கேட்டான்.


அவன் கேட்டதும் தேவி தன் அண்ணனிடம் "நாங்க எல்லாரும் சாப்டோம் அண்ணா அதுமில்லாம இன்னைக்கு நம்ம ஹர்ஷி குட்டிக்கு இட்லி கொஞ்சமா குடுத்தேன் சாப்பிட்டா அண்ணா.."என்றாள்.


தேவி ஹர்ஷியிடம் "இன்னைக்கு ஹர்ஷி குட்டி இட்லி சாப்டீங்க தானே அப்பாக்கிட்ட சொல்லுங்க" என்றதும் என்ன புரிந்ததோ தன் அத்தையைப் பார்த்து சிரித்துக்கொண்டே தன் தந்தையைப் பார்த்துச் சிரித்தாள்.


"எட்டு மாதம்தானே ஆச்சு இட்லி கொடுக்கலாமா ம்மா" என்று தன் அன்னையிடம் கேட்டான். "அதெல்லாம் வெறு இட்லியா கொஞ்சமா குடுக்கலாம் அபி " என்று கூறினார்.


"நீ சாப்பிடு அண்ணா" என்று ஹர்ஷியை வாங்கிக் கொண்டாள்.அவன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது பரமனும் சேகரும் வந்தனர்.


பரமன் தொண்டையை செறுமியவர் "அபி"என்று அழைத்துத் தயங்கினார். "என்ன தாத்தா என்கிட்ட என்ன தயக்கம் என்னன்னு சொல்லுங்க" என்றதும் "அபி உனக்கு கல்யாணம்" என்று ஆரம்பித்தவரைத் "போதும் தாத்தா" என்று கத்தித் தடுத்து நிறுத்தினான்.


இவன் கத்திய சத்ததில் ஹர்ஷி பயந்து வீலென்று கத்தி அழ ஆரம்பித்தாள் . உடனே சாப்பிட்ட தட்டில் அப்படியே கையைக் கழுவியவன் தன் மகளிடம் சென்று "சாரிடா சாரிடா.. அப்பா இனி கத்த மாட்டேன்" என்று அவளைத் தூக்கிச் சமாதானப் படுத்திக் கொண்டே தோட்டத்திற்குச் சென்றான்.


வெளியே வந்தவன் தன் மகளிடம் மேலே வானத்திலிருந்த நட்சத்திரத்தைக் காட்டி "அங்க பாருடா குட்டி மா அழகா இருக்குல்ல.." என்று சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான்.


தேவி வந்து "என்கிட்ட குடு அண்ணா" என்று குழந்தையை வாங்க கையை நீட்டினாள் அழுதுக் கொண்டே தலையை ஆட்டித் தன் தகப்பன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.


"ஹர்ஷி குட்டி வாடா நம்ம விளையாடலாம் நீ இப்போ வந்தா உனக்கு பொம்மை தருவேன் நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து விளையாடலாம்" என்று தன்னறைக்குத் தூக்கிச் சென்றாள்.


இன்னொரு கல்யாணம் எனக்கு வேண்டாம் ஒன்னு பண்ணி நானும் என் குழந்தையும் அனுபவிக்கிறதே போதும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருந்தான்.


பரமன் அவன் அருகில் வந்து "விட்டுட்டுப்போனவளையே எதுக்கு நினைச்சிட்டு உன் வாழ்க்கையை வீணாக்கிட்டு இருக்க அபி.."


"நான் ஏன் அவளை நினைக்கனும்...என்னை வேண்டாம்னு சொன்னவள் எனக்கும் வேண்டாம் அவளை ஏன் நான் நினைக்கப்போறேன் அந்த சுயநலவாதியை என் வாழ்ககையில் இருந்து எப்பவோ தூக்கி எறிஞ்சிட்டேன் தாத்தா" என்று கோபத்துடன் கூறினான்.


"இந்த உலகத்துலையே நான் அதிகமா வெறுக்கிறது அவளை தான் தாத்தா.. தனக்குப் பிறந்த குழந்தைக்குப் பால் கூடக் கொடுக்காம தன் சுயநலம் தான் முக்கியம் என்று நினைத்து எங்க ரெண்டு பேரையும் விட்டுட்டுப் போனவள் நமக்கு வேண்டாம் என்று தான் ஒதுக்கி வச்சோம்…"


"என் பிள்ளை அன்று பாலுக்கு எப்படி அழுதா தெரியுமா தாத்தா ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சோம் எல்லாரும்..ஆனால் மனசாட்சியே இல்லாம விட்டுட்டுப் போனாலே.. அந்த ராட்சசிய நான் என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது…"


"என் பிள்ளை அழுதது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு தாத்தா.." என்று கோபமாக கூறினான்.


"அவளுக்கு நான் என்ன குறை வச்சேன் தாத்தா.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அப்படியே விட்டுட்டுப் போனாலே அன்றோடு அவளோட அத்தியாயம் என் வாழ்க்கையில் முடிஞ்சிப் போச்சு.. அவ பொண்ணே இல்ல தாத்தா பெண் உருவத்தில் இருக்கும் ராட்சசி.."


"இனி என்கிட்ட யாரும் கல்யாணம் பத்தி பேசாதீங்க.. என்னால யாரையும் நம்பமுடியலை.. அவ விட்டுட்டுப் போனதுதான் நியாபகம் வருது.. தயவுசெஞ்சு என்னை வற்புருத்தாதீங்க தாத்தா.. எனக்கு கஷ்டமா இருக்கு நீங்க கல்யாணத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் உங்ககிட்ட ரொம்பக் கோபப்படுறேன்.. என்னை இப்படியே விடுங்க தாத்தா.."


"எங்க மேல கோபப் படுறதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு அபி.. உனக்கு ஒன்னும் வயசு ஆகிடலையே அபி அதுமில்லாம நீ உன்னை பற்றி மட்டும் யோசிக்கக் கூடாது.. இதுல நம்ம ஹர்ஷிய பத்தி நீ கண்டிப்பா யோசிக்கனும் அபி பெண்பிள்ளைகளுக்குக் கண்டிப்பா அம்மா வேணும்ப்பா.. இப்போ உனக்குப் புரியாது ஹர்ஷி வளர்ந்த பிறகுதான் தெரியும்.."


"தாய் பாசம் இல்லாம வளர வேண்டாம்டா அபி.. நீ இப்போ ம்ம் என்று ஒரு வார்த்தை சொல்லு தங்கமாட்டம் நான் பெண் பார்க்கிறேன்" என்று கூறிக்கொண்டே வந்தவர் அவனை வேதனையுடன் பார்த்து "லதா இப்படி இருப்பான்னு எங்களுக்கு தெரியாது அபி.. முன்பே தெரிஞ்சிருந்தா உன்னை அவளைக் கட்டிக்கச் சொல்லிருக்க மாட்டோம் அபி.." என்று கண்கள் கலங்கக் கூறினார்.


"அய்யோ..தாத்தா அவள் அப்படி இருப்பான்னு உங்களுக்கு எப்படி தெரியும்.. விடுங்க தாத்தா முடிஞ்சத பற்றி பேசினா நமக்குதான் வருத்தம்.." என்று அவருக்கு ஆறுதல் கூறினான்.


"அபி இந்த ஒரு முறை நான் சொல்றதைக் கேளுப்பா.." என்றதும் "தாத்தா புரிஞ்சிக்கோங்க தாத்தா.. எனக்கு கல்யாணம் வேண்டாம்"என்று விடாப்பிடியாகக் கூறினான்.


"அபி உனக்கு மனைவி வேண்டாம் என்று நீ நினைக்கலாம்.. ஆனால் இன்னும் கொஞ்ச நாள் போனா நம்ம ஹர்ஷி உன்கிட்ட அம்மா எங்கேன்னு கேட்பா அப்போ அவளுக்கு என்ன பதில் சொல்ல போற.."


" அவ படிக்கப் போகும் போது கூடப் படிக்கிற பிள்ளைகள் தன் அம்மாக்களுடன் வரும் போது அவளுக்கு ஏக்கமா இருக்காதா.. அது மட்டுமில்லாம அவ எல்லாத்தையும் உன்கிட்ட ஷேர் பண்ணிக்க முடியாது அபி.."


"இன்னும் கொஞ்ச நாட்களில் தேவியும் கல்யாணம் ஆகி வேற வீட்டுக்குப் போயிடுவா.. அப்படி இருக்குறப்ப ஹர்ஷி ரொம்ப தவிச்சு போயிடுவா அபி.. நான் சொல்றதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு அப்படி உன் பிடிவாதம் தான் பெருசுன்னு நினைச்சின்னா நம்ம ஹர்ஷிதான் ஏங்கிப் போவா பார்த்துக்கா.."


"இப்போ நீ தான் முடிவு பண்ணனும் உனக்கு உன் பிடிவாதம் முக்கியமா இல்லை.. உன் பொண்ணு முக்கியமான்னு.. சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன் இனி நீ எடுக்குறதுதான் முடிவு உன்னை யாரும் நாங்க கட்டாயப்படுத்தலை.."


அவனிடம் பேசிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.அவன் மனமோ உனக்கு உன் பொண்ணு ரொம்ப முக்கியம் அபி அதனால கல்யாணம் பண்ணிக்கோ வரப்போறவ ஹர்ஷிக்கு அம்மாவ மட்டும் இருந்தா போதும் என்று கூறியது.


இன்னொரு மனமோ அப்போ உனக்கு பொண்டாட்டி வேண்டாமா என்று கேட்டதும் எனக்கு யாரும் வேண்டாம் எனக்கு என் பொண்ணு மட்டும் போதும் நான் யாரை நம்பியும் இல்லை என்று தன் மனதிடம் திட்ட வட்டமாக கூறினான்.


(விதியோ இப்போ வேணாம் வேணாம்னு சொல்ற வாய் அப்புறம் வேணும் வேணும்னு சொல்லப் போகுது என்று அவனைக் கண்டு சிரித்தது.)


இங்கு உள்ளே வந்த பரமனோ ஒத்துக்குவானா என்று யோசித்துக்கொண்டிருந்தார். அவர் வந்ததை அறிந்து சந்திரா வந்து "என்ன மாமா சொன்னான் ஒத்துக்கிட்டானா.." என்று கேட்டதும் "பயல் பிடிக் கொடுக்காமல் பேசுறான் மா.. பாவம் பழசை நினைச்சுப் புள்ளை ரொம்ப வருத்தப் படுறான்..அந்த பாவி இப்படி பாதியிலே போவான்னு தெரிஞ்சிருந்தா நான் அவளைக் கட்டியே வச்சுருக்க மாட்டேன்.." என்று வருந்தினார்.


"நம்ம ஹர்ஷிய சாக்கா வச்சுத்தான் நம்ம வழிக்குக் கொண்டு வரனும் அதான் பேசிருக்கேன்.. அநேகமா ஓகே சொல்லிடுவான்.." என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அவன் வரும் சத்தம் கேட்கவும் அமைதியானார்.


ஒரு முடிவுடன் உள்ளே சென்றவன் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவித்தான்.பின் கண்களை மூடி ஆழ மூச்சை இழுத்து விட்டு "தாத்தா.." என்று அழைத்தான்.


அவன் வந்ததுமே அவன் தயங்கவும் வேலைய ஆரம்பிச்சுடலாம் என்று நினைத்து அவனையே பார்த்தார். பின் அவன் அழைக்கவும் "என்ன அபி.." என்று ஒன்றும் தெரியாதது போல கேட்டார்.


"தாத்தா எனக்கு ஓகே.." என்று மொட்டையாக கூறினான் "என்னப்பா ஓகே.." என்று ஒன்றும் தெரியாதது போல கேட்டார். அவர் பதிவில் பல்லைக் கடித்தவன் "எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம் தாத்தா.. நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறேன்.." என்று கூறியதும் அனைவரும் சந்தோஷப் பட்டனர்.


உடனே அடுத்தக் குண்டை கண்டிஷன் என்று ஒன்றை போட்டான். "தாத்தா வரப் போற பொண்ணு வர்ஷிக்கு அம்மாவா இருந்தா போதும்.. எனக்கு மனைவி தேவையில்லை நான் ஹர்ஷிக்காக தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.." என்று திட்டவட்டமாகக் கூற அனைவரும் அதிர்ந்தனர்.


சந்திரா ஏதோ சொல்ல வர அவரைக் கண்களால் அடக்கியவர் "சரிப்பா நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சதே பெரிய விஷயம் இப்போவாச்சும் நல்ல முடிவு எடுத்தியே நல்லது அபி.." என்றதும் "பொண்ணு பார்த்துட்டீங்களா இல்லை இனிமே தானா.." என்று கேட்டான்.


"என் நண்பனோட பேத்தி பேரு சந்தியா வயசு 22.." என்றதும் "என்ன தாத்தா இவ்ளோ சின்ன வயசு பொண்ண சொல்றீங்க.." என்றதும் வயசுலாம் என்ன வயசு உன்னைவிட எட்டு வயசுதான் கம்மி அதுமில்லாமல் உன் கூட கல்லூரியில் படிச்சானே அர்ஜுன் உன் நண்பன் அவனோட பொண்டாட்டி தான்.." என்று கூறினார்.


"நம்ம கூட அவனோட இறுதி சடங்குக்கு போனோமேப்பா.." என்று நினைவுப் படுத்தினார். அவனுக்குக் ஏழு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆச்சே என்று யோசித்தவன் அதை அதற்கு மேல் யோசிக்கவில்லை.


"நம்ம பெரிய கோயில்ல என் நண்பனை சந்திச்சேன் அப்போதான் சொன்னான் இந்த மாதிரி பொண்ணு சின்ன வயசுதான் நல்ல குணம்னு சொன்னான்.. அதான் உன்கிட்ட பேசிட்டு சொல்றேன்னு" சொன்னேன். 


"சரி தாத்தா அவங்ககிட்ட சொன்னீங்களா எனக்கு டிவோர்ஸ் ஆயிருச்சுன்னு.." என்று கேட்டதும் திருத்திருவென விழித்தவர் "ம்ம் சொல்லிட்டேன் அபி" என்று பொய்யை உரைத்தார்.


"ம்ம் சரி அப்புறம் இந்த கல்யாணத்துக்கு முன்னாடி நிச்சயம் எதும் வேண்டாம் சிம்பிளா நாம மட்டும் கோவில்ல வச்சுக்கலாம் சரியா தாத்தா" என்று கேட்டான்.


ஊரக்கூட்டி சொந்தபந்தத்தை எல்லாரையும் அழைத்து பண்ணிய கல்யாணமே ஒன்னும் இல்லாம போச்சு என்று நினைத்தவர் "சரி அபி அப்படியே பண்ணிடலாம்.." என்று கூறினார்.


"சரி தாத்தா நான் என் ரூமுக்குப் போறேன்" என்று சொன்னவன் தேவியின் அறைக்கு சென்று தன் மகளைத் தூக்கிக் கொண்டு தன் அறைக்கு சென்றான். படிக்கட்டில் ஏறியவன் பாதி வழி சென்றி திரும்ப நன் தாத்தாவிடம் வந்து "தாத்தா அந்த பொண்ணுக்கு குழந்தை இருக்கா.." என்று கேட்டான்.


"இல்லை அபி" என்றதும் எதையோ யோசித்துக் கொண்டு அறைக்கு சென்றான்.


சேகர் தன் தந்தையிடம் "ஏன்ப்பா குழந்தை இருக்கா.." என்று கேட்டுட்டு போறான் என்று கேட்டதும் "அந்த பெண்ணுக்கு குழந்தை இருந்தா.. எங்க நம்ம ஹர்ஷிய ஒழுங்கா பார்த்துக்க மாட்டாளோ என்ற பயத்துல கேட்டுட்டுப் போறான்…" என்று கூறினார்.


தன் அறையில் அபியும் தன் மகளிடம் "உனக்காக தான்டா அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறேன்.." என்று திரும்ப திரும்ப கூறினான். தன் மகளிடம் கூறினானா இல்லை தனக்கே கூறிக் கொண்டானா என்பது அவனுக்கே வெளிச்சம்.


இங்கு பரமனிடம் சந்திரா "மாமா நீங்க பொய் சொன்னதா தானே சொன்னீங்க அப்புறம் ஏன் அபி கேட்டதுக்கு டிவோர்ஸ் ஆனத சொல்லிட்டேன்னு சொல்றீங்க.." என்றதும் "எல்லாம் காரணமாதான் மா அவள் போனது செத்தப் போனதாவே இருக்கட்டும்.." என்று கூறினர்.


"பிள்ளை பிறந்த பத்து நாட்களிலேயே யாராவது இன்னொரு கல்யாணம் பண்ணுவாங்களா ஆனால் அவள் பண்ணினாளே.. என் பேரனுக்கு என்ன குறை சொத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பெத்தப்புள்ளைய விட்டுட்டுப் போனவளைச் செத்து போய்ட்டான்னு சொல்றதுல தப்பில்லை.."


"என் பேரனை பொறுத்த வரைக்கும் அவள் இறந்து போனவள்தான்.." என்று கூறிவிட்டு தன் நண்பனுக்கு அழைத்தார்.


"ஹலோ சதா.." என்றதும் "சொல்லுடா பரமா.."


"டேய் சதா.. என் பேரன் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்டா நாளைக்கு நாங்க வீட்டுக்கு வரோம் டா நாளைக்கு பேசலாம்டா கல்யாணம் எப்போ எங்கே வச்சுக்கலாம்னு" என்று சந்தோஷத்தில் கூறியதும் "சரிடா பரமா இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு.." என்று மனநிறைவுடன் கூறினார்.


"அப்புறம் பரமா ஒரு விஷயம் அங்கே உங்க வீட்டுக்கிட்ட பக்கத்துல எதாவது ஒரு வீடு பாருடா வாடகைக்கு.. என் பேத்தி நான் பக்கத்துலையே இருக்கனும்னு சொல்றா.." என்றதும் "சதா என்னடா.. வா இனி நீ நம்ம பேத்தி எல்லாரும் ஒரே வீட்டுலதான் இருப்போம் எதுக்கு நீ தனியா இருக்கனும்.." என்று கேட்டார்.


"அதில்லை டா உங்களுக்கு கஷ்டம்..அதுமில்லாம மரியாதையா இருக்காதுடா.. என்னை கட்டாயப் படுத்தாதடா.. "என்றதும் "சரி முதலில் கல்யாணம் முடியட்டும் அப்புறம் பேசிக்கலாம்.." என்று போனை அனைத்தார்.


சதாசிவம் பேசிவிட்டு போனை அணைக்கவும் "யாரு தாத்தா போன்ல.." என்றதும் "என் நண்பன் தான் மா அவனோட பேரன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானாம்.."


" நாளைக்கு நம்ம வீட்டுக்கு வராங்கலாம்.." என்று கூறினார்.


"மாப்பிள்ளை அதுக்குள்ள பார்த்துட்டீங்களா.." என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் அவள் கேட்ட விதமே இவ்வளவு விரைவில் எதிர்ப்பார்க்கவில்லை என்று தெரிந்தது.


வாழ்வு சிறக்கும்….