மோகமுள் தீண்டாதோ தீரனே!!


மோகம்-2:


சக்கரவர்த்தி சுமதி தம்பதியருக்கு இரண்டு ஆண் சிங்கங்கள்..


முதலாமவன் ஆதீரன் சக்கரவர்த்தி, இரண்டாமவன் ஆசீஷ் சக்கரவர்த்தி.


ஆதி சுமதி போல் ‘தான் நினைத்ததை சாதிக்கும் குணம் கொண்டவன், அது போல் பிடிவாதமும் அதிகம், தன் தாய் தந்தையிடம் மட்டுமே அடங்கி செல்பவன் சமுதாயத்தில் யாரும் எட்ட முடியா உயரத்தில் இருக்கும் இளம் தொழிலதிபர்’.


சக்கரவர்த்தி குழுமம் என்றாலே பரவலாக பேசப் படுவது இரண்டு..


ஒன்று அந்த நிறுவனத்தின் பொருட்களின் தரம் இரண்டு அதனை நிர்வகிக்கிக்கும் ஆதீரன் எனும் ஆதி.


இந்த சிறிய வயதிலேயே யாரும் எட்ட முடியா தூரத்திற்கு சென்றவன் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டான்.

வெளிநாட்டில் தன் படிப்பை முடித்தவன் தன் தந்தைக்கு உதவியாக அவர் தொழில்களை தன் கையில் எடுத்து கொண்டு இதுவரை அதனை எந்த வித தொய்வும் இல்லாமல் நடத்தி வருகிறான்.


அவன் தொழில் பக்தியும் அவனின் அர்ப்பணிப்பும் அவன் திறமையும் தான் அவன் முதல் இடத்தில் வகிப்பதற்கு காரணம்.

எப்பொழுதும் வார இறுதியில் ஒரு நாளை தன் குடும்பத்துடன் இருக்க ஒதுக்குபவன் அன்றும் அது போல் அனைவரையும் ஷாப்பிங் அழைத்து கொண்டு வந்திருந்தான்.


அப்பொழுது ஒரு முக்கியமான அழைப்பு வரவே, தன் தாயிடம் “நீங்க தேவையானதை வாங்குங்க ம்மா, இதோ வரேன்..” என்றவன் அவர் பதிலை எதிர்பார்க்காமல் சற்று தள்ளி சென்றான்.


“டேய்.. வெளியே கூட்டி வந்ததும் வந்தான் இந்த போனை வீட்டுலயே வச்சிட்டு வந்துருக்கலாம்.”


அவரால் புலம்ப மட்டும் தான் முடிந்தது. அவனுக்கு இருக்கும் வேலை பளுவை தாண்டி தங்களுக்கு நேரம் ஒதுக்குவதே பெரிய விஷயம் என்று விட்டு மற்றவர்களுடன் சென்று விட்டார்.


ஆசீ அவ்வப்பொழுது வந்து ஆபிஸில் தலை காட்டுவதோடு சரி.. அவனுக்கு விருப்பம் இருந்தால் வருவான் இல்லையென்றால் வீட்டில் இருப்பான்.


சுமதி அடிக்கடி அவனை கடிவது உண்டு.


“ஏன்டா கொஞ்சம் நீயும் ஆபீஸ் போறது தானே? வேலை பாதியா குறையும்ல அவனே எவ்வளவு தான் பார்ப்பான்.”


“ம்மா! விடுங்க.. அவன் ஜாலியா லைப் எஞ்சாய் பண்ணட்டும்.. அவனுக்கு எப்போ தோணுதோ அப்போ வரட்டும்.”


ஆதி தன் தம்பிக்காக தாயிடம் வக்காலத்து வாங்குவது உண்டு.


வீட்டினரை ஷாப்பிங் செய்ய சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு ரெஸ்டாராண்டில் அமர்ந்து போன் பேச கிசு கிசுவென ஒரு குரல்.


“ஹே..! குட்டி பாப்பா.. உனக்கு ஒன்னு, எனக்கு மூணு..

யாருக்கிட்டையும் சொல்ல கூடாது சரியா.. வா சீக்கிரம் சாப்பிடலாம்.”


இவனுக்கு அவள் முகம் தெரியவில்லை ஆனால் திருட்டுத்தனமாக ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறார்கள் என்று மட்டும் புரிந்தது.


அவனுக்கு அது சுவாரஸ்யமாக இருந்ததோ என்னவோ அவள் பேசுவதை தனக்கு வந்த அழைப்பை துண்டித்து விட்டு கவனித்தான்.


“ஏய்.. குட்டி பாப்பா நான் மூணு சாப்பிடுறேன்னு கண்ணு வைக்காத சரியா, உனக்கு குட்டி வயிறு அதான் உனக்கு ஒன்னு.. நான் உன்னை விட பெரிய பாப்பா தானே எனக்கு அதிகமா பசிக்கும்ல அதான் எனக்கு மூணு.”


அனைத்தையும் சாப்பிட்டு முடிக்க “சரி பாப்பா.. நீ உங்க அம்மாகிட்ட போ” என்கவும் தான் 


“அப்போ இது அவங்க குழந்தையா?”என்று யோசித்தான்.


அவன் நினைத்தது போலவே 

அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தன் பெற்றோர்களிடம் சமத்தாக சென்று அமர்ந்து விட்டது அந்த சின்ன சிட்டு.


“ஏய்..!”


இவன் குரல் கேட்டதும்


“ஐயோ..!” என்ற சத்தத்துடன் அங்கிருந்து சிட்டாக பறந்து விட்டாள் அக்குமரி பெண்.


ஓடியதில் அவள் கழுத்தில் இருந்த லாக்கெட் விழுந்ததை அவள் கவனிக்கவில்லை.


அதனை தன் கையில் எடுத்து கொண்டவன் தன் தாயிடம் சென்று “என்னை எப்போ கல்யாணம் செய்ய போறேன்னு கேட்டுக்கிட்டே இருந்தீங்கள்ள?”


“ஆமா கண்ணா.. நீ இப்போ ஹிம்ம்னு சொல்லு பொண்ணு தர அத்தனை பேரும் காத்துட்டு இருக்காங்க. அதுல உனக்கு யாரை பிடிக்குதோ அவளையே கட்டிக்கோ”


அவர்ப்பாட்டிற்கு பேசிக்கொண்டிருக்க அவன் பார்வையோ அவளை கூட்டத்தில் தேடி அலை மோதி கொண்டிருந்தது.


தூரத்தில் தன் பெற்றோரிடம் பேசி கொண்டிருந்தவளை கண்டவன் 


“ம்மா..”


தன் தாயை அழைத்தவனின் குரலில் தான் எத்தனை சந்தோஷம் எத்தனை ஆர்பரிப்பு.


(தட் காணாததை கண்ட மொமண்ட்)


“என்ன கண்ணா?”


“ம்மா.. பொண்ணெல்லாம் பார்க்க வேண்டாம், தோ அங்க நிக்குறாங்களே அதுதான் பொண்ணு அதுதான் அவங்க குடும்பம்..”


தன் மகனை ஆச்சரியமாக பார்த்தவர் தூரத்தில் நின்று கொண்டிருந்த நந்தினி குடும்பத்தை பார்த்து 


“இப்போவே பேசிடலாமா கண்ணா?”


கல்யாணம் என்றாலே அந்த பேச்சை அத்தோடு நிப்பாட்டும் மகன் தானே வந்து பெண் இதுதான் என்று சொல்லும் தன் மகன் மனம் மாறி விடக்கூடாதே என்று அவசரப்பட்டார்.


“ம்மா.. இப்போ வேண்டாம், நாளை போய் வீட்டுல பேசுங்க..

இப்போ இங்க வச்சு பேசினால் சங்கடப்படுவாங்க..”


தன் கையில் இருந்த அவளின் லாக்கெட்டை பத்திரமாக பையில் பதுக்கி வைத்து கொண்டான்.


அதன் பிறகு எல்லாம் படு ஸ்பீடில் நடந்தது.


சுமதியும் தாமதிக்க வில்லை. அவருக்கு மகன் கல்யாணத்திற்கு சம்மதித்ததே போதுமானதாக இருந்தது.

அவர்களை பற்றி விசாரித்து நல்ல குடும்பம் தான் என்கவும் அவருக்கு எந்த வித தடையும் இல்லை.


அவர்களின் செல்வ நிலையை அவர் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை.

தன் மகனின் விருப்பத்தை மட்டுமே பார்த்தார். பணம் தான் தன் பிள்ளை கோடி கோடியாக சம்பாரிக்கிறானே அவர்களின் அந்தஸ்த்தை பார்ப்பவர் அல்ல தன் மகனின் சந்தோஷமே அவருக்கு பிரதானமாக பட்டது.


அடுத்த நாள் ஆதீரன் தவிர்த்து மற்ற மூவரும் நந்தினியின் வீட்டுக்கு சென்றனர்.


நந்தினி குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அப்பொழுது தான் ஹாலில் செய்தித்தாளை வாசித்து கொண்டிருந்தார் கணேசன் 


“சிவா, சீக்கிரம் காபி எடுத்துட்டு வாம்மா. எனக்கு டைம் ஆச்சு கிளம்பனும்.”


“தோ வந்துட்டேங்க.. காபி எடுத்து வந்த சிவகாமி கணேசனிடம் நீட்டியவர் என்னங்க பாப்பாக்கு பீஸ் கட்ட பணம் கேட்டா.”


“பீரோவில் வச்சுட்டேன் சிவா எடுத்து கொடுத்திடு..”


“சரிங்க.. நீங்க போயிட்டு எப்போ வருவீங்க இன்னைக்கு செவ்வாய் கிழமை, கோயிலுக்கு போகணும் ரொம்ப லேட்டாகும்னா போன் பண்ணி சொல்லிடுங்க.

நான் நேரமே கோயிலுக்கு போயிட்டு வந்துடுறேன்.”


தன் மனைவியின் கை பக்குவத்தில் மணக்கும் காபியை மிடறு மிடறாக ரசித்து ருசித்து விழுங்கியவர் “சரி சிவா லேட்டானா போன் போடுறேன்

நந்தினி எங்க?”


“காலேஜிக்கு கிளம்பிட்டு இருக்கா இதோ வந்துடுவா” என்கவும் அப்பொழுது தான் வாசலில் நிழலாடுவதை கண்ட சிவகாமி யாரென்று பார்க்க அவரின் பார்வையை தொடர்ந்து கணேசனும் வாசலை பார்க்க அங்கு நின்றிருந்த மூவரையும் பார்த்து நெற்றி சுருக்கினர்.


சிவகாமி வந்தவர்களை “வாங்க” என்று அழைக்க மூவரும் உள்ளே வந்து அமர்ந்தனர்.


அவர்களை பார்த்ததுமே தெரிந்தது அவர்களின் செல்வ நிலையையும் பகட்டான வாழ்க்கை முறையையும் கண்டு கொண்டனர்.


இருவரின் மனதிலும் யார் இவர்கள் இங்கு ஏன் வந்திருக்கின்றனர் என்று குழப்பமான மனநிலையுடன் வந்தவர்களை எதுவும் பேசாமல் பார்த்து கொண்டிருந்தனர்.


இருவரின் நிலையை உணர்ந்த சுமதி தானே பேச்சை தொடங்கினார். 


தங்களை பற்றி சுருக்கமாக கூறவும் மரியாதை நிமித்தமாக கணேசன் சக்கரவர்த்தியிடம் கைகளை குளுக்கி “நீங்க இவ்ளோ தூரம் வர காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா சார்.?”


“எல்லாம் நல்ல விஷயமா தான் சம்மந்தி பேச வந்துருக்கோம்”.


அவர்கள் சம்மந்தி என்றதுமே ஷாக்க்காகி நிற்க “எங்க பையன் ஆதிக்கு உங்க பொண்ணை கேட்டுத்தான் வந்துருக்கோம்.

நேற்று மாலில் உங்க பொண்ணை பார்த்ததும் எங்க பையனுக்கு பிடுச்சு போச்சு. அதான் சம்மந்தம் பேசி நாள் குறிச்சுட்டு போகலாம்னு வந்துருக்கோம்”.


இன்னும் அதிர்ச்சி மாறாமல் நின்ற கணேசன் சற்று தெளிந்து “உங்க லெவல் வேற, நாங்க வேற. எனக்கிருக்குறது ஒரே பொண்ணு தான்” என்று தயக்கமாக நிறுத்த “தயக்கமே வேண்டாம் சம்மந்தி, நீங்க கவலை பட வேண்டியதே இல்லை. எனக்கு பொண்ணு இல்லை ரெண்டு சிங்க குட்டிங்க தான்.. நந்தினியை என் மகள் போல பார்த்துக்கிறேன்” என்று சுமதி கூறினார்.


“நாங்க காலையில் வீட்டில் உட்கார்ந்து டீவியில் என்ன தலைப்பு செய்தி என்று பார்க்கிற ரகம், நீங்க அந்த தலைப்பு செய்தியாவே டீவியில் வருகிற குடும்பம்.

இது ஒத்து போகுமான்னு தெரியலை..” சற்று உள்ளே போன குரலில் கூறினார்.


“நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்லை சம்மந்தி.. கல்யாணம் பண்ணி நந்தினி வரும்போது நீங்களும் நம்ம வீட்டுக்கு வந்துடுங்க.

நாம எல்லாரும் ஒன்னா இருக்கலாம். நீங்க உங்க பொண்ணு சந்தோஷமா வாழுறதை உங்க கண்ணால பார்க்கலாம்.”


அவர்கள் எதுவும் பேசாமல் இருக்கவும் “என் பையனை பற்றி யோசிக்குறீங்களா? நல்ல பையன் தான் எந்த வித கெட்ட பழக்கமும் இல்லை..

அவனை தாராளமா நம்பலாம் உங்க பொண்ணை கடைசி வரை கண் கலங்காமல் பார்த்துக்குவான்.. நீங்க வேணும்னா நாலு இடத்துல விசாரிச்சுட்டே உங்க பொண்ணை கொடுங்க.

என்னங்க அவங்க தான் அவ்வளவு சொல்றாங்களே நம்ம பொண்ணுக்கு இந்த மாதிரி வாழ்க்கை வாழ கொடுத்து வச்சுருக்கணும்.

அப்பொழுது தான் நந்தினி கிளம்பி கீழே வந்தவள் அவர்களை யாரென்று பார்க்க சிவகாமி மேலோட்டமாக கூற உங்க இஷ்டம் என்று விட்டாள்.

நந்தினி எங்க கிளம்பிட்டம்மா.. சுமதி அவள் தலையை வருடியவாறு கேட்டார்.

காலேஜ் ஆண்ட்டி..

என்னம்மா படிக்குற

எம் பி ஏ கடைசி வருஷம் ஆண்ட்டி

நல்லதும்மா என் பையனை கட்டிக்க இஷ்டமா என்றவாறு ஆதியின் புகைப்படத்தை காட்ட அவன் புகைப்படத்தை பார்த்தவள் அப்பா அம்மாக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான் ஆண்ட்டி.

நல்ல பொண்ணு.. கன்னம் தட்டியவர் அவளுக்கு தான் கொண்டு வந்த பூவை வைத்து விட்டவர் சீக்கிரமே கல்யாணம் வச்சிக்கலாம் சம்மந்தி என்றவர்கள் தங்கள் வீட்டிற்கு கிளம்பினர்.

அவர்க்க்ள் கிளம்பியதும் தன் தம்பி தாமோதரனுக்கு அழைத்த கணேசன் விஷயத்தை கூறநல்ல பையன் தான் அண்ணா தாராளமாக கொடுக்கலாம் என்று தான் சம்மதத்தை கூறினார்.

இந்த விஷயத்தை கேட்டதில் இருந்து ஒரு ஜீவன் கதறி துடித்ததை யாரும் அறியவில்லை.

என்றுமே எதிலும் அவனின் தேர்வு அவள் தான்.

ஆனால் அன்று அவன் தன் தாயிடம் காட்டிய பெண் வேறு..

இவன் பார்த்து ரசித்த பெண் வேறு என்பதை அறிய வாய்ப்பில்லை.

என்ன சொல்ல

விதி விளையாடுகிறது.

அப்பொழுது அவன் பார்த்த அந்த பெண் யார்?

மோகமுள் தீண்டும்…